‘விடுதலை’க்குச் சிறப்பு என்பது, ஆசிரியருக்குப் பெருமை இல்லை; பெரியாருடைய தாக்கம்தான் அது!
மூன்று, அரசியல் சட்டத் திருத்தங்களை செய்த
அரசியலுக்கு அப்பாற்பட்ட ஓர் இயக்கம்!
‘விடுதலை’ வெறும் காகிதம் அல்ல; அறிவு ஆயுதம், புரட்சி ஆயுதம்!
சென்னை, ஜூன் 7 ‘‘ ‘விடுதலை’க்குச் சிறப்பு என்பது, ஆசிரியருக்குப் பெருமை இல்லை. பெரியாருடைய தாக்கம்தான் அது. ‘விடுதலை’ என்றால், அது பெரியார். ஓர் ஆட்சியை ஆதரிக்கிறார் பெரியார் என்றால், அது மக்களுக்காகத்தான். இது பெரியார் மண் என்பது, மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படும். ‘விடுதலை’ வெறும் காகிதம் அல்ல; அறிவு ஆயுதம், புரட்சி ஆயுதம்! ‘விடுதலை’யினால்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு. ‘விடுதலை’யினால்தான் முதல் சட்ட திருத்தம். அதனால்தான் 76 ஆவது சட்ட திருத்தம். மூன்று அரசியல் சட்டத் திருத்தங்களை ஓர் இயக்கம், அரசியலுக்கு அப்பாற்பட்ட ஓர் இயக்கம் அடக்கமாக அதனுடைய தாக்கத்தால் உருவாக்கி இருக்கிறது’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழா!
கடந்த 1.6.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற ‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழா – சுயமரியாதைச் சுடரொளிகள் குணசீலன் – தங்கமணி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஜாதித் தலைவர்களின் பெயர்களை மாவட்டத்திற்கு வைக்கவேண்டும் என்று கோரிக்கை!
ஒரு சம்பவத்தை சொல்கிறேன்; இங்கே கவிஞர் இருந்தார் என்றால், இதைச் சொல்லி இருப்பார். இருந்தாலும் நான் சொல்கிறேன். அந்தக் காலகட்டத்தில், தலைவர்களுடைய பெயர்களையெல்லாம் மாவட்டங்க ளுக்கு வைத்தார்கள். முதலில் பெரியாருக்கு ஆரம்பித்தார்கள். அண்ணாவிற்கு அடுத்து. அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஜாதித் தலைவர்களின் பெயர்களை மாவட்டத்திற்கு வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதையெல்லாம் நீக்கவேண்டும் என்று நாம்தான் எழுதினோம்.
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, மாவட்டங்களுக்கான ஜாதித் தலைவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன!
மாவட்டங்களுக்குத் தலைவர்களின் பெயர் வைப்பதைவிட ஜாதிக்கு ஒரு தலைவரைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். இவர் ஒரு தலைவர், அவர் ஒரு தலைவர் என்று பெயர்களைச் சொன்னார்கள். அந்த நேரத்தில் வேடிக்கையாக ஒன்றை நான் சொன்னேன், பெரம்பலூருக்கு திருவள்ளுவர் மாவட்டம் என்று பெயர் வைத்தார்கள். ஒவ்வொரு தலைவர் பெயரையும் வைத்தார்கள். பிறகு, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்த பிறகு, அவருடைய காலத்தில்தான் அந்தப் பெயர்களையெல்லாம் எடுத்தார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்துக்கு
மட்டும் எந்த ஜாதி சங்கமும்
விளம்பரம் கொடுக்கவில்லை!
எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், ஜாதித் தலைவர்களின் பெயரை மாவட்டத்திற்கு வைத்தால், பத்திரிகைகளில் முழுப்பக்கம் விளம்பரம் கொடுத்தார்கள். ‘‘நன்றி! நன்றி! நன்றி! எங்கள் சமூகத்துத் தலைவர் பெயரை வைத்திருக்கிறீர்கள்’’ என்று. அப்படி பல தலை வர்கள் பெயர் சூட்டப்பட்ட போது, முழு பக்க விளம்பரம் கொடுத்தார்கள். ஆனால், நான் ஏற்கெனவே சொன்ன, பெரம்பலூர் மாவட்டத்துக்கு மட்டும் எந்த ஜாதி சங்கமும் விளம்பரம் கொடுக்கவில்லை.ஏனென்றால், திருவள்ளுவர் பெயரில் இருந்தது அம்மாவட்டம். திருவள்ளுவர் என்ன ஜாதி? என்று முடிவு செய்யவில்லை.
‘பிராமணர்’ சங்கத்தின் தீர்மானம்!
முக்கியமான ஒரு செய்தி, ஜெயலலிதா அம்மை யாரின் தலைமையில் ஆட்சி நடக்கிறது. அப்பொழுது ‘பிராமணர்’ சங்கத்தில் இருந்து ஒரு தீர்மானம் போட்டு அனுப்புகிறார்கள்.
அந்தத் தீர்மானத்தில்,விழுப்புரத்தில்தான் சங்கராச்சாரியார் பிறந்தார். அதனால், விழுப்புரம் மாவட்டம் புதிதாகப் பிரிந்திருப்பதால், சங்கராச்சாரியார் மாவட்டம் என்று பெயர் வைக்கவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
வாழப்பாடி ராமமூர்த்தி!
சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. வெளியில் இப்படி ஒரு தகவல் பரவயிருந்தது. அன்றைக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி. பிறகு அவர் ஒன்றிய இணையமைச்சரானார். அவர் திராவிட மாணவர் கழகத்தில் இருந்து போனவர்தான். அந்த உணர்வு அவருக்கு எப்பொழுதும் உண்டு. அரசியல் ரீதியாகக் காங்கிரஸ்காரராக இருந்தாலும், ஒரு பகுத்தறிவாளராக நம்மிடம் நன்றாகப் பழகக் கூடியவராக இருந்தார். புலவர் இமயவரம்பனும் –அவரும் மிக நெருக்கமானவர்கள், அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் படிக்கும்போது. அப்படிப்பட்ட ஒரு சிறப்பான அவர், ‘‘உங்களிடம் அவசரமாகப் பேச வேண்டும்’’ என்று தொலைப்பேசி அழைப்பு விடுத்தார். அமைச்சராக இருந்த அவர், டில்லியில் இருந்தார்.
‘‘என்னவென்று கேட்டேன்’’ நான்.
‘‘முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட நண்பர் பெயரைச் சொல்லி, அவர் நேரில் வந்து உங்களைச் சந்திப்பார். அந்தத் தகவலை உங்களிடம் சொல்லிவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்’’ என்று சொல்லிவிட்டு, அந்த நண்பர், உங்களைச் சந்திக்க நேரம் கொடுங்கள் என்றார்.
சரி, வரச் சொல்லுங்கள் என்றேன்.
‘‘உங்களைத் தவிர
யாராலும் தடுக்க முடியாது!’’ என்றார்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிள்ளிவளவன் என்பவர்தான் அவர்.
அவர் வந்து என்னை சந்தித்து, அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி சொல்லச் சொன்னார் என்று, ‘‘விழுப்புரம் மாவட்டத்திற்கு சங்கராச்சாரியார் பெயர் வைக்க முதலமைச்சர் அம்மையார் முடிவு செய்திருக்கிறார்கள். அதை நாளை காலையில், சட்டமன்றத்தில் அறிவிக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது. இதைத் தடுக்கவேண்டும் என்றால், உங்களைத் தவிர யாராலும் தடுக்க முடியாது. என்ன செய்யவேண்டும் என்று அவர் முடிவு செய்வார். ஆகவே, முதலில், அவரிடம் இந்தத் தகவலைச் சொல்லுங்கள். இது அதிகாரப்பூர்வமான செய்தி, வதந்தி அல்ல. உறுதியான இடத்திலிருந்து முக்கியமான ஒரு இடத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது என்று சொல்லச் சொன்னார்’’ என்றார்.
உடனே ‘‘இது உண்மையா?’’ என்ற தலைப்பில் அந்தச் செய்தியை எழுதினோம். நாள்தோறும் பத்திரிகை 2 மணிக்குத்தான் வெளிவரும். ஆனால், இதுபோன்ற அறிக்கைகள் எல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவிடுவோம்.
முதலமைச்சருடைய
தனி செயலாளருக்கு
அனுப்பினோம்!
அதே மாதிரிதான், முதலமைச்சருடைய தனி செயலாளருக்கு, ‘‘இது உண்மையா? – ஒரு பார்ப்பன ஆட்சியில், பார்ப்பனத் தலைவருக்குப் பெயர் வைக்கப் போகிறார்கள் என்று பேசப்படுகிறது. இது உண்மையானால் அதற்குரிய விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்று நாசுக்காக எழுதி யிருந்தோம்.
‘விடுதலை’ நாளிதழுக்குப் பகுதி நேர செய்தியாளராக மருதப்பன் என்ற ஒரு தோழர் இருந்தார். தலைமைச் செயலகத்திலிருந்து தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, ‘‘ஆசிரியர் சார், உங்களிடம் முக்கியமான விஷயம் சொல்லவேண்டும் சார்’’ என்றார்.
‘‘என்னய்யா, சொல்லுங்க’’ என்றேன்.
மாவட்டத்திற்கு எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் மாவட்டம் என்று பெயர் மாற்றிவிட்டார்கள்!
‘‘விழுப்புரம் மாவட்டத்திற்கு சங்கராச்சாரியார் பெயர் வைக்கப் போறாங்களாமே? என்று எழுதியிருந்தீர்கள் அல்லவா! அந்த மாவட்டத்திற்கு எஸ்.எஸ்.ராம சாமி படையாச்சியார் மாவட்டம் என்று பெயர் மாற்றிவிட்டார்கள்’’ என்றார்.
‘‘ஓகோ, அப்படியா!’’ என்றேன்.
‘‘அது என்ன சார் திடீர்னு அப்படி மாற்றிவிட்டார்கள். ‘விடுதலை’யில் செய்தியைப் பார்த்தவுடனே, இப்படிச் செய்தார்களா?’’ என்றார் அவர்.
‘‘அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது; என்ன நடந்து என்று தெரியவில்லை’’ என்று சொன்னேன்.
‘விடுதலை’யினால்
விளைந்த பயன்கள் ஏராளம்!
ஏதோ, ஆசிரியர் எழுதினார், ‘விடுதலை’க்குச் சிறப்பு என்பது, ஆசிரியருக்குப் பெருமை இல்லை. பெரியாருடைய தாக்கம்தான் அது. ‘விடுதலை’ என்றால், அது பெரியார். ஓர் ஆட்சியை ஆதரிக்கிறார் பெரியார் என்றால், அது மக்களுக்காகத்தான். இது பெரியார் மண் என்பது, மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படும். ஆகவே, ‘விடுதலை’யினால் விளைந்த பயன்கள் ஏராளம். ‘விடுதலை’யினால்தான் கல்வி; அதே மாதிரி ‘விடுதலை’யினால்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு. ‘விடுதலை’யினால்தான் முதல் சட்ட திருத்தம். அதனால்தான் 76 ஆவது சட்ட திருத்தம். மூன்று அரசியல் சட்டத் திருத்தங்களை ஓர் இயக்கம், அரசியலுக்கு அப்பாற்பட்ட ஓர் இயக்கம் அடக்கமாக அதனுடைய தாக்கத்தால் உருவாக்கி இருக்கிறது.
தந்தை பெரியாருடைய
முன்னோக்கு!
ஆகவே, இப்படி எல்லாம் செய்ததற்கு ஒரு கருவி தான் ‘விடுதலை.’ வெறும் காகிதம் அல்ல; இது அறிவு ஆயுதம், புரட்சி ஆயுதம். அப்பேற்பட்ட இதனை வளர்க்க வேண்டும். ‘விடுதலை’க்காக அல்ல; தந்தை பெரியாருடைய முன்னோக்கு, தொலைநோக்கு எப்படிப்பட்டது என்று சொன்னால், ‘விடுதலை’, நட்டத்தில் நடக்கிறது என்று தெரிந்தே, என்ன செய்தார் என்றால், அதற்காகவே நிதி ஒதுக்கிக் கொடுப்பார். காகிதம் (நியூஸ் பிரிண்ட்) வெளிநாட்டிலிருந்து வரும். வங்கியில் கடன் வாங்கித்தான், அந்த பணத்தைக் கட்டிவிட்டுத்தான், பேப்பர் ரீல்ஸ் எடுக்க வேண்டும்.
அந்த சூழ்நிலையில், அய்யாவிடம் சென்று, நாங்கள் ‘செக்’ (காசோலை) வாங்குவோம். ‘‘எப்படி எப்படியோ, ஒத்த ஒத்த ரூபாயாகச் சேர்க்கிறோம். சரி, எல்லாம் பண்றீங்க, ஒன்னும் திருப்பிக் கொடுக்கிற வழக்கமே கிடையாது. சரி என்ன செய்வது, பேப்பர் நடக்க வேண்டுமே’’ என்பார்.
அதிலும், என்னை பொறுப்புக்குக் கொண்டு வந்தவுடன், எல்லாவற்றிற்கும் கணக்கு எழுதிக் கொடுப்போம். அய்யா, இவ்வளவு செலவு; இவ்வளவு மிச்சம் என்று சொல்லிக் கொடுப்போம்.
கடைசியாக ஒரே ஒரு சுவையான செய்தியைச் சொல்லி முடிக்கிறேன்.
‘‘ஆசிரியர் சார், உங்களைப் பார்க்க வருகிறேன், தயவு செய்து டீ கொடுத்து விடாதீர்கள்’’ என்பார்கள்!
‘விடுதலை’ பத்திரிைக அலுவலகம் இருந்த சிந்தாதரிப்பேட்டையில், அண்ணா உட்கார்ந்த அந்த நாற்காலியில்தான் ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பில் என்னை அமர வைத்தார் அய்யா. அங்கே ஒரே ஒரு டீக்கடை இருக்கும். அந்த டீக்கடையில் ஒரு கிளாசில் டீ கொண்டு வருவார்கள். பல ஆண்டுகளாக அந்த கிளாஸ் பயன்படுத்தப்பட்டதாக இருக்கும். அதுவும் கருப்பாக இருக்கும். அதை பார்த்த உடனே சில நண்பர்கள் வேடிக்கையாக, ‘‘ஆசிரியர் சார், உங்களைப் பார்க்க வருகிறேன், தயவு செய்து டீ கொடுத்து விடாதீர்கள்’’ என்பார்கள். ‘‘நான் வேற கிளாஸ் வைத்திருக்கேன்; பயப்படாதீர்கள்’’ என்று சொல்வேன்.
அய்யா அவர்கள், என்னை அழைத்து வந்து நாற்காலியில் உட்கார வைத்தார். அந்தக் காட்சி இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. நாற்காலியில் உட்கார வைத்தவுடன், அது பழைய நாற்காலி, ஒரு கை இருக்காது; அதிலேதான் அய்யாவே உட்கார்ந்து எழுதுவார். அப்படி ஒரு சிக்கனம்; எளிமை. அண்ணா காலம் ஈரோடு. அதற்குப் பிறகு, குருசாமி, பொன்னம்பலனார் என்று வரிசையாக வந்தது.
சிந்தாதிரிப்பேட்டை ‘விடுதலை’ அலுவலகம் 30 ஆண்டுகளாக, 15 ரூபாயில் தொடங்கி, வாடகைக்கு இருந்த இடம் – அது ஒரு செட்டியாருடையது. அவர் தேவகோட்டைக்காரர்.
பெரிய திடல் மாதிரி இருக்கும்; உள்ள போனீர்கள் என்றால், ஒரே ஒரு அறை இருக்கும். தடுப்புகள் எல்லாம் கிடையாது.
‘‘ஜெர்மன் 420’’ என்ற பெயர் கொண்ட
மெஷினை இறக்கினோம்!
அய்யா காலத்தில், பெரிய பீடர் மெஷினை ஏலம் எடுத்து, வெளிநாட்டு எந்திரத்தை வரவழைத்து, ‘‘ஜெர்மன் 420’’ என்ற பெயர் கொண்ட மெஷினை இறக்கினோம். ஒரு லட்சம் ரூபாய் அந்த மெஷின். அதற்கு அய்யாவிடம் அனுமதி வாங்குவது மிகவும் கஷ்டம். நாங்கள் நேராக அய்யாவிடம் சொன்னால், அதை அனுமதிக்க மாட்டார் என்பதற்காக, ஒரு வங்கி மேலாளர், அய்யாவுக்கு மிகவும் வேண்டியவர். அவரை விட்டுப் பேசச் சொன்னோம். அவருடைய பெயர் நமச்சிவாயம். அவரிடம், அய்யா மிகவும் அன்பாக இருப்பார்.
‘‘அய்யா ‘விடுதலை’ எழுத்து எல்லாம் மிகவும் மோசமாக இருக்கிறது என்றார். ஒரு மெஷின் வாங்கலாம்; அதற்கு நானே, கடன் கொடுக்கிறேன்; அவர்கள் வாங்கட்டும்; மெதுவாகத் திருப்பிக் கொடுங்கள்; வட்டிக் குறைவாகக் கொடுக்கிறேன்’’ என்றார்.
இன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் என்பது சாதாரணம்; அந்தக் காலத்தில், அது மிகப்பெரிய தொகையாகும்!
அய்யா அவர்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில்கூட, அவரிடம் அனுமதி வாங்கினோம். இன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் என்பது சாதாரணம்; அந்தக் காலத்தில், அது மிகப்பெரிய தொகையாகும். அந்த மெஷினை வாங்கி, மிகப்பெரிய அளவுக்கு பூட்டி, ஜெர்மன் இன்ஜினியர் வந்தார்; முதல் முறையாக, அழகாக அச்சடிக்கப்பட்டு ‘விடுதலை’ வெளிவந்தது. முதலமைச்சராக கலைஞர் இருந்தார். தகவல் தொடர்பு அமைச்சராக என்.வி.என். நடராஜன்; சட்ட அமைச்சர் நம்முடைய மாதவன் இருந்தார். இவர்கள் எல்லோரையும் அழைத்து, இதே திடலில்தான், பழைய எம்.ஆர்.இராதா மன்றத்தில்தான் மிகப்பெரிய அளவுக்கு விழா நடைபெற்றது.
(தொடரும்)
