லக்னோ, மே 23- உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங் களுக்கு வானிலை ஆய்வு மய்யம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்மூலம், வெப்ப அலை சூழல் இரண்டு நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் என அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக லக்னோ வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உத்தரப்பிரதேசத்தின் பண்டா, சித்ரகூட், கவுசாம்பி, பிரயாக்ராஜ், ஃபதேபூர், பிரதாப்கர், மிர்சாபூர், வாரணாசி, பதோஹி, ஜான்பூர் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வெப்ப அலை வீசக்கூடும். கடுமையான முதல் மிகக் கடுமையான வெப்ப அலை நிலவும். இது பொது சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாக்பத், மீரட், காஜியாபாத், ஹப்பூர், கவுதம் புத்த நகர், பலந்த்ஷஹர், அலிகார், மதுரா, ஆக்ரா உள்ளிட்ட 34 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச் சரிக்கையை விடுத்துள்ள லக்னோ வானிலை ஆய்வு மய்யம், தேவரியா, லக்கிம்பூர் கேரி, சீதா பூர், ஹர்தோய், ஃபரூக்காபாத், லக்னோ, பாரபங்கி, அயோத்தி உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத் துள்ளது.
இதனிடையே, வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உறுதிசெய்யவும், அனைத்துத் துறைகளையும் முழு எச்சரிக் கையுடன் இருக்குமாறும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகங்கள், மருத்துவமனைகள், மின்சாரம், நிவாரணத் துறைகள் போதுமான அளவு மருந்துகள், படுக்கைகள், 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவைகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதோடு, தீ விபத்துகளுக்கு எதிரான தயார் நிலையை உறுதி செய்யவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதிகரிக்கும் கதிர்வீச்சு வெப்பம், வெப்பமான, வறண்ட மேற்குக் காற்று ஆகியவையே தற்போது நிலவும் கடுமையான வானிலைக்குக் காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
