‘ஸநாதன தர்மம்’ விவகாரத்தில் உதயநிதிக்கு ஆதரவாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு!

சென்னை, மே 15 ஸநாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளை ஆமோதித்துள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. “உதயநிதி ஸ்டாலின் ஸநாதன தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதில் உள்ள ஜாதி முறை மற்றும் பெண்களை அடிமைப்படுத்தும் முறை ஆகியவற்றைத்தான் எதிர்க்கிறார். நாங்களும் அதையேதான் எதிர்க்கிறோம்.” என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஸநாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “மக்களைப் பிரிக்கும் ஸநாதனத்தை டெங்கு, கொசுவைப்போல ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்ச ராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையை உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், புதிய அரசுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு, “வெல்க தமிழ்.. வாழ்க தமிழ்நாடு.. முக்கியமாக, மக்களைப் பிரிக்கும் ஸநாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உதயநிதியின் பேச்சு வட மாநிலங்களிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், மதுரை மத்திய தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, “ஸநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் களத்தில் இறங்கியிருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், த.வெ.க. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் ஜாதி முறைக்கும், மதக் கோட்பாடுகளுக்கும் எதிரானது. நாங்கள் எப்போதும் அனைவரையும் சமமாகவே நடத்துகிறோம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மத நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், ஒரு பொறுப்பில் உள்ள நபராக, ஒரு அமைச்சராக, ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும். அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கற்றுக்கொடுப்பது.

இந்தச் சமுதாயப் படிநிலை (Hierarchy system) மற்றும் ஜாதி முறைக்கு நாங்கள் முற்றிலும் எதிரானவர்கள். ஒவ்வொரு மதத்திற்கும் வெவ்வேறு நம்பிக்கைகள் இருக்கலாம். அறிவியல் என்பது வேறு, மக்களின் நம்பிக்கை என்பது வேறு என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

உதயநிதி ஸ்டாலின் ஸநாதன தர்மத்தைப் பற்றிப் பேசும்போது, அதில் உள்ள சாதி முறை மற்றும் பெண்களை அடிமைப்படுத்தும் முறை ஆகியவற்றைத்தான் எதிர்க்கிறார். நாங்களும் அதையேதான் எதிர்க்கிறோம். நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்துத்துவா என்ற பெயரில் ஒரு மதத்தைத் திணிப்பதையும், மேலாதிக்கத்தையும் எதிர்க்கிறோம்.

தமிழக வெற்றிக் கழகமும், எங்கள் தலைவரும் அனைவரையும் சமமாக நடத்தும் கொள்கையையே கொண்டுள்ளோம். இதில் எங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய கொள்கை வேறுபாடு கிடையாது. தமிழ்நாடு எப்போதும் சமத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது.

வட இந்தியாவில் ஸநாதனம் என்றால் அது இந்து மதத்தைக் குறிப்பதாக ஒரு புரிதல் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஸநாதனம் என்பது சமத்துவமின்மையை குறிக்கிறது. இந்தப் புரிதல் வேறுபாட்டால்தான் சர்ச்சைகள் எழுகின்றன. நாங்கள் எப்போதும் சமத்துவமின்மைக்கு எதிரானவர்கள், எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல.” எனத் தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *