காங்கிரஸ் இல்லாத ‘இந்தியா’ கூட்டணி மம்தா தலைமையில் புதிய வியூகம்!

புதுடில்லி, மே 26 தேர்தல் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த திருப்பங்களால், அகில இந்திய அளவில் பா.ஜ.க-வை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றிவிட்டு, புதிய வியூகத்துடன் ஜூன் மாதம் மம்தா  தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தவுள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசியல் திருப்பமும் கூட்டணியில் விரிசலும்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையில் ஒன்றிணைந்து போட்டியிட்ட காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தது. காங்கிரசின் இந்தத் திடீர் முடிவு திமுக மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து தங்களுக்குத் தனித்தனி இருக்கைகளை ஒதுக்கக் கோரி திமுக கடிதம் எழுதியுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தால், அதில் திமுக தொடர்வது கடினம் என்ற சூழலே தற்போது நிலவுகிறது.

மம்தா புதிய தலைமை முயற்சி

மேற்குவங்கத்தில் பா.ஜ.க-வை வீழ்த்த ‘இந்தியா’ கூட்டணி மீண்டும் பலப்பட வேண்டும் என்றும், அதற்குத் தான் முன்நின்று தலைமை தாங்கத் தயாராக இருப்பதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா அறிவித்துள்ளார். ஜூன் முதல் வாரத்தில் கூட்டணிக் கூட்டத்தைக் கூட்டி, ஒத்த கருத்துடைய பிற கட்சிகளையும் அழைக்க அவர் திட்டமிட்டுள்ளார். இருப்பினும், இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் இல்லை என்று காங்கிரசின் ஊடகப் பிரிவும், சமாஜ்வாடி கட்சியும் தெரிவித்துள்ளன.

‘காங்கிரஸ் இல்லாத கூட்டணி’ –
2027 தேர்தல் வியூகம்

2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, 2027ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங் களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தல்களில் காங்கிரசை கழற்றிவிட்டு, திரிணாமூல், திமுக, ஆம் ஆத்மி, பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மட்டும் இணைந்து ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா கூட்டணி’யாகப் போட்டியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், காங்கிரசைத் தவிர்ப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘இந்தியா’ கூட்டணிக் குத் தலைமை ஏற்கலாம் என்ற மாற்றுக்கருத்தும் டில்லி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

இடதுசாரிகளின் நிலைப்பாடு மற்றும் காங்கிரசிற்கு கண்டனம்

காங்கிரசை வெளியேற்றிவிட்டு மம்தா தலைமை தாங்கினால் இடதுசாரிகள் அதை ஏற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே, டில்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, காங்கிரசின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தார். “பாஜ-ஆர்எஸ்எஸ் கூட்டணியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியம். ஆனால், மாநில மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மீதான காங்கிரசின் அணுகுமுறை அதற்கு உகந்ததாக இல்லை. கேரளா போன்ற மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி மீது காங்கிரஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கிறது. தேர்தல் தேவைகளுக்காக காங்கிரஸ் ஒற்றுமையைத் தவறவிடுகிறது,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும் திரிணாமூல் காங்கிரசும் ஒன்று சேரும் சாத்தியம் இல்லை என்றும், அதே நேரம் திமுக உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தலைவர்களின் வெவ்வேறு கருத்துக்களாலும், மாநில அரசியல் முரண்பாடுகளாலும் ‘இந்தியா’ கூட்டணி தற்போது கடுமையான குழப்ப நிலையில் நீடித்து வருகிறது. ஜூன் மாதம் நடைபெறவுள்ள கூட்டமே இக் கூட்டணியின் அடுத்தகட்ட எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *