புதுடில்லி, ஏப்.26– உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போரா டும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கலைஞர்கள், எழுத்தா ளர்கள் மீது உ.பி. காவல்துறை ஏவிவிட்டுள்ள அடக்குமுறைகளைக் கண்டித்துப் பல்வேறு பண்பாட்டு மற்றும் எழுத்தாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளும், அரசின் ஒடுக்குமுறையும்!
நொய்டாவில் பணிபுரியும் தொழிலா ளர்கள் தங்களின் குறைந்தபட்ச ஊதியம், கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியம் மற்றும் கண்ணியமான பணிச்சூழல் ஆகிய அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, மாநில அரசு அவர்களைக் கைது செய்தும், ‘சதி’ என்ற பொய்க்கதையை உருவாக்கியும் மிரட்டி வரு கிறது.
அண்மையில், சில செயல்பாட்டா ளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகை யாளர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி காவல்துறை அழைத்துச் சென்றுள்ளது.
அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலைக் கூட வெளியிட மறுப்பது சட்ட விரோதமானது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“நகர்ப்புற நக்சல்” என்ற முத்திரை
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருபவர்களை, ஒன்றிய உள்துறை அமைச்சரின் அண்மைக்கால உரையை மேற்கோள் காட்டி, “நகர்ப்புற நக்சல்கள்” என்ற பெயரில் குற்றவாளிகளாகச் சித்தரிக்க உ.பி. அரசு முயல்கிறது. பாலியல் வன்கொ டுமைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தங்களின் சொந்தத் தலைவர்களைப் பாது காக்கும் ‘புல்டோசர்’ புகழ் உ.பி. அரசு, ஜனநாயக ரீதியாகப் போராடும் தொழிலாளர் களைத் தேச விரோதிகளாகச் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. தொழிலாளர்களைச் சந்திக்கச் சென்ற இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப் பட்டதும், தொழிற்சங்கத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக் கும் செயலாகும்.
மேலும், வழக்குரைஞர்கள் நீதிமன்றத் திற்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதும், கைது நடவடிக்கைகளில் சட்ட விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படு வதும் வேதனையளிப்பதாக எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியக் கோரிக்கைகள்
எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் கூட்டமைப்பினர் முன்வைத்துள்ள கோரிக் கைகள் வருமாறு: நொய்டா போராட்டம் தொடர் பாகச் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள செயல்பாட்டாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அறிவுக்களத்தினர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ள இடங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
செயல்பாட்டாளர்கள் மீது சுமத்தப் பட்டுள்ள ‘சதி’ வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். கைது நடவடிக்கைகளில் சட்ட நடை முறைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும்; வழக்குரைஞர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும். காவலில் வைக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் மறுக்கப்பட்டது குறித்து தடையீடற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றுபட்டுப் போராட அழைப்பு
புத்தகக் கடைகளில் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் அறிவுக்களத்தினர் மீதான தாக்குதல்கள் நமது அரசமைப்புச் சாசன விழுமியங்கள் மீதான தாக்குத லாகும். இந்த அடக்குமுறைக்கு எதிராகப் பண்பாட்டுக் குழுக்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயகக் குடிமக்கள் அனைவரும் ஒன்று பட்டு நின்று குரல் எழுப்ப வேண்டும் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
இவ்வறிக்கையில் பங்களா மஞ்ச் (டில்லி), ஜன சங்கிருதி (டில்லி), ஜன நாட்டிய மஞ்ச் (டில்லி), ஜனவாதி லேகக் சங் (ஹிந்தி எழுத்தாளர் அமைப்பு), ஜதன் நாடக கேந்திரா (அரியானா), கிஷோர் மஹால் (திரிபுரா), மேற்கு வங்க பழங்குடிகள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம், பிரஜா நாட்டிய மண்டலி (ஆந்திரம் – தெலங்கானா), பிரத்யாய் நாட்டிய கலா கேந்திரா (மகாராட்டிரம்), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சென்னை கலைக்குழு, திரிபுரா கலாச்சார ஒருங்கி ணைப்பு மய்யம், மேற்கு வங்க ஜனநாயக எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
