நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருப்போம்!

7 Min Read

பேரறிஞர் அண்ணா காலம்தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது காலம் தொடர்ந்து,
இப்பொழுது தளபதி ஸ்டாலின் அவர்களது காலத்திலும் சரி, இனியும் சரி – இந்தப் பாரம்பரியம் தொடரும்!

சென்னை, மே 7– பேரறிஞர் அண்ணா காலம்தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது காலம் தொடர்ந்து, இப்பொழுது தளபதி ஸ்டாலின் அவர்களது காலத்திலும் சரி, இனியும் சரி – இந்தப் பாரம்பரியம் தொடரும்!  நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருப்போம் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்.

அண்மையில் நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக், வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றது. வாணியம்பாடி தொகுதியில் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக், பாபநாசம் தொகுதி யில் ஏ.எம்.ஷாஜஹான் ஆகியோர் வெற்றி பெற்றார்கள்.

இதையடுத்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், மாநில துணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ் கனி,  வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஷாஜஹான் மற்றும் இ.யூ.முஸ்லிம் லீகின் மூத்த நிர்வாகிகள் ஆகியோர்  அவரை சந்தித்தனர்.

அப்போது புதிய சட்டமன்ற உறுப்பி னர்கள் இருவரும் தங்களது சான்றிதழ்களை தி.மு.க. தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது நூறு சதவீதம் வெற்றிபெற்ற இ.யூ.முஸ்லிம் லீகிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

செய்தியாளர்கள்
சந்திப்பு

இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விளக்கம் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:

கேள்வி: நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்ட உங்கள் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு இரண்டு இடங்கள் கிடைத்து இருக்கின்றன. கேரளாவில் முஸ்லிம் லீக் உள்ளடக்கிய காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய உள்ள நிலையில், கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் தற்போது கூட்டணி அரசு அமையும் என்ற சூழலில், பாரம்பரியமிக்க தேசிய கட்சி யாக உள்ள தங்களது நிலைப்பாடு எப்படி இருக்கும்?

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. கேரளாவில் 22 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இதுவரை அங்கிருந்த கம்யூனிஸ்ட் அரசு மாறி, இப்பொழுது காங்கிரஸ் கூட்டணி அரசு வரவுள்ள நிலையில், எங்களது இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்த நான் கைந்து உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆகும் வாய்ப்பு உள்ளது. இது கேரளாவில் உள்ள வழக்கமான நிலையாகும்.

அதேநேரத்தில் தமிழ்நாட்டில், நடை பெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பான்மையைத் தராத நிலையில், கூட்டணி அரசு அமை யும் என்ற சூழல் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டு நாட்களாக எங்களிடத்தில் பலரும் பல்வேறு கருத்துகளை முன்வைத்துக் கொண்டி ருக்கின்றனர்.

அன்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், இனியும் இருப்போம், என்றும் தொடர்வோம்!

அவர்கள் அனைவரிடமும் நாங்கள் உறுதியாக சொன்னது ஒன்றே ஒன்றுதான். நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பாரம்பரியமாக இருந்து வருகிறோம். அன்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், இனியும் இருப்போம், என்றும் தொடர்வோம் என்று நாங்கள் அவர்கள் அனைவரிடமும் மிகத் தெளிவாகக் கூறி விட்டோம்.

ஆகையால் இங்கே எங்களது நிலைப்பாட்டில் எந்த குழப்பமும் இல்லை. ஊடகங்களிலும் அங்கு இங்குமாக பலரும் பலவற்றை பேசுவார்கள் தான். அவற்றால் விளையும் குழப்பங்கள் ஒருபோதும் எங்களை பாதிக்கப் போவதில்லை.

நாங்கள் எடுத்திருக்கும் முடிவு
நல்ல முடிவாகவே இருக்கும்!

எங்களைப் பொறுத்த வரை, ஜனநாயக அடிப்படையில் தேர்தல் களத்தில் கூட்டணி அமைத்து நின்றோம். வெற்றியும் பெற்றோம். மக்கள் எந்த அடிப்படையில் எங்களுக்கு இந்த முடிவைத் தந்தார்களோ அந்த அடிப்படையிலேயே நாங்கள் தொடர்கிறோம். இவ்வாறாக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு நல்ல முடிவாகவே இருக்கும். அதன் மூலம் நமது தமிழ்நாடு மாநிலத்தில் நல்லதே நடக்கட்டும்.

கேள்வி : தி.மு.க. தலைவரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வெற்றி பெற்ற இரண்டு வேட்பாளர்களுடன் இணைந்து, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி னீர்களே? அது குறித்து விளக்கிக் கூற முடியுமா?

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்: நிச்சயமாக! தமிழ்நாட்டில் உள்ள மாநில மக்கள் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் வியந்து போற்றும் வகையில் கடந்த அய்ந்தாண்டுகளாக வெற்றிகரமான மக்களாட்சியை ‘திராவிட மாடல்’ அரசு என்ற அடைமொழியுடன் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

ஊடகங்கள் வழியே அறிகிறோம்!

இன்னும் ஒருபடி மேலே சொல்வ தானால், வெளிநாடுகளில் உள்ளவர்களும் இந்த ஆட்சியைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து, இந்த ஆட்சியுடைய திட்டங் களை முன்மாதிரியாக கொண்டு தாங்க ளும் செயல்படுத்த போவதாக கனடா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்கள் வழியே அறிகிறோம்.

இப்படிப்பட்ட நல்லாட்சியைக் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, இந்தத் தேர்தலிலே அமோக வெற்றி பெற்று, மீண்டும் இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் அது நிகழ வில்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. அந்த வருத்தத்தை ஸ்டாலின் அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம்.

தேர்தல் வரும், போகும். வெற்றி தோல்விகள் வரும் போகும். எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்து வெற்றிகளையும், தோல்விகளையும் மாறி மாறிக் கண்டி ருக்கிறோம். வெற்றியில் மமதை கொள்வது மில்லை. தோல்வியில் துவண்டு போவது மில்லை. இதுதான் எங்கள் வழமை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்கள் உடனான சந்திப்பிலும் இதையே உணர்ந்தோம்.

மக்கள் பிரச்சினைகளை
முன் எப்போதையும் விட அழுத்தமாக
முன் வைப்போம்!

நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்பாடுகள் இன்னும் வீரியம் காணும். மக்கள் பிரச்சினைகளை முன் எப்போதையும் விட அழுத்தமாக முன் வைப்போம், வெற்றி பெறுவோம்.

கேள்வி : நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆட்சி அமைப்பதற்காக உங்களது ஆதரவைக் கோரினார்களா?

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்: நேரடியாக எங்களிடத்தில் சம்பந்தப்பட்டோர் யாரும் வந்து கேட்டதாக எனக்குத் தகவல் இல்லை. அவர்கள் மூலமாகப் பல பேர் எங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நேற்றுக் காலையில் கூடக் கேட்டார்கள், தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இனியும் தொடர்ந்து நீடிப்போம்!

நாங்கள் சொன்ன பதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்த வரை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் காலத்தில் இருந்தது போலவே தளபதி ஸ்டாலின் அவர்களுடைய காலத்திலும் தொடர்ந்து நீடிக்கிறோம், இனியும் தொடர்ந்து நீடிப்போம்.

இதை நான் உறுதியாகச் சொல்வதற்குக் காரணம், எங்களது கூட்டணி என்பது தேர்தல் ஒன்றை மட்டும் முன்வைத்து செய்யப்பட்ட கூட்டணி அல்ல. மாறாக இது கொள்கைக் கூட்டணி. கொள்கை ரீதியான உடன்பாடு எங்களுக்குள் உள்ளது என்பதால், இந்த உடன்பாட்டுக்கு எல்லையோ, கால வரை யறையோ கிடையாது. எனவே இந்த கூட்டணியில் நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், இனியும் தொடர்வோம்.

கேள்வி : தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் இப்பொழுது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரி விப்பதாக செய்திகள் வருகின்றனவே? இது குறித்து உங்களது கருத்து என்ன?

தி.மு.க.வுடன் நாங்கள் கொண்டுள்ள கூட்டணி கொள்கை கூட்டணி!

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்: திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நிறைய கட்சி கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முடிவுகள் இருக்கலாம். அதில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை தி.மு.க.வுடன் நாங்கள் கொண்டுள்ள கூட்டணி கொள்கை கூட்டணி என்பதால் ‘‘தேர்தல் முடிந்து விட்டது. உங்களை விட்டும் விடை பெறு கிறோம்’’ என்று சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை.

பேரறிஞர் அண்ணா காலம்தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது காலம் தொடர்ந்து,இப்பொழுது தளபதி ஸ்டாலின் அவர்களது காலத்திலும் சரி, இனியும் சரி – இந்தப் பாரம்பரியம் தொடரும். நாங்கள் இந்தக்கூட்டணியில் தொடர்ந்து இருப்போம்.

இவ்வாறு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி அளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *