டைட்டானியம் உலோகத்தால் ஆன விலா எலும்பு பொருத்தம்! அரசு மருத்துவர்கள் புதிய சாதனை

4 Min Read

மார்புப் பகுதியில் இருந்து
5 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்

 

சென்னை, ஏப்.27- மார்புப் பகுதியில் இருந்து 5 கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றி, டைட்டானியம் உலோகத்தால் ஆன விலா எலும்பைப் பொருத்தி அரசு மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். வீரியம் மிக்க எலும்புப் புற்றுநோய் (Malignant Bone Tumor) எனும் விலா எலும்புப் புற்றுநோய் மிகவும் அரிதான நோயாகும். இது பெரும்பாலும் வயதானவர்களையே பாதிக்கும். இந்தப் புற்றுநோய் ஏற்பட்டால், விலா எலும்புகளைப் புற்றுநோய் செல்கள் அரித்துவிடும். இதனால் மார்புப் பகுதியில் உள்ள உறுப்புகள் சரியாகச் செயல்படுவதிலும், மூச்சுவிடுவதிலும் கடும் சிரமம் ஏற்படும்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயதான கூலித் தொழிலாளருக்கு மார்புப் பகுதி விலா எலும்பில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நெஞ்சுப் பகுதியில் அதிக வீக்கம் இருந்ததால் அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு புற்றுநோய் கட்டி இருப்பது உறுதியானது. அந்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், உயிர் பிழைக்கும் வாய்ப்பு வெறும் 50 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் தனியார் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பண வசதி இல்லாததால் அவர் கிண்டியில் உள்ள கலைஞர் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோயியல் துறையில் அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையின்போது அவரது நெஞ்சுப் பகுதியில் இருந்து 5 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். அதனைத் தொடர்ந்து விலா எலும்புகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், பாதிக்கப்பட்ட விலா எலும்புகளையும் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

டைட்டானியம் உலோகம்

அதற்கு மாற்றாக, டைட்டானியம் உலோகத்தால் ஆன விலா எலும்பு போன்ற வடிவமைப்பை 3டி தொழில்நுட்பம் மூலம் தயாரித்து, அதனையும் வெற்றிகரமாகப் பொருத்தினர். இந்த அறுவை சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் 13 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுவதும் இலவசமாகவே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த நோயாளி உடல்நலத்துடன் இருக்கிறார்.

 

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில்

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை!

அதிகாரிகள் தகவல்

சென்னை, ஏப்.27-  தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் 23ஆம் தேதி முடிந்துள்ள நிலையில், 2026-2027ஆம் ஆண்டுக்கான பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீடுவீடாக சென்று மாணவர் சேர்க்கை இயக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரையில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட புதிய குழந்தைகள் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மாநகராட்சிஅதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தின் 3ஆவது வாரம் வரையில் மாநகராட்சிப் பள்ளிகள் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர். மேலும் இந்த மாத இறுதிக்குள் சேர்க்கை எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அத்துடன் மே மாதத்துக்குள் இது 7 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையைவிட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதற்காக அந்தந்த பள்ளிகளின் முன்பாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாநகராட்சியில் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேனிலைப் பள்ளிகள் என 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் 2025-2026ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மாநகராட்சியின் புள்ளி விவரங்களின்படி தேனாம்பேட்டை மணடத்தில் அதிகபட்சமாக 53 பள்ளிகளும், திரு.வி.க நகரில் 50, தொண்டையார் பேட்டையில் 46, ராயபுரம் 42, இயங்கி வரும் நிலையில் ஆலந்தூர் மண்டலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 8 பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது பள்ளிகளில் 13 ஆயிரத்து 800 மாணவர்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது 2024-2025ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்டதை விட(6000) இரு மடங்கு அதிகம்.

இதையடுத்து, மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்த, அனைத்து மண்டலங்களிலும் 45 ஆட்டோக்கள் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தப் பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று மாணவர்களை சேர்க்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். சிந்தாதரிப் பேட்டையில் உள்ள ஒரு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், ‘ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று தொடக்க வகுப்புகளில் 10க்கும் மேற்பட்ட புதிய மாணவர்களை சேர்த்துள்ளனர். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *