தெகுசிகல்பா, மே 23- மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஹோண்டுராஸ். இந்நாட்டில் போதைப்பொருள் கும்பல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல், வன்முறை சம்பவங்களும் ஹோண்டுராஸ் நாட்டில் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், ஹோண்டுராசின் டுரிஜிலோ நகரில் உள்ள தோட்டத்தில் நேற்று (22.5.2026) நடந்த துப்பாக்கி சூட்டில் தோட்ட தொழிலாளர்கள் 19 பேர் உயிரிழந்தனர். அதேபோல், அந்நாட்டின் கொர்டஸ் மாகாணம் ஒமியா நகரில் காவல்துறையினர் வாகனம் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் 6 காவல்துறையினர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஹோண்டுராசில் நேற்று ஒரேநாளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உக்ரைனுக்கு ரூ.1032 கோடி ஏவுகணைகள் விற்பனை: அமெரிக்க அரசு ஒப்புதல்
கீவ், மே 24- உக்ரைனுக்கு ரூ.1032 கோடி மதிப்புள்ள ஹாக் ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான தொடர் சண்டையில், ரஷ்யாவின் தொலை தூர இலக்குகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை தொடங்கி உள்ளது இதற்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை உக்ரைன் பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனின் வான் பாதுகாப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் அந்த நாட்டுக்கு ரூ.1032 கோடியிலான ஹாக் ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு டிரம்ப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஹாக் அமைப்பு என்பது, ஏவுகணையின் வகையைப் பொறுத்து 40 முதல் 50 கிலோமீட்டர் வரையிலான தூரத்தில் விமானங்கள், டிரோன்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு வான் பாதுகாப்பு அமைப்பாகும். ரஷ்யத் தாக்குதலை சமாளிக்க, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உக்ரைன் ஏராளமான ஆயுதங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் சோதனை வெற்றி
வாசிங்டன், மே 24- அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப ‘ஸ்டார்ஷிப்’ என்ற பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது. 40 அடுக்கு மாடி உயரமுள்ள இந்த அதிநவீன ராக்கெட்டின் 12ஆவது சோதனை ஓட்டம், டெக்சாஸ் மாகாணத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
விண்ணில் பாய்ந்த இந்த ராக்கெட், திட்டமிட்டபடி போலி செயற்கைக்கோள் களை விண்வெளியில் நிலைநிறுத்தியது. பின்னர், கடலில் விழுந்து தீப்பந்தாக வெடித்துச் சிதறியது. இந்த வெற்றிக்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்துள்ளார். முன்னதாக நடந்த பல சோதனைகள் நடுவானிலேயே வெடித்துச் சிதறி தோல்வியில் முடிந்தன. இதையடுத்து என்ஜின்களை மேம்படுத்தி இம்முறை வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மய்யம், வருகிற 2028ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டைத்தான் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. சீனா 2030-க்குள் நிலவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக எலான் மஸ்க் இந்த சோதனையை நிகழ்த்தியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் 60 நாள்கள்
விசா இன்றி தங்கும் சலுகை ரத்து
விசா இன்றி தங்கும் சலுகை ரத்து

பேங்காக், மே 24- தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சிகாக, இந்தியா உள்பட சுமார் 93 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 60 நாள்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்குவதற்கான சலுகை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவர தாய்லாந்து அரசு வழங்கிய இந்த சலுகை தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இனி சுற்றுலா பயணிகள் தாய்லாந்தில் 30 நாட்கள் மட்டுமே தங்க அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தாய்லாந்து செல்வதற்காக திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
