புதுடில்லி, ஜூன் 3– மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வை, வினாத்தாள் கசிவு புகார்களுக்கு மத்தியில் தேசிய தேர்வு முகமை மே 12 அன்று ரத்து செய்தது. இதற்கான மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த நீட் மறு தேர்வை தற்போதுள்ள பேனா, பேப்பர் (தாள்படிவம்) முறைக்கு பதிலாக கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் நடத்த, தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக் கோரி ஆர்ஜேடி எம்.பி. சுதாகர் சிங், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் துருவ் சவுகான் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 1.6.2026 அன்று நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள், “இதேபோன்ற வழக்குகளை நாங்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளோம். நாம் என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். தேர்வு ரத்து செய்யப்பட்டு, அது மீண்டும் நடத்தப்படுகிறது. கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்” என உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்
மக்கள் தொகை கணக்கெடுப்பு!
சென்னை, ஜூன் 3- 2011-க்குப் பிறகு 2021-இல் நடத்தப் பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய பாஜக அரசு நடத்தவில்லை. கரோனா தொற்றைக் காரணம் காட்டி, நான்கு ஆண்டுகளாக மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகளைத் துவங்கவில்லை. இதுதொடர்பான கடும் விமர்சனங்கள் எழுந்தன.
வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இந்தப் பின்னணியில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை, பல்வேறு மாநிலங்களில் மோடி அரசு தற்போது துவங்கியுள்ளது.
புதுச்சேரியில், ஜூன் 1-இல் பணிகள் துவங்கப் பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, வீட்டின் வசதிகள், நிலைகள் குறித்து 33 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு மக்கள் பதிலளிக்க வேண்டும். தவறான தகவலை அளித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
