விடுதலை ஏடு தொடக்க விழாவில்
செட்டி நாட்டு குமாரராஜா அவர்கள்
தலைமை வகித்துப் பேசியதாவது:
பெரியார் அவர்களே! இங்கு கூடியுள்ள கனவான்களே!
‘விடுதலை’ப் பத்திரிகை சென்னையில் நடத்தப் போகும் ஆரம்ப விழாவுக்குத் தலைமை வகிக்கும் பணியை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
இந்த ‘விடுதலை’ பத்திரிகையானது பார்ப்பனரல்லாதாராகிய இந்த நாட்டு மக்களுடைய முன்னேற்றத்திற்கு உழைத்து வரும் பத்திரிகையாகும். பார்ப்பனரல்லாதார் மக்கள் முன்னேற்றத்திற்கென்றே உழைக்கும் ஜஸ்டிஸ் இயக்கத்திற்கு உயிர் நாடியாக இருக்கும் பத்திரிகை யாகும்.
இந்த இயக்கமானது நான் சிறு பையனாக இருக்கும் போது தோன்றியது. அது முதலே இந்த இயக்கம் நன்றாய் வளர்ந்தோங்கி வெற்றிபெற வேண்டுமென்பது எனது ஆசை. பத்திரிகை இல்லாமல் எந்த இயக்கமும் நடைபெறாது. ஆனால், நமது இயக்கத்து மக்கள் பத்திரிகைக்குப் போதிய ஆதரவு கொடுப்பதில்லை. நம் இயக்கம் தோன்றி 26 வருஷம் ஆகியும் பத்திரிகை பலம் நமக்கு போதிய அளவு இல்லை. பத்திரிகையில் சேதி பார்க்க ஆசைப்படுகிற மக்கள் பத்திரிகை எப்படி நடக்கும், அதற்கு நம்மால் என்ன உதவி செய்யவேண்டியது கடமை என்பதையும் கவனிக்க வேண்டும்.
‘விடுதலை’ பத்திரிகையை ஈரோட்டில் ஆரம்பிக்க வேண்டும் என்று நான்தான் பெரியார் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அது ஈரோட்டில் இருந்து நடந்து வந்திருந்தபோதிலும் அது ஆற்றி இருக்கும் தொண்டு கொஞ்ச நஞ்சமல்ல.
ஹிந்தி
காங்கிரஸ் மந்திரிகள் தமிழர்களுக்கு ஹிந்தியை கட்டாயமாய் புகுத்தியதில் சட்டசபையில் நான் எதிர்த் தேன் என்றாலும், அவ்வெதிர்ப்பு இவ்வளவு பலம் பெற்றதற்கு பெரியாரும் – விடுதலையும்தான் காரண மாகும். விடுதலை இல்லாமல் இருந்திருந்தால் ஹிந்தி எதிர்ப்பாளர் காரணமும் காங்கிரஸ்காரர்களின் தன்மையும் இவ்வளவு தூரம் வெளியாகி இருக்காது.
ஹிந்தி எதிர்ப்பில் பெரியார் எடுத்துக்கொண்ட முயற்சி அளவிட்டுக் கூற முடியாது. அவர்கள் மற்றும் நம் இயக்கத்திற்காக படுகிற பிரயாசையை யாரால் அளவிட்டுச் சொல்ல முடியும். அதற்காக அவருக்கு நாம் செய்யும் உபகாரம் என்ன? அவர் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்? நாம் நன்றாய் வாழ்ந்தால் அதுவே போதும். அதற்காக அதாவது நமது நலத்திற்காக நாம் கட்டுப்பாடாய் இருந்து மற்றவர்களைப்போல் ஒற்றுமையாய் வேலைசெய்ய வேண்டும்.
விடுதலையை ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். மற்றவர்களையும் படிக்கும்படிச் செய்ய வேண்டும். விடுதலை வாங்கிப் படிக்காத தமிழர்களே இல்லை என்பதாக இருக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்கள் 10, 12 இருக்கிறது. அங்கு ஒவ்வொன்றிலும் ஆயிரம். இரண்டாயிரம் பிரதிகள் போக வேண்டும் என்றும், மற்றும் யுத்த சம்பந்தமாக பேசுகையில் யுத்தத்திற்கு நாம் பார்ப்பனரல்லாதார் எவ்வித நிபந்தனையுமில்லாமல் உதவி வந்திருக்கிறோம் என்றும், காங்கிரஸ் யுத்த எதிர்ப்புப் பேசுவது சரியல்ல என்றும், அதற்கு மதிப்பு இல்லை என்றும் பேசினார்.
– விடுதலை 75 (பவளவிழா மலர்)
