மகாராட்டிரா பா.ஜ.க. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு கழகத் தலைவர் அதிரடிக் கேள்விகள்!

8 Min Read

வட மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டம், எய்ம்ஸ் திட்டம்; மதுரைக்கு மட்டும் பட்டை நாமமா?
பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டால் தான்
மெட்ரோவா? இதென்ன பேரமா, லஞ்சமா?

விருதுநகர், ஏப்.8  வட மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டம்; எய்ம்ஸ் திட்டம் மதுரைக்கு மட்டும் பட்டை நாமமா? பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டால் தான் மெட்ரோவா? இதென்ன பேரமா, லஞ்சமா? என்று மகாராட்டிரா பா.ஜ.க. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு கழகத் தலைவர் அதிரடிக் கேள்விகள் எழுப்பினார்.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் சூறாவளிப் பரப்புரை பயணத்தின் இரண்டாம் நாளில் (7.4.2026) ‘விருதுநகர்’, ‘மதுரை வடக்கு’ ஆகிய தொகுதிகளில், ‘முரசு’ மற்றும் ‘உதயசூரியன்’ சின்னங்களுக்கு வாக்கு சேகரித்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், வேட்பாளர்களுடன் இணைந்து எழுச்சிகரமான உரையை வழங்கினார்.

விருதுநகர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் வி.விஜயபிரபாகரன்

விருதுநகர் திராவிடர் கழகத்தின் சார்பில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விருதுநகர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் வி.விஜயபிரபாகரன் அவர்களுக்கு  நேற்று (7.4.2026) மாலை 5.30 மணிக்கு அல்லம்பட்டி முக்கு ரோடு பகுதியில், முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுக்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். பொறுப்பாளர்கள் மட்டும் இருந்த சூழலில், மாலை 6 மணிக்குள் ஏராளமான இருபால் மக்களும் கூடிவிட்டனர். பெண்கள் கூடுதலாக இருந்தனர். இயல்பாகவே மக்களிடையே எழுச்சியும் மகிழ்ச்சியும் தென்பட்டன. 6.40 மணிக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிகழ்விடத்துக்கு, வேட்பாளர் உடன் வருகை தந்தார். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களாலும், பொது மக்களாலும் எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது.

கழகத் தலைவர் உரைக்கு முன்னதாக, விருது நகர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் வி.விஜயபிரபாகரன் முரசு சின்னத்திற்கு, தனக்கு வாக்குச் சேகரித்து சுருக்கமாக உரையாற்றினார். இந்நிகழ்வில், திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதி தலைமையேற்க, விருதுநகர் மாவட்டத் தலைவர் நல்லதம்பி, மாவட்டச் செயலாளர் ஆதவன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தி.மு.க. நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன், நகர் மன்றத் தலைவர் மாதவன், தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக, மாலை 6.40 மணிக்கு கழகத் தலைவரின் தனி பரப்புரை வாகனத்தை சுற்றி ஏராளமான மக்கள் சூழ்ந்து நிற்க, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மிகுந்த உற்சாகத்துடன் உரையாற்றினார். கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் சுற்றுப் பயணம் மற்றும் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பை மேற்கொண்டனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது உரையில் எடுத்த எடுப்பிலேயே, ‘‘கல்வி வள்ளல் காமராசர் அவர்கள் பிறந்த மண்ணில் பேசுகிறோம் என்பது பெருமைக்குரியது’’ என்றார். ஏராளமான பெண்கள் வாகனத்தைச் சூழ்ந்து நிற்பதைக் கண்ட கழகத் தலைவர், ‘‘ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்றார்கள். கலைஞர் அவர்கள் பெண்களுக்குப் படிப்பையும் கொடுத்து, எரிவாயு அடுப்பையும் கொடுத்தார். ஆனால், பிரதமரின் தவறான வெளியுறவு கொள்கையினால் இன்றைக்கு அந்த எரிவாயுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏராளமான தேநீர்க் கடைகளும், உணவுக் கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. இதுதான் பாஜக அரசின் சாதனை’’ என்று வஞ்சப்புகழ்ச்சியுடன், பழைய பழமொழியையும் கலந்து பேசி, இன்றைய ‘திராவிட மாடல்’ அரசின் சிறப்பையும், ‘ஆரிய மாடல்’ அரசின் கொடுமையையும் பொருத்தமாக நினைவுபடுத்தினார்.

