கேள்வி 1: “காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி” என்று அண்மையில் பிரதமர் மோடி பெருமிதப்பட்டு கூறியுள்ளாரே? அதுபற்றி தங்கள் கருத்து?
– வா.முரளி, போரூர்
பதில் 1: அவர் எத்தனையோ பட்டங்களைத் தனக்குத்தானே சூட்டி மகிழ்கிறவர் – சவுக்கிதார் முதல் பலப்பல. அவரது மகிழ்ச்சியை நாம் தடுக்கலாமா?

கேள்வி 2: “குற்றம் இழைத்தவருக்கு கூண்டில் நிற்க வைத்து தண்டனை கொடுப்பதன் மூலம் அவர்களது வழித் தோன்றல்களும் அவர்களைப் போலவே மாறுவதற்கு வாய்ப்புண்டு” என்று உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறியுள்ளாரே?
– செ.கபிலன், சிவகாசி
பதில் 2: மிகவும் சிந்திக்க வேண்டிய புதிய சிந்தனை – வரவேற்கத்தக்கது.
கேள்வி 3: “ஜனநாயகத்தின் உண்மையான திருவிழா” என தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களைப் பார்வையிட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையமும், தற்போதைய ஒன்றிய அரசும் செய்யும் அரசியலமைப்புச் சட்ட மீறுதலை அவர்கள் அறிவார்களா?
– பா.ஓவியன், அரும்பாக்கம்
பதில் 3: விமானத்திலிருந்து ஊரைப் பார்த்து, விவரித்தவர் கதைதான்! பணநாயகம் – அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி என்பனவெல்லாம் அவர்களுக்குத் தெரியாதே!

கேள்வி 4: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ‘தில்லுமுல்லு’கள் செய்ய வாய்ப்பிருக்கிறதா?
– சின்னதுரை, சேலம்
பதில் 4: உண்டு என்பதை அத்தனை நிபுணர்கள் முன்பு, செய்தியாளர்கள் முன்பே விவரித்து விளக்கியது மறந்துவிட்டதா?
கேள்வி 5: “ஒடிசா, பீகாரைப் போல் மேற்கு வங்கத்திலும் தாமரை மலரும்” என்று கூறிய பிரதமர் மோடி தமிழ்நாட்டைப் பற்றிப் பேசாதது ஏன்?
– வடிவேலன், மயிலாடுதுறை
பதில் 5: “தாமரை மலராது; அலறும்” என்பதை அவர் புரிந்து கொண்டது ஒரு காரணமாக இருக்கக் கூடும்!

கேள்வி 6: பழநி முருகன் கோயிலில் இந்தாண்டு உண்டியல் காணிக்கை நான்கரை (4.5) கோடி கிடைத்துள்ளதாமே?
– தமிழரசன், கோவை
பதில் 6: பக்தி போதையாளர்களின் பரிதாபத்திற்கு சென்சஸ் கணக்கு!

கேள்வி 7: அரவிந்த் கெஜ்ரிவால் – நீதித்துறை தொடர்பான மோதலுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பார்கள்?
– க.செண்பகராமன், மதுரை
பதில் 7: மக்கள் மன்றம்தான் இறுதி முற்றுப்புள்ளி வைக்கும்!
கேள்வி 8: அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது துப்பாக்கிச் சூடு நிகழ்வு செயற்கையாக கட்டமைக்கப்பட்டது என்ற ஒரு பேச்சு அடிபடுகிறதே?
– மா.செங்கதிரோன், வேலூர்
பதில் 8: அமெரிக்காவின் டிரம்ப் ஆட்சியில் எதைத்தான் நம்புவது? நம்பக் கூடாதது எது என்று ஒன்றுமே புரியவில்லை!
கேள்வி 9: தேர்தலின்போது கிறிஸ்தவ தேவாலயத்தில் முட்டிக்கால் போட்டுக் கும்பிடுவதும், தேர்தல் முடிந்த பிறகு பட்டையோடு, மேல் சட்டை இல்லாமல் திருச்செந்தூர் செல்வதும் எவ்வகை நாடகமோ?
– கு.வெள்ளிமதி, திருச்சி
பதில் 9: பல வேடங்களில் நன்றாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர்களுக்கு இது கைவந்த கலையாயிற்றே!
கேள்வி 10: தற்போது பெரும்பான்மையான இளைஞர்கள் கடவுள் நம்பிக்கையில் இருந்தாலும், ஜாதி மறுப்புக் காதல் திருமணம் செய்துகொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்களே?
– மா.வெற்றி, செங்கை
பதில் 10: ஜாதி ஒழிப்பு – விபத்தாக ஏற்படாமல் விருப்பமாகி வருவது, நாளடைவில் கடவுளைக் கடைச்சரக்காக்கிவிடும். கவலையை விட்டுத் தள்ளுங்கள்!
