சிவகாசி, மே 7 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தியாளர்களிடம் தமிழில் பேசாமல் தொடர்ந்து இந்தி யில் பேட்டியளித்து வருவது தமிழ் நாடு அரசியல் வட்டாரத்திலும், மக்களிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
சர்ச்சையைக் கிளப்பிய சட்டமன்ற உறுப்பினர்களின் இந்திப் பேச்சு
மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் மதார் பதுரூதின், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியில் மட்டுமே பதிலளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள், சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனா, வடமாநில தனியார் தொலைக்காட்சிக்கு இந்தியில் பேட்டியளித்து அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அவர் தனது பேட்டியில், தவெக ஆட்சி அமைப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என இந்தியில் பேசியதோடு, ஆந்திர செய்திச் சேனல் ஒன்றுக்கு தெலுங்கு மொழியிலும் பேட்டியளித்துள்ளார்.
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்றும், மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வெற்றி பெற்ற கையோடு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழைப் புறக்கணித்துவிட்டு இந்தியில் பேசுவது, அவர்களது கொள்கை நிலைப்பாட்டின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின் போது, மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக அக்கட்சி கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அ.ராசா போன்ற மூத்த நிர்வாகிகள் வட இந்திய ஊடகங்களுக்குக் கூட தமிழிலேயே பேட்டியளித்ததை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், தவெகவினர் குறைந்தபட்சம் ஆங்கிலத்திலாவது பேசியிருக்கலாம் எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.
மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, நடைமுறையில் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் செயல், “சொல் ஒன்று, செயல் வேறு” என சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