மக்கள் விரோதத் திட்டங்களை தடுக்கக்கூடிய வலிமை ‘திராவிட மாடல்’ அரசுக்கு தான் உண்டு!

தமிழ்நாடு

தொடர்ந்து, பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதிகளின் பட்டியலை வரிசையாக குறிப்பிட்டுவிட்டு, ‘‘சொன்னதையே செய்யாதது பா.ஜ.க. அரசு’’ என்றும், ‘‘சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வது திராவிட மாடல் அரசு’’ என்றும் ஒப்பிட்டு பேசினார். மேலும் அவர், மாநில உரிமைகள் பற்றி பேசினார். அதாவது, ‘‘தமிழ்நாடு அரசின் வருவாயில், ஒரு ரூபாய் பெற்றுக் கொள்ளும் ஒன்றிய அரசு, 28 காசுகள் மட்டுமே நமக்கு திருப்பிக் கொடுக்கிறது என்றும், அதையும் போராடித்தான் வாங்க வேண்டியுள்ளது’’ என்றும் குறிப்பிட்டார். ஒன்றிய அரசுடன் இணக்கமாக சென்றால் ஏராளமான திட்டங்களை பெற முடியும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு, ‘‘இரட்டை இஞ்சின் ஆட்சி செய்யும் மாநிலங்களை விட, ஒற்றை எஞ்சின் ஆட்சி செய்யும் தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது; அதுவும் ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை தராமல் இருக்கும் சூழ்நிலையிலேயே இந்த சாதனையை எட்டி இருக்கிறோம்’’ என்பதைப் பதிலாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திராவிட இயக்க உணர்வைப் புரிந்து, அப்போதே நாங்கள் அவருக்குப் ‘பெரியார் விருது’ அளித்து சிறப்பித்தோம் என்று கூறிய ஆசிரியர்,  அவருக்குப் பிறகு தேமுதிக கட்சியை நிர்வகித்து வரும் பிரேமலதா அவர்களையும் பாராட்டிப் பேசினார். மேலும் பேசிய அவர், ‘‘விஸ்வகர்மா திட்டம் உள்ளிட்ட மக்கள் விரோதத் திட்டங்களை தடுக்கக்கூடிய வலிமை ‘திராவிட மாடல்’ அரசுக்கு தான் உண்டு. ஆகவே, இழந்த உரிமைகளைப் பெறவும் பெற்ற உரிமைகளை தக்க வைக்கவும் மறுபடியும் திராவிட மாடல் அரசு தான் வர வேண்டும். அதற்கு, நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அதைத்தொடர்ந்து, மதுரை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற, மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில்  வாக்கு சேகரிக்கும் பரப்புரைக் கூட்டத்திற்கு, இரவு 8.45 மணிக்கு கழகத் தலைவர் வருகை தந்தார். அவருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக எழுச்சிகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அச்சமயம் கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றிக் கொண்டிருந்தார். இந்நிகழ்விற்கு, மதுரை மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை ஏற்க, மாவட்ட துணைத் தலைவர் திருப்பதி அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன் ராஜா, மதுரை செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

ஆசிரியர் தமது உரையில், ‘‘ஆலங்குளத்தில் இருந்து வரிசையாக பார்த்துக் கொண்டு வருகிறேன். மக்கள் உற்சாகத்தோடு இருக்கிறார்கள். அதற்கு திராவிட மாடல் அரசின் சாதனைகள் தான் காரணம்’’ என்று குறிப்பிட்டு விட்டு, ‘‘மேலோட்டமாக இரட்டை எஞ்சின் என்கிறார்கள். இரட்டை என்றாலே ஒன்று சரியாக இயங்கவில்லை என்று தான் பொருள். ஆனால், தமிழ்நாடு அரசின் ஒற்றை எஞ்சின் மின்சாரத்தால் கூட அல்ல, மக்கள் சக்தி என்ற அணு சக்தியை பெற்று ஓடுகிறது. இதன் சாதனைகளுக்கு ஈடு இணை உண்டா?’’ என்று உரத்த குரலில் கேள்வி எழுப்பிய போது, மக்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. விசில் அடித்தும், கைகளைத் தட்டியும் தங்களின் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அவர், ‘‘எல்லாவற்றிலும் பேதத்தைத் திணித்தது வைதீகம்,  ஆரியம். அதை மாற்றி, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்றது திராவிடம்!’’ என்று, திராவிட மாடல் அரசின் நோக்கத்தை தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, ‘‘இன்றைக்கு இந்தியா மட்டுமல்ல, உலகமே திராவிட மாடல் அரசை போற்றுகிறது! பின்பற்றுகிறது!’’ என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே குறிப்பிட்டார்.

