புதுடில்லி, மே 19 தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி 2025 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார்.
நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில் செய்திகள் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற நிறுவனப் பகுதிகளில் இருந்து அனைத்த் தெரு நாய்களையும் அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி நாய் பிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று (மே 19) உச்சநீதிமன்றம் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவுகள் வருமாறு:
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு விலங்கு களுக்கான கருத்தடை மய்யம் செயல்படுத்த வேண்டும். மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, விலங்குகளுக்கான கருத்தடை மய்யங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்பது, நாய்க்கடி அச்சுறுத்தலின்றி சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை உள்ளடக்கியது; இந்த விஷயத்தில் அரசு ஒரு செயலற்ற பார்வையாளராக இருக்க முடியாது. தெருநாய்கள் விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க வேண்டும்.
மனித உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆக்ரோஷமாக இருக்கும் தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்ப டுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
