தருமபுரி ஒகேனக்கலில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் முதல் நாள்
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்’’ மற்றும்
தருமபுரி, ஏப்.26 தருமபுரியில் உள்ள மலை வசிப்பிடமான ஒகேனக்கலில் 9 ஆம் ஆண்டாக நடைபெற்று வரும், ‘‘பெரியாரியல் பயிற்சிப் பட்டறை’’யில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காலையில், ‘‘ஆர்.எஸ்.எஸ். – சங்பரிவார்’’ எனும் தலைப்பிலும், மாலையில், ‘‘ஹிந்து – ஹிந்துத்துவா’’ எனும் இரண்டு தலைப்புகளில், மாணவர்களுடன் உரையாடல் நடத்தியபடியே பாடம் நடத்தினார்.
தருமபுரி மற்றும் அரூர் கழக மாவட்டங்களின் சார்பாக ஒகேனக்கலில் உள்ள தந்தை பெரியார் மன்றத்தில் 25.04.2026 மற்றும் 26.04.2026 ஆகிய இரண்டு நாள்கள், ‘‘பெரியாரியல் பயிற்சிப் பட்டறை’’ சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. முதல் நாளில் காலை 9 முதல் 10 மணி வரை மாணவர்களின் பதிவு மற்றும் தொடக்க விழா நடைபெற்றது. முதல் வகுப்பாக, ‘‘தந்தை பெரியார் ஓர் அறிமுகம்’’ எனும் தலைப்பில், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், இரண்டாம் வகுப்பாக, ‘‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்த னைகள்’’ எனும் தலைப்பில், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மூன்றாவது வகுப்பாக, ‘‘ஆர்.எஸ்.எஸ். – சங்பரிவார்’’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பாடம் நடத்தினர்.
‘‘ஹிந்து – ஹிந்துத்துவா’’ எனும் தலைப்பில்…
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, முதல் வகுப்பாக, ‘‘பேயாடுதல் சாமியாடுதல் – அறிவியல் விளக்கம்’’ எனும் தலைப்பில் மருத்துவர் இரா.கவுதமன், இரண்டாம் வகுப்பாக, ‘‘சமூக நீதி வரலாறு’’ எனும் தலைப்பில் முனைவர் வா.நேரு, மூன்றாம் வகுப்பாக, ‘‘சமூக ஊடகவியலில் நமது செயல்பாடுகள்’’ எனும் தலைப்பில் மா.அழகிரிசாமி, நான்காம் வகுப்பாக, ‘‘பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி’’ எனும் தலைப்பில், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், அய்ந்தாம் வகுப்பாக, ‘‘ஹிந்து – ஹிந்துத்துவா’’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் பாடம் நடத்தினர்.

50% தள்ளுபடியில்
மாணவர்களுக்குப் புத்தகங்கள்!
கழகத் தலைவர் தனது முதல் வகுப்பில்
ஆர்.எஸ.்எஸ். பற்றிய அடிப்படை தகவல்களை பகிர்ந்து கொண்டார் கூடுதலாக இதைப் பற்றி தகவல்கள் அறிவதற்காக வன்முறையின் மறு பெயர் சங்பரிவார், ஆர்.எஸ.்எஸ். எனும் ட்ரோஜன் குதிரை ஆகிய இரண்டு புத்தகங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து பயிற்சிப் பட்டறையில் புத்தகங்கள் மாணவர்களுக்கு 50% தள்ளுபடி கிடைக்கும் என்பதையும் நினை வூட்டினார். தொடர்ந்து அவர், ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கிய கொள்கைகளாக 5 அடிப்படை கருத்துகளை மாணவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகம் செய்தார். ஒன்று, ‘‘ஜாதியை பாதுகாப்பது?’’ இரண்டு, ‘‘பெண் அடிமைத்தனத்தை போற்றுவது?’’ மூன்று, ‘‘இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதியை எதிர்ப்பது?’’ நான்கு, ‘‘மாநிலங்களே இல்லாமல் செய்வது?’’ அய்ந்து, ‘‘மாநிலங்களின் பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடையாளங்களை அழிப்பது?’’ என்பதுதான்,
ஆர்.எஸ்.எஸ்.சின் அந்த 5 அடிப்படை கொள்கைகள். அதைச் சொல்லிவிட்டு, மாணவர்கள் இந்த 5 கருத்துகளையும் எழுதிக் கொண்டனரா? என்பதைச் சரி பார்க்கும் விதமாக, மறுபடியும் இதைச் சொல்லி மாணவர்கள் தங்களது கையேட்டில் பதிவு செய்து கொண்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து, இந்த 5 அடிப்படை கொள்கைகளைப் பற்றியும் சுருக்கமாக விவரித்து, ‘‘ஆர்.எஸ்.எஸ். என்பது நமக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கே விரோதமானது’’ என்பதை எளிமையாக புரிய வைத்தார்.
மாலையில் நடைபெற்ற இரண்டாம் வகுப்பின் தொடக்கத்தில், காலை வகுப்பில் கற்றுக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ்.சின் 5 அடிப்படைக் கொள்கைகளை மாணவர்களில் யாராவது ஒருவரை மேடைக்கு வந்து சொல்ல வேண்டும் என்று கேட்டு, உடனடியாக ஒரு மாணவர் மேடைக்கு வந்து 5 கருத்துகளையும் சொல்லி, ஆசிரியரிடம் பாராட்டுப் பெற்றார்.
ஹிந்துத்துவாவின்
இரட்டை நாக்கு – இரட்டைப் போக்கு!
தொடர்ந்து, ‘ஹிந்து’ என்ற சொல்லையும், ‘ஹிந்து மதம்’ என்ற சொற்றொடரையும், தனித்தனியாக அதன் பொருள் உள்ளடக்கங்களை அரசியலமைப்புச் சட்டத்தின் படி விவரித்து, அது எப்படி பொருளற்றதாக இருக்கிறது என்பதையும், தவறான பொருளில் இருப்ப தையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, இந்து மத வாதிகள் பெரும்பான்மையான மக்களைப் பார்த்து, ‘ஹிந்துக்களே ஒன்று சேருங்கள்’ என்று அழைப்பதையும், அதே சமயம் மக்கள் ஒன்று சேர விடாமல் தடுப்பதற்காக ஜாதியை போற்றிப் பாதுகாப்பதையும் சுட்டிக்காட்டி, ஹிந்து மதம் – ஹிந்துத்துவாவின் இரட்டை நாக்கையும், இரட்டைப் போக்கையும் புரிய வைத்தார். மேலும் அவர், ‘‘யார் ஹிந்து?’’ என்று ஒரு கேள்வியை கேட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் படி இருக்கும் வினோத மான விளக்கத்தை, மாணவர்களின் புத்தியில் பதியச் செய்தார்.

பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றோர்
தருமபுரி ஒகேனக்கல் தந்தை பெரியார் மன்றத்தில், 25.04.2026, 26.04.2026 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்று வரும், ‘‘பெரியாரியல் பயிற்சிப் பட்டறை”யில் தருமபுரி, அரூர், கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர், சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு கழக மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் 60, மாணவிகள் 25 என மொத்தம் 85 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இதில் பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் 30, கல்லூரி பயிலும் மாணவர்கள் 11, பணிக்குச் செல்வோர் 5, பயின்று முடித்தோர் 39 பேர் ஆவர். பார்வையாளர்கள் 25 பேருடன் சேர்த்து, மொத்தம் கலந்துகொண்டோர் எண்ணிக்கை 110 ஆகும். இதில் இளங்கலை 15, முதுகலை 16, வழக்குரைஞர் 2, மருத்துவர்கள் 2, பொறியாளர் 2, முனைவர் பட்ட ஆய்வாளர் 1, பி.எஸ்.சி.அக்ரி 1, பணிபுரிவோர் 5 ஆகும்.
‘‘ஹிந்துக்களை இராணுவ மயமாக்கு?’’ ‘‘ராணுவத்தை இந்துமயமாக்கு?’’
அதற்கு அடுத்தபடியாக, ‘ஹிந்து மதம்’ என்றே ஒன்று இல்லை என்பதையும் அறுதியிட்டுக் கூறினார். அதற்கு, ‘ஆரியமதம்’, ஸநாதன மதம்’, ‘பார்ப்பன மதம்’, ‘வைதீக மதம்’ என்பதுதான் பெயர்களாக இருந்தனவே தவிர, ‘ஹிந்து மதம்’ என்ற ஒரு மதம் இல்லை என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் விளக்கினார். மேலும் அவர், ‘‘ஹிந்துக்களை இராணுவ மயமாக்கு?’’ ‘‘ராணுவத்தை இந்துமயமாக்கு?’’ என்ற கொடூரமான இலக்குடன், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார், ரகசிய திட்டத்துடன் செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தி, ‘‘திராவிடர் நாகரிகத்தை மறுபடியும் நாம் மீட்க வேண்டும்! ஜாதியற்ற; மதமற்ற; பெண்ணடிமைத்தனமற்ற சமூகத்தை நாம் திரும்பப் பெற வேண்டும்! அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!’’ என்று கூறி தனது இரண்டாம் வகுப்பை நிறைவு செய்தார்.
வகுப்பு நிறைவு பெற்றவுடன், அந்தியூர் ஒன்றியப் பொறுப்பாளர் கோவிந்தன் தன் மகள் சவுமியா மூலம் பெரியார் உலகத்திற்கு ரூபாய் 5,000/- நன்கொடையை கழகத் தலைவரிடம் வழங்கச் செய்தார். அதற்கடுத்து, மாணவர்களும், பொறுப்பாளர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வருகை தந்து, கழகத் தலைவருடன் ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
எதிர்மறையான கேள்விகளும் – நேர்மறையான பதில்களும்!
நிறைவாக, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மேடையில் மாண வர்களின் பங்கேற்புடன், எதிர்மறையான கேள்விகளைக் கேட்டு, நேர்மறையாக பதில்களை வரவழைக்கும் நாடக பாணியிலான புதிய உத்தியைக் கடைப்பிடித்து, மாணவர்களுக்குக் களப்பயிற்சி அளித்தார்.
இந்நிகழ்வில், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வழிகாட்டி உரையாற்றினார். முன்னதாக மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி மாணவர்களுடன் கேள்வி, பதில் உரையாடல் மூலம் களப்பயிற்சி அளித்தார். முதல் நாளின் வகுப்புகள் மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றன.
முதல் நாளில், கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளருமான தஞ்சை இரா ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், மாநிலக் கழக இளைஞரணி மாநிலச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, தருமபுரி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன், தருமபுரி மாவட்டச் செயலாளர் கருப்புச் சட்டை முனியப்பன், தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் கதிர்.செந்தில், மாவட்டச் செயலாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ந.அண்ணாதுரை, பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாள அண்ணா சரவணன், மாநில கலைத்துறைச் செயலாளர் மாரி.கருணாநிதி, அரூர் மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலாளர் கு.தங்கராசு, தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தி.அன்பரசு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

