‘விடுதலை’ தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற,
கழகத் தோழர்கள், ‘விடுதலை’யால் பயன் பெற்ற அன்பர்கள்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்
கழகத் தோழர்கள், ‘விடுதலை’யால் பயன் பெற்ற அன்பர்கள்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

‘விடுதலை’ தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற, கழகத் தோழர்கள், ‘விடுதலை’யால் பயன் பெற்ற அன்பர்கள், அந்த ‘விடுதலை’யை வாங்குவதையும், பரப்புவதையும் தங்களுடைய கடமையாகக் கொள்ளவேண்டும் என்று, அன்போடு, உரிமையோடு சிரந்தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன் என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.
‘விடுதலை’யின் 92 ஆம் ஆண்டு நாளினையொட்டி (1.6.2026) திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் விடுத்துள்ள செய்தி வருமாறு:
92 ஆண்டு ‘விடுதலை’க்கு ஆசிரியராக 64 ஆண்டு வரலாறு படைத்தவர் நம்முடைய தலைவர் தமிழர் தலைவர்!
நேற்று (1.6.2026) ‘விடுதலை’யின் 92 ஆம் ஆண்டாகும். உலக வரலாற்றில், ஒரு பகுத்தறிவு நாளேடு 92 ஆண்டுகள் நடைபெறுகிறது என்றால், அந்தப் பெருமை ‘விடுதலை’க்கு மட்டுமே உண்டு. இன்னொரு கூடுதல் பெருமை என்னவென்றால், 92 ஆண்டு ‘விடுதலை’க்கு ஆசிரியராக 64 ஆண்டு வரலாறு படைத்தவர் நம்முடைய தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
அந்த 64 ஆண்டில், 52 ஆண்டுகள் அவருடன் பயணிக்கக்கூடிய ஓர் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது வாழ்நாளில் என்றென்றைக்கும் மறக்க முடியாத, பெருமைக்குரிய ஒன்றாகும்.
‘விடுதலை’ என்ற சொல், ஆழமான பொருளைக் கொண்டது. அடிப்படையில், சமுதாய விடுதலை; இன இழிவிலிருந்து விடுதலை; பெண்ணடிமைத்தனத்திலிருந்து விடுதலை; ஆதிக்கச் சக்திகளின் எதிர்ப்பை வெற்றி பெற்ற விடுதலை என்பது, ‘விடுதலை’ ஏட்டிற்கே உள்ள தனிச் சிறப்பாகும்.
தந்தை பெரியாரின் போர் ஆயுதமாக அது செயலாற்றி வருகிறது. இன்றைக்கு ‘விடுதலை’ 92 ஆம் ஆண்டில் நடைபோடுகிறது என்றால், அதற்காக தமிழுலகம் நன்றி பாராட்டவேண்டியது நமது தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத்தான்.
வரலாற்றிலே என்றைக்கும் நினைவு கூரவேண்டும்!
ஒரு குறிப்பிட்ட காலத்தில், ‘விடுதலை’யை நிறுத்தக் கூடிய ஒரு நிலை ஏற்பட்ட நேரத்தில், (1962 இல்) தந்தை பெரியார் அவர்கள் ‘விடுதலை’ நாளேடு என்ற நடப்பிலிருந்து நிறுத்தி, வார ஏடாக நடத்தலாம் என்று முடிவு செய்த நேரத்தில், நம்முடைய ஆசிரியர் அவர்கள், அந்தப் பொறுப்பை ஏற்ற காரணத்தினால், இன்றைக்கு ‘விடுதலை’ வீறுநடை போட்டு நடந்துகொண்டிருக்கின்றது. இன்றைக்கு ‘விடுதலை’ நாளேடாக இருப்பதற்குக் காரணம், ஆசிரியர் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றதுதான் என்பதை வரலாற்றிலே என்றைக்கும் நினைவு கூரவேண்டும்.
இந்த ‘விடுதலை’யால் ஏற்பட்டிருக்கின்ற பலன் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்றாகும்.
எப்படி, தந்தை பெரியார் அவர்கள் அரசியலுக்குச் செல்லாமல், ஆட்சி அதிகாரத்தைக் கைக்கொள்ளாமல், அதே நேரத்தில், பதவி அரசியலுக்கு வெளியிலிருந்து, ஆட்சிகளை நடத்திச் சென்றாரோ, அதேபோல, ‘விடுதலை’ ஒரு சமூகப் புரட்சி ஏடாக இருந்து, நாட்டை வழிநடத்தி அழைத்துச் சென்றிருக்கிறது.
ஆட்சி, எந்தத் திசையில் பயணிக்கவேண்டும் என்று வழிகாட்டும் இடத்திலே, ‘விடுதலை’ இருந்திருக்கின்றது என்பதையும் மறுக்க முடியாது.
‘விடுதலை’யில் வெளிவரும் அறிக்கை
எந்தத் திசையைக் காட்டுகிறது?
எந்தத் திசையைக் காட்டுகிறது?
எந்த ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ‘விடுதலை’ காட்டும் பாதை என்ன? ‘விடுதலை’யினுடைய தலையங்கம் என்ன சொல்லுகிறது? ‘விடுதலை’யில் வெளிவரும் அறிக்கை எந்தத் திசையைக் காட்டுகிறது? என்பதை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டிய அவசியம் கடந்த காலத்தில் இருந்திருக்கின்றது.
‘ஆசிரியர்’ என்று சொன்னால்…
‘ஆசிரியர்’ என்று சொன்னால், அது ‘விடுதலை’யின் ஆசிரியரை மட்டும் குறிக்கின்றது என்பது சாதாரணமானதல்ல. ஆம்! அவர், தமிழ்நாட்டிற்கு ஆசிரியராக இருந்து, சரியான பாடங்களைக் கற்பித்துக் கொண்டு வந்திருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
அதிகம் சொல்லத் தேவையில்லை!
‘விடுதலை’யின் பெட்டிச் செய்தி
செய்த மாற்றம்!
செய்த மாற்றம்!
‘‘இது உண்மையா?’’ என்ற ஒரு பெட்டிச் செய்தி ‘விடுதலை’யில் வெளிவருமேயானால், அந்தச் செய்தி அரசாங்கத்தினுடைய கதவுகளைத் தட்டும்.
எடுத்துக்காட்டாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரசுவதி பெயர் சூட்டப்படும் என்ற செய்தி, நம்முடைய தலைவர் ஆசிரியருடைய காதில் விழுந்த நேரத்தில், உடனடியாக, ‘‘இது உண்மையா?’’ என்று ‘விடுதலை’யில் ஒரு பெட்டிச் செய்தியை வெளியிட்டார்.
அன்றைய காலகட்டத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா இருந்தார். மறுநாள் சட்டமன்றத்தில், அப்படி ஓர் அறிவிப்பு வரவிருக்கிறது என்ற நிலையில், ‘விடுதலை’யில், ‘‘இது உண்மையா?’’ என்று வெளியிட்ட அந்தப் பெட்டிச் செய்தி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுடைய கவனத்திற்குச் சென்றபோது, அந்த முடிவைக் கைவிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு ராமசாமி படையாட்சியார் மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
இப்படி, எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம்.
‘‘தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை’’’ என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
தமிழர்கள் ‘விடுதலை’யினுடைய பலனை அனுபவித்தார்களே தவிர, உண்மையிலேயே ஒவ்வொரு வீட்டிலும் ‘விடுதலை’ இடம்பெறுகிறதா? என்று கேட்டால், ‘இல்லை என்பது’ வருத்தத்திற்குரிய செய்திதான்.
ஆனாலும், எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், கொள்கை ஒன்றே, லட்சியம் ஒன்றே, ‘அதை நோக்கு’ என்ற முறையிலே, அது வீறுநடை போட்டு வந்த காலத்தில், எவ்வளவோ கஷ்டங்களும், பொருளாதார இழப்புகள் இருந்த நிலையிலும், தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட அந்த ‘விடுதலை’ தன்னுடைய லட்சியப் பாதையில் சென்று கொண்டே இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
நெருக்கடி காலத்தில் செய்தித் தாள்களுக்குக் கொண்டு வரப்பட்ட தணிக்கை முறை!
இந்த நேரத்தில், மற்றொரு செய்தி, 1976 ஆம் ஆண்டு – நெருக்கடி காலகட்டத்தில், தணிக்கை முறை செய்தித்தாள்களுக்குக் கொண்டு வரப்பட்டது. எல்லா ஏடுகளுக்கும் கிடையாது, ‘விடுதலை’, ‘முரசொலி’, ‘தீக்கதிர்’ ஆகிய ஏடுகளுக்கு மட்டும் தணிக்கை முறை இருந்தது.
தணிக்கை அதிகாரிகளாக மூன்று பார்ப்பனர்கள் இருந்தார்கள். ‘நண்டைச் சுட்டு, நரியைக் காவல் வைப்பதுபோல’ ஒவ்வொரு நாளும், ‘விடுதலை’யை அச்சில் ஏற்றுவதற்கு முன்பாக, அவர்களுடைய பார்வைக்குச் சென்று, அவர்கள் எதைப் போடச் சொல்கிறார்களோ, அதை மட்டுமே போடவேண்டும். எந்தளவிற்குப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இருந்தது என்றால், ‘விடுதலை’யில் ‘தந்தை பெரியார் அவர்கள்’ என்று போடக்கூடாது என்று சொல்லுகின்ற அளவிற்குப் பார்ப்பனர்கள் கைகளில் ‘விடுதலை’ சிக்கியது.
அந்த நேரத்தில், அன்னை மணியம்மையார் அவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும்கூட, அந்தத் தணிக்கை விதிமுறைகளையெல்லாம் எதிர்கொண்டு, ‘விடுதலை’ நாள்தோறும் வெளிவந்ததை இந்த நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும்.
கரோனா தொற்று காலகட்டத்தில்கூட, தடையில்லாமல் அச்சிடப்பட்டு ‘விடுதலை’ வெளிவந்தது!
அதேபோல, ‘விடுதலை’ என்பது ஒவ்வொரு தமிழருடைய இல்லத்தையும் சென்றடையவேண்டிய முயற்சியில் நாம் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கின்றோம். கரோனா தொற்று காலகட்டத்தில் பல ஏடுகள் நடத்தப்பட முடியாத ஒரு சூழ்நிலையில், அலுவலகங்கள் இயங்க முடியாத சூழலில் கூட, ஆசிரியர் முதல் வடிவமைப்பாளர்கள் வரை செய்திப் பிரிவினர் அனைவரையும் அவரவரது வீடுகளிலிருந்தே இயங்கச் செய்து, அச்சுப் பணியாளர்களை மட்டும் (பாதுகாப்பாக) நேரில் வரச் செய்து ஒருநாள் கூட இடைவெளி இன்றி அச்சு இதழாக நாள்தோறும் அச்சிடப்பட்டு ‘விடுதலை’யை தடையில்லாமல் நடத்திய பெருமை நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உண்டு என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
‘விடுதலை’ ஒவ்வொருவருடைய இல்லத்தையும் சென்றடைய வேண்டும். தமிழர்கள் நன்றி உணர்ச்சி உள்ளவர்கள் என்பது உண்மையானால், ‘விடுதலை’ வாங்குவதை தம் கடமையாகக் கொள்ளவேண்டும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாத ஒரு சூழ்நிலைக் கைதியாக நான் ஆக்கப்பட்டு இருக்கின்றேன்.
கடந்த ஒரு வாரமாக, அதே சிந்தனைச் சுழலில் சிக்கிக் கொண்டிருக்கின்றேன். ஆனாலும், ‘விடுதலை’, யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழர்களுடைய விடுதலைக்காகப் பாடுபடும் என்பதில் எந்தவிதமான அய்யப்பாட்டிற்கும் இடமில்லை.
ஓர் அன்பான வேண்டுகோள்!
கழகத் தோழர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
கழக உறுப்பினர் என்றால், அவர் கண்டிப்பாக ‘விடுதலை’ வாங்குவதும் அதற்குள் அடங்கும். இது மிகமிக முக்கியமான ஒன்றாகும். அடுத்த தலைமுறைக்கும் ‘விடுதலை’யைக் கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பு, கழகத் தோழர்களான கருஞ்சட்டைத் தோழர்களுக்கு உண்டு என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இந்த ‘விடுதலை’ அய்யா அவர்கள் மறைந்த நேரத்தில், 4 பக்கங்களாக இருந்தது; தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய காலத்தில் 8 பக்கங்களாக வண்ணத்தில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. சென்னையில் மட்டும் வெளிவந்து கொண்டிருந்த ‘விடுதலை’, திருச்சி பதிப்பாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
‘விடுதலை’யை தொடர்ந்து நடத்துவது என்பது ஒரு சாதாரண செயல் அல்ல; ஓர் அரிதான செயலாகும்.
தங்களுடைய கடமையாகக் கொள்ளவேண்டும்
அந்த ‘விடுதலை’ தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற, கழகத் தோழர்கள், ‘விடுதலை’யால் பயன் பெற்ற அன்பர்கள், அந்த ‘விடுதலை’யை வாங்குவதையும், பரப்புவதையும் தங்களுடைய கடமையாகக் கொள்ளவேண்டும் என்று, அன்போடு, உரிமையோடு சிரந்தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