சுயமரியாதை இயக்கத்தின் பட்டறையில் தயாரான, ‘கொள்கை ஏவுகணை!’

தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெருமைக்கான காரணத்தை விளக்க வந்த ஆசிரியர் அவர்கள், ‘‘சுயமரியாதை இயக்கத்தின் பட்டறையில் தயாரான, ‘கொள்கை ஏவுகணை’ தான், நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்’’ என்றார். ஆசிரியர் அவர்களின் கூற்றை ஆமோதிக்கும் வகையில், மக்கள் பலமாகக் கைதட்டி தங்களின் உணர்வுகளை பிரதிபலித்தனர். மேலும் அவர், மதுரை மக்களின் சுயமரியாதையை பிரதிபலிக்கும் வகையில் பேசினார். அதாவது, ‘‘வட மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டம்; எய்ம்ஸ் திட்டம் உடனுக்குடன் வருகிறது. ஆனால், மதுரைக்கு மட்டும் பட்டை நாமமா?’’ என்றொரு அதிரடிக் கேள்வியை எழுப்பினார். தொடர்ந்து, மகாராட்டிராவின் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள், ‘பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டால் தான் மெட்ரோ’ என்று பேசியுள்ளதைச் சுட்டிக்காட்டி, பா.ஜ.க.வின் உள்நோக்கத்தைப் பச்சையாக வெளிப்படுத்தினார். அத்துடன், ‘‘மக்கள் நாயகம் கோலோச்சுகின்ற நாட்டில், ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கு பேரமா? லஞ்சமா? இது என்ன உங்கள் வீட்டு சொத்தா? மக்களின் சொத்து! இதற்கெல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம்’’ என்று மதுரை மக்களின் சுயமரியாதையை வீரியமாகப் பிரதிபலித்தும், மகாராட்டிரா பா.ஜ.க. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கும் கழகத் தலைவர் அதிரடித் கேள்விக் கணைகளைத் தொடுத்த போதும், மதுரை மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கைகளைத் தட்டி, தங்களின் சுயமரியாதைக்கு மரியாதை செய்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, மாநில உரிமைகள் மற்றும் பெண்களுக்காக ‘திராவிட மாடல்’ அரசு செய்து வரும் பல்வேறு சாதனைகள், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் முன்னாள் தலைவர் ‘‘லேடியா? மோடியா?’’ என்று கேட்டது, அதன் இன்றைய பொதுச் செயலாளர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘டில்லிக்கு ‘ஓடி வா’ என்றால், ‘இதோ வருகிறேன்’ என்று செல்லக்கூடிய நிலைமைகள், புதிய கட்சிகளின் வருகை உள்ளிட்டவற்றை பேசி, எந்த அணியைத் தேர்ந்தெடுப்பது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்திவிட்டு, ‘‘மே மாதம் 4 ஆம் தேதிக்கு பிறகு, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று தான், இன்றைய முதலமைச்சர் பதவியேற்கப் போகிறார்’’ என்று மக்களின் எண்ணங்களையே பிரதிபலித்து, பலத்த கைதட்டல்களுக்கிடையே தமது உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

நிகழ்வில், விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளர் அழகர், பெரியார் பெருந்தொண்டர் – காப்பாளர் தங்கசாமி, துணைத் தலைவர் ராஜேந்திரன், ராஜபாளையம் மாவட்டத் தலைவர் சிவக்குமார், ராஜபாளையம் ப.க. தோழர் முத்தரசன், மாவட்ட மகளிரணித் தோழர் சாந்தி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் துணைத் தலைவர் ஆனந்தம், விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் முரளி, அருப்புக்கோட்டை எழிலன், மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மற்றும் தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், ஆதித்தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *