புதுச்சேரியில் போக்சோ வழக்கில் முதல்முறையாக உச்சபட்ச தண்டனை சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்குத் தூக்கு

சிறப்பு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

புதுச்சேரி, மே 10 புதுச்சேரியில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. புதுச்சேரி வரலாற்றில் போக்சோ வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என் பது குறிப்பிடத்தக்கது. புதுச் சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024 மார்ச் 2ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார்.

இதுகுறித்து முத்தியால் பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியபோது, காணாமல் போன சிறுமி கொலை செய்யப்பட்டு, கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு, உடல் வேட்டியில் சுற்றப்பட்டு கழிவுநீர் வாய்க்காலில் வீசப் பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் உடல் ஜிப்மரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில், முத்தியால் பேட்டை சோலைநகர் அம்பேத்கர் நகர் 2ஆவது குறுக்கு தெருவை சேர்ந்த முனுசாமி மகன் கருணா (எ) கருணாஸ் (22), விவேகானந்தன் (56) ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து எதிர்க் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன.

இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பர் 16ஆம் தேதி காலாப்பட்டு மத்திய சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன் நடந்து வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் பச்சையப்பன், சிறுமியின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரவீன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றத்தின் தன்மை மிகப் பெரியது என்பதால் முக் கிய குற்றவாளியான கருணாசுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டுமென வாதிட்டனர்.

இதையடுத்து விசாரணை முடிந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட கருணாஸ் குற்றவாளி என அறிவித்ததோடு, அவருக்கான தண்டனை விவரங்கள் மே 5ஆம்தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி 5ஆம் தேதி அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பச்சையப்பன், சிறுமி குடும்பத்தின் வழக்குரைஞர் ப்ரவீன் ஆகியோர் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க 10 காரணங்களை சுட்டிக்காட்டி எழுத்துபூர்வ வாதத்தை முன் வைத்தனர்.

அதற்கு நீதிபதி சுமதி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்றால், அரசு தரப்பில் இருந்து ஒரு அறிக்கை தாக்கல் செய்யும்படி குறிப்பிட்டு வழக்கை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி கடந்த 7ஆம் தேதி அரசு தரப்பு சார்பில் சமூக நலத்துறை மூலம் நீதிபதி முன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் குற்றவாளி கருணாஸ் மீது ஏற்கனவே பொது அமை திக்கு பங்கம் விளைவித்த வழக்கு உள்ளதாகவும், 9ஆம் வகுப்பு வரை படித்து உள்ள தாவும், கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்தவர் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கருணாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குற்றவாளிக்கான தண்டனையை குறைக்க வாதிட்டார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி சுமதி, குற்றவாளிக்கான தண்டனை விவரம் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறி ஒத்தி வைத்தார்.

அதன்படி புதுச்சேரி நீதிமன்றத்திற்கு 8.5.2026 காலை 11 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் குற்றவாளி கருணாசை காவல் துறையினர் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து நீதிபதி சுமதி, குற்றவாளி கருணாசுக்கு தூக்கு தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார். இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை அரசு வழங்கவும் உத்தரவிட்ட நீதிபதி, தீர்ப்பு எழுதிய பேனா முனையை உடைத்தார். புதுவையில் போக்சோ வழக்கில் முதன்முறையாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து குற்றவாளி கருணாசை காவல்துறையினர் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச்சென்றபோது அவர் கண்ணீர் வடித்தபடி சென்றார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்ற வாளி கருணாசுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *