மதத்தை நம்பினால் மரணம்தானா?

கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில், சித்திரை முழுநிலவு நாள் அன்று மலை ஏறிய 34 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் 7ஆவது மலையில் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்

அவரது உடமைகள் எதுவும் அருகில் இல்லாத நிலையில் உயிரிழந்தவர் யார் என்பது  உறுதி செய்யப்படவில்லை. முதற்கட்டத் தகவலின்படி, மூச்சுத்திணறலால் ரத்த ஓட்டம் சீரற்ற நிலைக்குச் சென்றது – மரணத்திற்குத் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உயிரிழந்த நபரின் அடையாளங்கள் உறுதி செய்யப்படாததால்,  ஆலந்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு (2026) உயிரிழப்புகளின் புள்ளி விவரப்படி, பிப்ரவரியிலும், மே மாதத்திலும் வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் உயிரிழப்பவர் களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 12 பேர் மலையேற்றத்தின் போது உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்.

போதிய உடல் தகுதி இன்மை, மூச்சுத்திணறல் மற்றும் செங்குத்தான பாதைகளில் ஏறும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு ஆகியவையே மரணத் திற்கு முக்கியக் காரணங்களாக மருத்துவர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதய நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் அண்மையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மலை ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையும் சுகாதாரத் துறையும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றன. இருப்பினும் பலர் எச்சரிக்கையைப் புறந்தள்ளி மலைேயறும்போது – பாதியிலேயே மரணிக்கும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.

மத நம்பிக்கை என்பது – மனிதனின் அறிவையும், தன்னம்பிக்கையையும் பாழ்படுத்தக் கூடியது என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும், பிரச்சாரம் செய்தும், நூல்களை வெளியிட்டும் வந்துள்ளோம்.

நாட்டில் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான் என்றாலும், இன்னும் ‘கடவுள்’, ‘மத’ நம்பிக்கைகளில் (மூட நம்பிக்கைகளில்) மூழ்கி மாளக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதற்கு எடுத்துக்காட்டுதான் – கோவையருகே வெள்ளியங்கிரியில் ‘சித்திரை விழா’ என்ற பெயரில் நடந்துவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், தரிசனம் செய்யவும் செல்லும் பக்திப் போதை ஏறியுள்ளவர்கள் பரிதாபகரமான முறையில் மரணம் அடைவதாகும்.

2011 ஜனவரி 14 அன்று இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடு (சபரிமலைக்குச் செல்லும் ஒரு மலைப்பாதை) பகுதியில் மரணித்த  பக்தர்கள் எண்ணிக்கை 102 பேர்.

1999 ஜனவரி 14 அன்று அய்யப்பன் கோயில் மகர ஜோதியைக் காண மலை உச்சிக்குச் சென்ற பக்தர்களில் 52 பேர் கூட்ட நெரிசலில் பரிதாபமாக மரணிக்கவில்லையா?

1997ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி தஞ்சாவூர் பிரகதீசுவரன் கோயில் குடமுழுக்கையொட்டி நடத் தப்பட்ட யாகத்தின் போது, ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பந்தல்தீப்பற்றி, 48 பக்தர்கள் பதறப் பதறத் துடிதுடித்து மரணம் அடைந்தார்களே, 200க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுக்கு ஆளானார்களே!

பொருளுக்குப் பொருளும் கேடு, மனித உயிர்களும் பறி போகும் கொடூரம்!

இவற்றிற்கு (ஏகப்பட்ட மரணங்களுக்குப்) பிறகும் கடவுள் என்று ஒருவர் உண்டு, அவர் சகல சக்தியும் வாய்ந்தவர், அவரைத் தரிசித்தால் நாம் நினைப்பதும், வேண்டுவதும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள் என்றால், அது எப்படி அறிவுடைமையாகும்? அப்படி இருந்தால் மலையேறி வருகின்ற பக்தர்களைக் காப்பாற்றி இருப்பாரே!

மனிதன் என்பதற்கு அடையாளம் பகுத்தறிவே – அதனைப் பயன்படுத்துவீர்! பண்படுவீர்! சிறப்படைவீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *