சமூகப் புரட்சியாளர் ஜோதிபா பூலே 200-ஆம் பிறந்தநாள்!
தமிழ்நாட்டில் ஜோதிபா பூலே – சாவித்திரிபாய் பூலே சிலைகள் அமைக்கப்பட
வேண்டும் என்று ‘திராவிட மாடல்’ அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்
*திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சி வாய்ந்த மாநாடு நடத்தப்படும்! *தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
சமூகப் புரட்சியாளர் ஜோதிபா பூலேயின் 200ஆம் ஆண்டு பிறந்த நாளை திராவிடர் கழகம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
19-ஆம் நூற்றாண்டின் சமூகநீதிக் குரலாக மராட்டிய மண்ணில் உதித்த சமூகப் புரட்சியாளர் ஜோதிபாபூலேவின் 200-ஆம் பிறந்தநாள் இன்று! (11.04.1827)
பார்ப்பனிய ஆதிக்கமும், வர்ணாசிரம – ஸநாதன ஆதிக்கமும் கோலோச்சிய அன்றைய காலகட்டத்தில், சமூகத்தின் எதிர்ப்புகளையும், தமது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரின் எதிர்ப்புகளையும் புறந்தள்ளி, ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும், பெண் கல்விக்காகவும் அரும்பாடுபட்டவர்கள் ஜோதிபாபூலே – சாவித்திரிபாய் பூலே ஆகியோராவர். இந்திய சமூகத் தளத்தில் ‘மகாத்மா’ என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர் ஜோதிபாபூலே ஆவார்கள்.
அவர் தொடங்கிய சத்திய சோதக் சமாஜ் அமைப்பு மராத்திய மண்ணில் பெரும் சமூக மாற்றத்தை உருவாக்கியது. சாகு மகராஜர் போன்ற சமூகநீதிப் புரட்சியாளர்களைத் தந்தது. பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.
எப்பொழுதும் நினைவு கூரும் திராவிடர் கழகம்
திராவிடர் கழகம் எப்போதும் ஜோதிபா பூலே – சாவித்திரிபாய் பூலே ஆகியோரை நினைவுகூர்ந்து சிறப்பித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, பூனாவில் அவருடைய மண்ணுக்குச் சென்று வந்தோம்.
நமது பெரியார் கல்வி நிறுவனங்களில், ஜோதிபாபூலே – சாவித்திரிபாய் பூலே ஆகியோரைச் சிறப்பிக்கும் வகையில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் ஒரு கட்டிடத்திற்கு அவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நமது அழைப்பை ஏற்று வருகைதந்திருந்த அவர்களது அய்ந்தாம் தலைமுறை வழி பேத்தி நீத்தாதாய் ஹேலோபூலே அவர்கள் அதனைக் கண்டு, நெகிழ்ந்ததுடன், மராட்டியத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் அதனை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.
ஜோதிபாபூலேக்கு – சாவித்திரிபாய் பூலேக்கு சிலைகள்
இந்திய அளவில் சமூகநீதிக்கு அடித்தளமிட்டவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ்நாட்டில் நினைவுச் சின்னங்களை, சிலைகளைத் திறந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0 அரசில், ஜோதிபா பூலே – சாவித்திரிபாய் பூலே ஆகிய இருவருக்கும் சிலையை அமைத்துச் சிறப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை, ஜோதிபா பூலேவின் 200-ஆம் ஆண்டு பிறந்தநாளில் முன்வைக்கிறோம்.
திராவிடர் கழகத்தின் சார்பில் சமூகநீதி மாநாடும் – கருத்தரங்கமும்
திராவிடர் கழகத்தின் சார்பில் சமூகப் புரட்சியாளர் ஜோதிபா பூலே அவர்களின் 200-ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, மிகுந்தஎழுச்சியான வகையில் சமூகநீதி மாநாடும், கருத்தரங்கும் நடத்தப்படும். பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பிலும் அவர்களின் சிலைகள் அமைப்போம்!
சமூகநீதிக்குச் சவால் தோன்றியிருக்கும் இந்தச் சூழலில், நாடு முழுவதும் உள்ள சமூகநீதியாளர்களை ஒன்று திரட்டி களம் அமைப்போம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
11.4.2026

