நாகர்கோவில், மே 4- தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை பன்னாட்டு அளவிற்கு உயர்த்தும் நோக்கில், வரும் 2026-2027 கல்வியாண்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தத் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதிய பாடத் திட்டம்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) இதற்கான ஆரம்பகட்டப் பணிகளை ஏற்கெனவே முடித்துள்ளது. தற்போதைய மாநிலப் பாடத்திட்டத்தைச் பன்னாட்டு தரம் மற்றும் பிற மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களுடன் ஒப்பிட்டு, தேவையான மாற்றங்கள் குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட இந்தப் புதிய பாடத்திட்டங்களை ஆய்வு செய்து இறுதி செய்வதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்சிஇஆர்டி அலுவலகத்தில் இந்த மாதம் இரண்டு கட்டங்களாகச் சிறப்புப் பணிமனைகள் நடைபெற உள்ளன.
முதல் கட்டமாக, மே 11 முதல் மே 15 வரையும், இரண்டாம் கட்டமாக மே 18 முதல் மே 22 வரையும் நடைபெறுகிறது. இதில், 100-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்தப் பணிமனையில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி விரிவுரையாளர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன (DIET) முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் என 100-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் கலந்துகொள்கின்றனர்.
கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், பொருளியல், வணிகவியல் மற்றும் அரசியல் அறிவியல் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பாடங்களுக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, புதிய பாடப்பகுதிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
இந்தப் பணிமனையில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை உரிய நாட்களில் விடுவிக்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு எஸ்சிஇஆர்டி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய நோக்கம்
மாறிவரும் உலகளாவிய கல்வித் தேவைகள் மற்றும் நீட் (NEET), ஜே.இ.இ (JEE) போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்குத் தமிழ்நாடு மாணவர்கள் தங்களைச் சிறந்த முறையில் தயார்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு
இணைய வழி விண்ணப்பப்பதிவு தொடக்கம்!
சென்னை, மே 4- பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இப்போது இருந்து மேற்படிப்புகள் தொடர்பாக பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பி.இ. மற்றும் பி.டெக் விண்ணப்பப் பதிவு இணைய வழியில் தொடங்கியுள்ளது.
மாணவர்கள் இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள www.tneaonline.org என்ற இணைய தளத்தின் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்க 3.5.2026 முதல் ஜூன் 2 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் பதிவின் போது மாணவர்கள் தங்களின் அடிப்படை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை மின்வருடல் (Scan) செய்து பதிவேற்ற வேண்டும். இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 110 பொறியியல் சேர்க்கை மய்யங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
