தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இழுபறி!

அய்ந்து மாநில சட்டபேரவைத் தேர்தல் முடிவுகள்:
மூன்று மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு!

சென்னை, மே 4  தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய அய்ந்து மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று (4.5.2026) காலை 8 மணி முதலே முன்னணி நிலவரங்கள் வெளிவரத் தொடங்கின.

அசாம், புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கிறது. மேற்கு வங்கத்தில், முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையின்றி, தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வருகிறது.

அசாம், புதுச்சேரியில்
என்.டி.ஏ வெற்றி

அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி,  மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் என்.டி.ஏ கூட்டணி தனது ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இதன் மூலம் அங்கு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது உறுதியாகியுள்ளது.

மேற்குவங்கத்தில்
பா.ஜ.க. வெற்றி!

இந்தத் தேர்தலின் மிகப்பெரிய திருப்பமாக மேற்குவங்கம் அமைந்துள்ளது. நீண்டகாலமாக மேற்கு வங்கத்தின்மீது கண் வைத்திருந்த பா.ஜ.க., திரிணாமூல்  காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து,  அங்கு ஆட்சியைப் பிடிக்கவுள்ளது.

கேரளத்தில்
காங்கிரஸ் கூட்டணி வெற்றி!

கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான  அய்க்கிய ஜனநாயக முன்னணி  90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது.

தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரம் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி முன்னிலை விவரங்கள் பின்வருமாறு:

90-க்கும் அதிகமான இடங்களில்…

அய்க்கிய ஜனநாயக முன்னணி 104 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 37 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓரிடத்திலும் முன்னிலையில் உள்ளன. கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்க 71 இடங்கள் தேவை (அறுதிப் பெரும்பான்மை). தற்போது அய்க்கிய ஜனநாயக முன்னணி  90-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால், அக்கூட்டணி ஆட்சியை அமைப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த இரண்டு முறையாக தொடர்ந்து இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்த சூழலில், இன்று (4.5.2026) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இதனால் அய்க்கிய ஜனநாயக முன்னணி தொண்டர்கள் உற்சாகத்தில்
உள்ளனர்.

தமிழ்நாட்டில் தொடரும்
இழுபறி!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, மற்றும் விஜய் தலைமையிலான தவெக உள்ளிட்ட பலமுனைப் போட்டியில், ஏப்ரல் 23, 2026 அன்று, 75,064 வாக்குச் சாவடிகளில், ஒரே கட்டமாக  234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு  நடைபெற்றது. இத்தேர்தலில், 85.1% என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை இன்று (4.5.2026) எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளி வந்துகொண்டிருக்கின்றன.

தவெக முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் மாறும் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

த.வெ.க. 107 இடங்களிலும், தி.மு.க. 73 இடங்களிலும், அ.தி.மு.க. 54 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

முதல் வெற்றியை மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன் 2,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

அதாவது தமிழ்நாட்டில் பகல் 2.30 மணி நிலவரப்படி எண்ணப்பட்டிருப்பது வெறும் 50% வாக்குகள் மட்டுமே. மொத்தம் பதிவான வாக்குகளில் 2.50 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. எண்ணப்பட வேண்டிய 2 கோடி வாக்குகளுக்கு மேல் உள்ளன. ஆகவே, தேர்தல் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், 90–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள், அதிகபட்சமாக 5000 வாக்குகளுக்கும் குறைவான வாக்குகளில்தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.

உதாரணமாக கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 5 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.

உளுந்தூர்பேட்டையில் 38 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

சிதம்பரம் தொகுதியில் 42 வாக்குகள் வித்தியாசத்தில் மதஜ முன்னிலை வகிக்கிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.

திருவெறும்பூரில் 19 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.

இதுபோன்று இரட்டை இலக்க எண்களின் வித்தியாசத்தில் இருக்கும் இருக்கும் 90–க்கும் மேற்பட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பை யாருக்கு வேண்டுமானாலும் பரிசளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த வெற்றி, முன்னிலை நிலவங்களின்படி எந்த ஒரு கட்சிக்கும், கூட்டணிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத வகையில் இழுபறி நீடிக்கிறது.

இன்று இரவு அனைத்துத் தொகுதிகளின் முடிவுகள் வெளிவந்தாலும்கூட, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத சூழலில், யாருடைய ஆதரவு யாருக்குக் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான்!

இன்னும் ஓரிரு நாள்கள் பரபரப்பான இந்த அரசியல் சூழல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *