3 முதல் 10ஆம் வகுப்பு வரை அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

மதுரை, மே 4  அம்பேத்கரை ஜாதித் தலைவராகப் பார்க்கும் நிலையை மாற்ற, தமிழ்நாட்டில் 2027-2028 கல்வி ஆண்டிலிருந்து 3 முதல் 10-ஆம் வகுப்பு வரை அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் என்ற ராஜேஷ்குமார், விஜய் என்ற விஜயகுமார். இவர்கள் புலிக்குத்தி பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த அம்பேத்கரின் சுவரொட்டியைச் சேதப்படுத்தி அதை காட்சிப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இருவர் மீதும் சோமநாதபுரம் காவல்துறையினர் எஸ்.சி. எஸ்.டி.வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதால் கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, ‘மனுதாரர்களிடம் அம்பேத்கர் குறித்து சரியான புரிதல் இல்லை. இருவரும் தலா 101 அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலை வாங்கி, அதில் ஒன்றை படிக்க வைத்துக்கொண்டு, மற்ற புத்தகங்களை டி.கல்லுப்பட்டியில் உள்ள முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

இருவரும் புத்தகத்தை முழுமையாகப் படித்து வாய்மொழித் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும். மேலும், அடையாறு புற்றுநோய் நிறுவனத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.அடுத்த விசார ணையின் போது, மனுதாரர்கள் இருவரிடமும் அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் பணிகள் தொடர்பாக 30 கேள்விகள் கேட்கப்பட்டன. இருவரும் திருப்திகரமாக பதிலளித்தனர். இதை யடுத்து, புகார்தாரரும் வழக்கை முடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது: அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் பற்றி இளைஞர்களுக்கு ஆழமாகக் கற்பிக்கப்படவில்லை. அவரை ஜாதிக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது.

அவர் முழுதேசத்துக்கும் சொந்தமானவர். அவரைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இந்த வழக்கில் தலைமைச் செயலர், பள்ளி கல்வித்துறைச் செயலர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்படுகின்றனர்.

பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்

இவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் ஆற்றிய பங்கு, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்பு தொலைநோக்குப் பார்வைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் ஜனநாயக தேசத்தைக் கட்டமைப்பதிலும் அவர் ஆற்றிய பங்கு, பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக சிந்தனை ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய கல்விசார் சாதனைகள் ஆகிய தலைப்புகளில் பாடங்களை கற்பிக்க வேண்டும்.

இந்தப் பாடத் திட்டத்தை 2027- 2028 கல்வியாண்டு முதல் அமல்படுத்த அரசு முன்வர வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக தலைமைச் செயலர், பள்ளி கல்வித்துறை செயலர் ஆகியோர் 2027 ஜன.21-ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *