வைக்கத்தில் நடந்த போராட்டத்தில் 7.4.1924ஆம் நாள் கேரள காங்கிரஸ் தலைவரும், வைக்கம் போராட்ட இயக்கத்தின் தலைவருமான கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன் (தேசாபிமானி பத்திரிக்கை ஆசிரியர்) ஆர்ப்பாட்டத்தை நடத்தத் தொடங்கினர். கோயில் தெருவின் தடுப்புகளை நெருங்கும்போதே அவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
11.4.1924 போராட்டம் ஜார்ஜ் ஜோசப், செபாண்டியன், கே.ஜி.ராய் ஆகிய தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. வழமைபோல் அவர்களும் கைது செய்யப்பட்டார்கள். ஜார்ஜ் ஜோசப் காந்தியாருக்கு ஓர் அவசரக் கடிதம் அனுப்பினார்.
“நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டோம். பொது ஜன ஆதரவிற்குத் குறைவில்லை. சத்யாகிரகத்தைத் தலைமை தாங்கி நடத்தத்தான் தலைவர்கள் இல்லை. தேவதாஸ் (காந்தியாரின் மகன்) அல்லது மகாதேவ தேசாயியையாவது அனுப்பி வையுங்கள்” என்று ஜார்ஜ் ஜோசப், காந்தியாருக்குக் கடிதம் எழுதினார்.
தலைவர்கள் இல்லாமல் பதற்றமடைந்தனர். அதனால் கேரளக் காங்கிரஸ் தலைவர்கள் காந்தியாரை அணுக, அவரோ “சென்னை மாகாண காங்கிரஸார் பார்த்துக் கொள்வார்கள்” என்று கூறிவிட்டார். இந்த பதில் கேரளத் தலைவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.
அப்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஈ.வெ.ராமசாமி நாயக்கர் (தந்தை பெரியார்) இருந்தார். கேரள காங்கிரஸ் தலைவர்கள் தந்தை பெரியாரை போராட்டத்திற்குத் தலைமை தாங்கவரும்படி தந்தி கொடுத்தனர். 4.4.1924 அன்று குரூர் நீலகண்ட நம்பூதிரி, ராமசாமி நாயக்கரை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்க வரும்படி தந்தி கொடுத்தார். (தந்தை பெரியாரோ) ராமசாமி நாயக்கரோ, “நான் குளித்தலை மாநாட்டிற்குச் செல்ல ஆயத்தப்பட்டுவிட்டேன். கட்டாயம் வந்துதான் தீர வேண்டுமா?” என்று பதில் தந்தி கொடுத்தார். ஏப்ரல் 6ஆம் தேதி ஜார்ஜ் ஜோசப் தந்தை பெரியாருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். ராமசாமி நாயக்கர் வந்து போராட்டத்திற்குத் தலைமையேற்க வேண்டும் என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். “கட்டாயம் வர வேண்டுமா?” என்று ராமசாமி நாயக்கர் மீண்டும் வினவ, நீலகண்ட நம்பூதிரியும், இன்னொரு போராட்டக்காரர் டி.ஆர்கிருஷ்ணசாமி அய்யரும், “ராமசாமி நாயக்கர் கட்டாயம் வரத்தான் வேண்டும்” என்று பதில் தந்தி கொடுத்தனர். அதனால் நாயக்கர் 13ஆம் தேதி மெயிலில் புறப்படுவதாக முடிவு செய்தார்.

முடிவெடுத்தபடியே ராமசாமி நாயக்கர் (தந்தை பெரியார்), 13ஆம் தேதி மெயிலில் புறப்படுவதாகவும், திருச்சூரில் நீலகண்ட நம்பூதிரி தன்னை சந்திக்க வரும்படியும் தந்தி அனுப்பினார். வைக்கம் போராட்டத் தலைவர்கள் பலரும் வேண்டி, விரும்பி அழைத்ததால் ராமசாமி நாயக்கர் வைக்கம் சென்றார். ராமசாமி நாயக்கரை வைக்கத்திற்கு வரவேண்டி கடிதம் எழுதியது போலவே ஜார்ஜ் ஜோசப் ராஜகோபாலாச்சாரியாருக்கும் வைக்கம் நடப்புகள் குறித்துக் கடிதம் எழுதினார். அதற்கு ராஜகோபாலாச்சாரியோ, “இங்கிருந்து (தமிழ்நாட்டிலிருந்து) வரும் முக்கியஸ்தர்களை திருவாங்கூர் சமஸ்தான வைக்கம் போராட்டத்தில் தள்ளிவிட வேண்டும் என்பதை நான் ஒத்துக்கொள்ள முடியாது. தீண்டாமையை ஒழிக்க வேண்டியது அவசியமே. ஆனால், வைக்கம் ரஸ்தாக்களில் தாழ்ந்த (கவனிக்க: தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல; “தாழ்ந்தவர்கள்” என்றே அந்த அய்யங்கார் பார்ப்பனர் குறிப்பிடுகிறார்.) வகுப்பினர் செல்ல அனுமதிப்பதால் தீண்டாமைப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. வைக்கத்தில் இந்த ரஸ்தாக்களை திறந்து விட்டாலும், மற்ற இடங்களில் திறந்து விட வேண்டிய அவசியம் இல்லை. ராமசாமி நாயக்கர் போன்றோர் ஒரு வருஷம் சிறைபடுவதால் என்ன பிரயோஜனம்? அடுத்த ஆறு மாதத்தில் இந்த விஷயம் பைசலாகும் என்று தோன்றவில்லை. அவர்களை அங்கு அனுப்பிவிட்டால், இங்கு கதர்வேலை பாதிக்கப்படும். அது புத்திசாலித்தனமாகத் தோன்றவில்லை” என்று ஜார்ஜ் ஜோசப்பிற்கு பதில் கடிதம் எழுதினார் ராஜாஜி.
திருவாங்கூர் மகாராஜா சென்னை செல்லும்பொழுது ஈரோட்டில் இளைப்பாறுவது வழக்கம். அதுசமயம் அவர் ராமசாமி நாயக்கரின் விருந்தாளியாக தன் பரிவாரங்களோடு தங்குவது வழக்கம். அவர் திருவனந்தபுரம் சமஸ்தானத்திற்கு வருகிறார் என்று கேள்விப்பட்ட அரசர், அவருக்கு அரசு மரியாதை கொடுத்து அழைத்துவர வைக்கத்திற்கு திருவாங்கூர் காவல்துறை பெரிய அதிகாரி பிட், திவான் பேஷ்கார் சுப்பிரமணி அய்யர் ஆகியோரை அனுப்பி வைத்திருந்தார்.
ராமசாமி நாயக்கர், அரசின் நல்லெண்ணத்திற்கும், அரசருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, தான் அரசை எதிர்த்துப் போராடப் போவதாகவும், அதனால் அரசு மரியாதையை எற்றுக் கொள்வது சரியாக இருக்காது என்று மறுத்துவிட்டார்.
நீலகண்ட நம்பூதிரியிடம் வைக்கம் நிகழ்வுகளை முழுவதும் தெளிவாகக் கேட்டறிந்த ராமசாமி நாயக்கர், முதலில் அந்தப் போராட்டம் குறித்து மக்களிடையே ஒரு விழுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், வைக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரப்புரைகளை மேற்கொள்வது என்றும் முடிவெடுத்தார். வைக்கம் போராட்டப் பரப்புரையை 16.4.1924 அன்று சேர்த்தலை என்ற ஊரில் தொடங்கினார்.
16.4.1924 அன்று சேர்த்தலையில் நடைபெற்ற கூட்டத்தில், (தந்தை பெரியார்) ராமசாமி நாயக்கர் முழங்குகிறார்: “சுதந்திரம், சகோதரத்துவம் நிறுவப்படுவதற்கு முதலில் தீண்டாமைக்கும், அருகாமைக்கும் முடிவு கட்ட வேண்டும். மக்கள் அனைவரும் சமம். ஒரே மதம், ஒரே ஜாதியென்றே அனைவரும் வாழ வேண்டும்” என்று பேசியவர் சத்யாகிரகம் பற்றியும், அதன் வரலாற்றைப் பற்றியும், அது வைக்கத்தில் நடைபெறும் விதம் பற்றியும் தெளிவாகப் பேசினார்.
அந்தப் போராட்டத்தில் பெண் தொண்டர்கள் ஏராளமாகப் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று வைக்கம் போராட்டத்தில் ஈடுபட ஒரு பெண்கள் பிரிவு துவக்கப்பட்டது. அதில் (பெரியாரின்) ராமசாமி நாயக்கரின் மனைவி நாகம்மாள், அவரின் தங்கை கண்ணம்மாள் மற்றும் கோவிந்த மாதவன் மனைவி ஆகியோர் பங்கேற்றார்கள். இதுபோன்ற பரப்புரைகளை வைக்கத்தின் சுற்றுப்புற ஊர்களில் ராமசாமி நாயக்கர் செய்தார். மக்களை ஊக்குவித்து சத்யாகிரகத்தில் ஈடுபடச் செய்யச் செய்த முன் முயற்சியாக அவர் இந்தச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.
பின்னாட்களில், 1959இல் கன்னியாகுமரியில் தந்தை பெரியார் ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது வைக்கம் போராட்டத்தை நினைவு கூர்ந்தார். (ராமசாமி நாயக்கர் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில், கன்னியாகுமரி திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது.) அவர் பேசும்பொழுது, “வைக்கம் போராட்டத்திற்கு கலந்துகொள்ள ஏன் என்னை அழைத்தார்கள் என்றால், தீண்டாமைப் பற்றி பேசுவதில் நான் கெட்டிக்காரன் என்பதால்தான்!” என்று தெளிவுபடுத்தினார்.
வைக்கம் சத்யாகிரகத்தில் நேரடியாக ஈடுபடுவதற்கு முன் பத்து நாட்கள் பரப்புரை நிகழ்த்தினார். மக்களிடம் அவர் பிரச்சாரம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. பத்து நாட்கள் அமைதியாக இருந்த அரசாங்கம், அவர் பிரச்சாரம் ஏற்படுத்திய தாக்கத்தை அறிந்து, அதற்குத் தடை விதித்தது. ஆனால், ராமசாமி நாயக்கர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. தடையுத்தரவை மீறியதற்காக ராமசாமி நாயக்கரையும், கோவை அய்யாமுத்துவையும் மற்ற இருவரையும் அரசாங்கம் கைது செய்தது. நீதிமன்றத்தில் அவர்களை ஒப்படைத்தபொழுது, அவர்களுக்கு நீதிமன்றம் ஒரு மாதம் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. தண்டனையை ஏற்ற ராமசாமி நாயக்கரும், மற்ற தொண்டர்களும், “அருவிக்குத்து” என்ற ஊரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமசாமி நாயக்கர் சிறையில் அடைபட்டிருந்தபொழுது அவரது மனைவி நாகம்மையார் வைக்கம் போராட்டப் பிரச்சாரத்தில் தன் பெண் தோழர்களுடன் ஈடுபட்டார். அவர் பிரச்சாரமே ஒரு புதுமையான முறையில் அமைந்திருந்தது. ஏராளமான பெண்கள் அந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நாகம்மையார் தலைமையில் பெண்களின் பிரச்சாரப் படையினர் வைக்கத்தை ஒட்டியுள்ள சிறு, சிறு ஊர்களி லெல்லாம் வைக்கம் போராட்டத்தின் காரணத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறினர். இந்தப் பரப்புரையைத் தெருத்தெருவாக, வீடு வீடாக அவர்கள் செய்தனர். வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கியிருந்த இடத்தில் அவர்களுக்கு உணவிற்காக, நாகம்மையார் குழுவினர் பரப்புரையாற்றிய வீடுகளில் ஒவ்வொரு பிடி அரிசியைத் கொடையாகப் பெற்றனர். ஒருகோடிஸ்வரன் வீட்டு மருமகள் தன் செல்வச் செழிப்பைப் பற்றி கவலைப்படாமல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டதோடு மட்டும் நில்லாமல் எந்த அளவிற்குப் போராட்டத்தில் ஆழமான உணர்வோடு பங்கேற்றுள்ளார் என்று நினைக்கும்பொழுது எவ்வளவு வியப்பு ஏற்படுகிறது.
பெண்களைச் சேர்த்துக்கொண்டு பிடி அரிசி சேர்ப்பதும், மீதி நேரங்களில் பிரச்சாரம் செய்வதுமாக நாகம்மையார் குழுவினர் பணி நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டை விட்டே வெளியே வரமுடியாத சமூகக் கட்டுப்பாடுகள் இருந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்ததுமல்லாமல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த இந்தப் பெண்கள் குழுவின் செயல்பாடுகள் அகில இந்திய அளவில் பெரும் பேசுபொருள் ஆனது. ஈரோட்டு ராமசாமி நாயக்கர், தான் மட்டும் வைக்கம் போராட்டத்தில் ஈடுபடாமல் தன் குடும்பப் பெண்களையும் ஈடுபடுத்திய செய்தி காந்தியார் காதுகள் வரை எட்டியது.
தடையை மீறிய குற்றத்திற்காக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட பெரியார் தன் சார்பில் வழக்குரைஞர் யாரையும் வைக்கவில்லை. வழக்கமாக தந்தை பெரியார், தான் நடத்தும் போராட்டங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் வழக்குரைஞர் யாரையும் வைத்து தன் சார்பில் வழக்காட மாட்டார். குற்றவாளிக் கூண்டில் நின்றவாறு ஓர் அறிக்கையை எழுதிக் கொண்டு வந்து, நீதிமன்றத்தில் படிப்பது அவர் வழக்கம். அதே போல் இந்த முறையும் தடையை மீறிக் கைதான பின் நீதிமன்றத்தில் ஓர் அறிக்கையை வாசிக்க நீதியரசிரிடம் அனுமதி கேட்டார். நீதியரசரும் ஒத்துக் கொண்டார். பின் தந்தை பெரியார், தான் கொண்டு வந்த அறிக்கையை வாசித்தார்.
(1924ஆம் ஆண்டில், தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோது, “ராமசாமி நாயக்கர்” என்றே அழைக்கப்பட்டார். அவருக்கு 13.11.1938 அன்றுதான் சென்னை ஒற்றைவாடைக் கலையரங்கில் நடந்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதனால்தான இந்தக் கட்டுரையில் பல இடங்களில் தந்தை பெரியார் என்பதற்கு பதில் “ராமசாமி நாயக்கர்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.)
(சான்று: “வைக்கம் போராட்டம்” – கு.வெ.கி.ஆசான்)
(தொடர்வேன்…)
