குஜராத் மாநிலம் சூரத் நகரில், ஜெயின் மதத்தைச் சேர்ந்த ஜெயின் சாமியார் ஆபாச காணொலிக் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
சூரத்தைச் சேர்ந்த பிரபல ஜெயின் சாமியார் சந்திரசாகர். இவரது படத்தை பெரும் செல்வந்த மார்வாடிகள் தங்களது தொழில் நிறுவனத்தில் வைத்துள்ளனர். சென்னையில் கூட பல தொழில் நிறுவனங்களில் இவரது படம் இருப்பதைக் காணலாம். இந்த நிலையில் இவர் சில இளம்பெண்களோடு சர்ச்சைக்குரிய வகையில் இருக்கும் காணொலி வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
இந்த ஆபாச காணொலி குறித்துப் பேசிய பெண்கள், “கடந்த சில காலமாகவே இது தொடர்பான விஷயங்கள் நடந்து வருகின்றன. எங்கள் சமூகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் முன்பே, அந்த சாமியார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள முனிவர் சந்திர சாகர், இவை அனைத்தும் திட்டமிட்ட அவதூறு மற்றும் சதி என்று கூறியுள்ளார். என்னை சிலர் நீண்டகாலமாகவே மிரட்டி வந்தனர். அவர்கள் வெளியிட்ட பதிவின் உண்மைத்தன்மையை காவல்துறை விசாரிக்கவேண்டும் என்று கூறி அவர் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில், “என்னை நேரில் சந்தித்துப் பேசாதவர்கள், உண்மை நிலையை அறியாமல் என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எனக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள்” என்று சவால் விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சூரத் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை.
சமீபகாலமாக ‘சாமியார்கள்’ மீது பாலியல் மற்றும் ஆபாச குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகள் எழுவது அதிகரித்துள்ளன. பெண்களுக்குள் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அநீதிகளை எதிர்த்துப் போராட கல்வி கொடுத்த துணிச்சல் இதற்குக் காரணமாக உள்ளது என்று மகளிர் அமைப்புகள் கூறியுள்ளன. புகார் கொடுக்கும் பெண்கள் பெரும்பாலும் படித்த பட்டதாரிகளாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
பல சாமியார்கள், ஆன்மீகம் என்ற பெயரில் அப்பாவி மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, அவர்களைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பின்னர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
முன்பெல்லாம் இத்தகைய குற்றச்சாட்டுகள் வெளியே வர நீண்ட காலம் எடுக்கும். ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால், இவர்களின் உண்மை முகம் உடனடியாக சமூக ஊடகங்களில் வெளிச்சத்திற்கு வருகின்றது. பெரும்பாலான இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் அல்லது சமூக அவமானம் காரணமாகப் புகார் அளிக்கத் தயங்குகிறார்கள். சூரத் சம்பவத்தில் பெண்கள் துணிச்சலாக காவல் ஆணையரிடம் சென்றிருப்பது, சமூகத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வைக் காட்டுகிறது.
இந்த நிலையில் சந்திர சாகர் இது போலியான காட்சிப் பதிவு என்று கூறிய நிலையில், “மேலும் இரண்டு நிர்வாண ஜெயின் சாமியார்கள் இளம் பெண்களோடும், விலைமாதர்களோடும் இருக்கும் காணொலி” வெளியாகி உள்ளதால் ஜெயின் சாமியார்கள் கலக்கம் அடைந்துள்ளனர்
