வாரணாசி மாநகராட்சியில் ‘அங்கிரெசி ஷராப் கி துகான்’ அல்லது சர்காரி ஷராப் என்று சொல்லப்படும் அரசு உரிமம் பெற்ற சுமார் 49 சில்லறை மதுபானக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் வழக்கமாக இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள், பிரபலமான தேசிய மற்றும் பன்னாட்டு பியர் பிராண்டுகளும், சில இறக்குமதி செய்யப்பட்ட ஒயின் வகைகளும் கிடைக்கின்றன. வாரணாசி ஒரு ‘ஆன்மிக மற்றும் கலாச்சார முக்கியத்துவம்’ வாய்ந்த நகரம் என்பதால், தனியாக இயங்கும் சாதாரண பார்கள் குறைவாகவே இருக்கின்றனவாம்! மால் ரோட்டில் உள்ள சூர்யா கைசர் பேலஸில் (Surya Kaiser Palace) அமைந்துள்ள ஒரு முக்கியமான பார், நேர்த்தியான சூழல் மற்றும் பிரத்யேக மதுபான பட்டியலுக்கு பெயர் பெற்ற ஒரு உயர்தர பார் ஆகும். இங்கிருக்கும் மது அருந்தும் இடங்கள் பெரும்பாலும் பாரம்பரிய சொகுசு விடுதிகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களுக்குள்ளேயே பெரும்பாலும் பார்கள் அமைந்துள்ளன. கன்டோன்மென்ட் பகுதி மற்றும் முக்கிய பன்னாட்டு விடுதிகளில், மதுவும், ஒயினும் பரிமாறும் சுமார் 12 உயர்தர பிரீமியம் பார்களும் ஹோட்டல் லவுஞ்ச்களும் அமைந்துள்ளன. தாஜ் கங்கெஸ் மற்றும் பிரிஜ்ராமா பேலஸ் போன்ற முன்னணி ஹோட்டல்களில் பல்வேறு ஒயின் வகைகளை வழங்கும் பிரத்யேக பார்கள் மற்றும் லவுஞ்ச்கள் உள்ளன. இந்த மதுக் கடைகளும், பார்களும், உயர்தர லவுஞ்சுகளும் அதில் பரிமாறப்படும் வெளிநாட்டுச் ‘சரக்கு’களும் ஆன்மிகத்திற்கும், பாரம்பரியத்திற்கும் எந்தக் குறையும் ஏற்படுத்துவதில்லை. எந்தத் தூய்மை, ‘புனித’க் கேடும் இல்லை. ஆனால், இறைச்சி..? அச்சச்சோ.. நகரின் ‘புனித’ம் என்னாவது? அதனால், வாரணாசி மாநகராட்சி எல்லைக்குள் செயல்படும் அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளையும், நகரின் வெளிப்பகுதிக்கு மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சாமியார் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. அங்கு இறைச்சி உண்ணுபவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு தாக்குதல்கள் நடந்துவருகின்றன. உத்தரப் பிரதேசத்தின் பிஷாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்லாக்(52) என்பவர், தனது வீட்டின் குளிர்பதனப் பெட்டியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்தி பரவியதையடுத்தும் அடுத்து கடந்த செப்டம்பர் 28, 2015 இல் அவர் கொலை செய்யப்பட்டார். அக்லாக் வீட்டுக்குள்ளேயே புகுந்து தாக்கிக் கொலை செய்தார்கள் இந்துத்துவக் குண்டர்கள். ஆனால் அவர் வீட்டில் வைத்திருந்தது மாட்டிறைச்சி இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. அது மாட்டிறைச்சியாக இருந்தாலும், அதை உண்ணுவதற்குத் தடையில்லையே சட்டப்படி! அப்படி இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட வேண்டும்? ஏன் கொலை செய்யப்பட வேண்டும்?
இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கை திரும்பப் பெற கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச அரசு முயற்சி செய்தது. ஏனெனில் உ.பி. பா.ஜ.க. அரசைப் பொறுத்த வரையில், ‘நடந்தது குற்றமே அல்ல’ என்ற மதவெறிச் சிந்தனைதான் அதற்கு! பிறகு நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக அம்முயற்சி தடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுக்க பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் உணவுப் பழக்கத்தில் தலையிடுவதும், மாட்டிறைச்சிக் கடைகளைத் தாக்குவதும், பசுமாட்டைக் கடத்துகிறார்கள் என்ற பெயரில் அனைத்து வகை மாடுகளை விற்பனை செய்வோரையும் இடையூறு செய்வதும், தாக்கி மாடுகளை இறக்கிவிட்டு, பின்னர் அவை கவனிப்பாரின்றி செத்துச் சுகாதாரக் கேட்டை உருவாக்குவதும் அன்றாடம் தொடர் கதைகளாகின்றன.
இந்த நிலையில் தான், அனைத்துவகை இறைச்சிக் கடைகளையும் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாகத் தள்ளுவதற்கு முதல் படியை உத்தரப் பிரதேசம் இப்போது தொடங்கியுள்ளது. அதற்கு வாரணாசி மாநகராட்சியைத் தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று சாக்கு சொல்லப்படுகிறது. பா.ஜ.,வைச் சேர்ந்த மேயர் அசோக்குமார் திவாரி தலைமையில் வாரணாசி மாநகராட்சி கூட்டம் கடந்த வாரம் நடந்தது. நகர வளர்ச்சி மற்றும் தூய்மை குறித்து கவுன்சிலர்கள் விவாதித்தார்களாம். அப்போது, நகரின் மய்யப்பகுதியில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, இவற்றை மக்கள் நடமாட்டம் குறைவான நகரின் வெளிப்பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாம்.
இதற்கென முதற்கட்டமாக நகரின் எல்லையை ஒட்டியுள்ள அய்ந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லாத வகையில் இந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஹிமான்ஷு நாக்பால் தெரிவித்துள்ளார். சுகாதாரச் சீர்கேடு என்று சொல்லப்படுவது முழுவதும் பொய்க் காரணமே என்பதை அனைவரும் அறிவர். அது முழுக்கவும் மதவெறி சார்ந்த நோக்கமே என்பது வெளிப்படை.
வாரணாசியில் மட்டும் தான் சுகாதாரச் சீர்கேடா? அங்கு ஓடும் கங்கையில் செய்யப்படும் அட்டூழியங்களும், பிணங்கள் மிதக்கும் சீர்கேடும், நீரின் தன்மையில் இருக்கும் அசுத்தங்களும் உலகப் பிரசித்தம் ஆயிற்றே!
காசி எனப்படும் வாரணாசியின் ‘புனிதத்’திற்கு மதுபானங் களால் கேடில்லையாம்! இறைச்சிகளும், மீனும், எளிய மக்களின் புரதத்திற்கான வாய்ப்புகளும் தான் காரணமாம்! அதனால், தான் மதுக் கடைகளை ஊருக்கு வெளியே அனுப்பாமல், இறைச்சிக் கடைகளை வெளியே அனுப்புகிறார்கள். அப்படி சுத்தமாகப் பராமரிக்கப்படும் நகரமா வாரணாசி? மனிதக் கழிவுகளைக் கையாளும்போது இறைச்சிக் கழிவுகளைக் கையாள முடியாதா? நாளை இறைச்சி உண்ணாதவர்களுக்கு மட்டும் தான் இந்த ஊர், இந்த மாவட்டம், இந்த மாநிலம் என்று படிப்படியாகக் கொண்டு வர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இறைச்சி உண்ணுவோர் ஊருக்கு வெளியே போங்கள் என்று சொல்லும் தீண்டாமையின் விரிவாக்கம்தானே இது! இந்து மதம் என்று சொல்லப்படுவதில் அனைவரும் புலால் மறுப்பாளர்களா? இறைச்சி உண்ணும், இன்னும் சொல்லப் போனால் தங்கள் கடவுளுக்கே இறைச்சி படைக்கும் பழக்கம் உள்ளவர்கள் தானே பெரும்பாலானோர்! அவர்களையெல்லாம் உத்தரப் பிரதேச மாடல் எப்படி கையாளும்? அந்த நடவடிக்கைக்கு இறைச்சி உண்ணும் ஹிந்துக்கள் என்ன கருதுகிறார்கள்? இறைச்சி படைக்கப்படும் கடவுளர்களும் ஊர்விலக்கம் செய்யப்படுவார்களா?
இந்துமதம் என்பது பார்ப்பன நலனுக்கானது மட்டுமே, ஸநாதனத்திற்கானது மட்டுமே என்பதற்கு இன்னொரு சான்று தானே வாரணாசி இந்துத்துவக் கும்பலின் இந்த மாய்மாலம்!
