குவைத், மார்ச் 30– குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனை குவைத்தின் மின்சார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில் தங்கள் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள தப்ரிஸ் பெட்ரோகெமிக்கல் அமைப்பின் மீது எதிர்தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது இந்த மோதலின் தொடக்கமாக அமைந்தது. இதனால் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதன் எதிரொலியாக பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் பகிர்மானம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இப்போது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளின் குடியிருப்பு மீது நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தாக்குதல் விரிவு செய்யும் நோக்கில் இந்த முடிவு என ஈரான் இதை சொல்லியுள்ளது. அதே நேரத்தில் தரைவழி தாக்குதலுக்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த சூழலில் குவைத் நாட்டில் உள்ள மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. இதை திங்கட்கிழமை (மார்ச் 30) அன்று குவைத் அரசு உறுதி செய்தது. “குவைத் அரசுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டுள்ள தாக்குதலின் ஒரு பகுதியாக, மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலைய சேவை கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த கட்டடம் பெரிய அளவில் சேதமடைந்தது” என்று குவைத் மின்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரில் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்புள்ள அமெரிக்க ராணுவச் சொத்துகள் சேதம் பென்டகன் அதிகாரி தகவல்
வாசிங்டன், மார்ச் 30– ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமெரிக்காவின் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரான் உடனான மோதல் தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்காவிற்கு சுமார் 1.4 பில்லியன் டாலர் முதல் 2.9 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி முதல் ரூ.29,000 கோடி வரை) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை பென்டகன் முன்னாள் பட்ஜெட் அதிகாரி எலைன் மெக்கஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மேலும், குவைத் விமானம் தவறுதலாகச் சுட்டதில் மூன்று எஃப்-15இ ரக விமானங்கள் விழுந்து நொறுங்கின.
ஈராக் வான்பரப்பில் இரண்டு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மோதிக்கொண்டதில் ஆறு வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அய்ந்து கேசி-135 ரக விமானங்கள் சேதமடைந்து தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.
இது தவிர, சுமார் 12-க்கும் மேற்பட்ட அதிநவீன ‘எம்.கியூ-9 ரீப்பர்’ வகை ஆளில்லா உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் வைக்கப்பட்டுள்ள ரேடார் அமைப்புகளும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
கிரீஸ் நாட்டின் சூடா விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு’ போர்க்கப்பலிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், 3 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க ராணுவ சொத்துகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இந்த மோதலில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; சுமார் 290 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மற்றும் இழந்த ராணுவத் தளவாடங்களை மீண்டும் வாங்குவதற்காக சுமார் 200 பில்லியன் டாலர் கூடுதல் நிதியை ஒதுக்க அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை என்ஜினை
வெற்றிகரமாக சோதித்த வடகொரியா!
பியோங்யாங், மார்ச் 30- அமெரிக்காவை தாக்கும் திறனுடைய, அதிக உந்துவிசை கொண்ட அதிநவீன திட-எரிபொருள் ஏவுகணை என்ஜினை, அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதித்த வடகொரியா. அணு ஆயுத ஏவுகணைகளின் உந்துவிசையை 2,500 கிலோ நியூட்டன் வரை அதிகரித்து, அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் அதிவேகத்தில் தாக்கும் திறனை இச்சோதனையில் நிரூபிக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
