5 மாநில சட்டப்பேரவைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் வியூகங்கள் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் கணிசமாக உள்ள பழங்குடியின மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை பா.ஜ.க. மேலிடம் தேர்தல் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துகிறது.
அயோத்திக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அங்குள்ள ராமன் கோயிலில் சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார். உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் மற்றும் ஆன்மிகத் தலைவர் மாதா அமிர்தானந்தமயி முன்னிலையில், ‘ராம’ தாமிரத் தகடை அவர் பிரதிஷ்டை செய்தார். பின்னர் பால ராமருக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட அவர், நாட்டு மக்களின் செழிப்புக்காகப் பிரார்த்தனை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவரின் இந்தப் பயணம் மற்றும் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் முன்னறிவிப்பின்றி அவர் மேற்கொண்ட தனியார் நிகழ்ச்சிகள் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் சில முக்கியக் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் பழங்குடியின மக்களின் வாக்குகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பிம்பத்தை முன்வைத்து, அம்மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற பா.ஜ.க. முயல்வதாகக் கூறப்படுகிறது. “குடியரசுத் தலைவர் எந்தக் கோயிலுக்குச் செல்வதும் அவரது தனிப்பட்ட உரிமை மற்றும் சுதந்திரம். ஆனால், தேர்தலை ஒட்டி இத்தகைய நிகழ்வுகள் திட்டமிடப்படுவது, பிரதமர் மோடியின் தேர்தல் நாடகத்தில் குடியரசுத் தலைவரையும் ஒரு பாத்திரமாக மாற்றிவிட்டதோ?” என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
“பழங்குடியின மக்களின் உணர்வுகளைத் தேர்தல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே குடியரசுத் தலைவரின் இந்தத் திடீர் ஆன்மிகப் பயணங்கள் பார்க்கப்படுகின்றன.” – என்பது தேர்தல் ஆய்வாளர்கள் கருத்து.
புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவிற்கு கொரியர் மூலம் அழைப்பிதழ் அனுப்பியது, ராமன் கோவிலில் முதல் முதலாக சென்ற போது ஒரிஜினல் சிலையை திரைக்குப் பின்னால் மறைத்து போலி ராமன் சிலையை வணங்க வைத்தவர்கள் தற்போது பழங்குடியினரின் வாக்குகளை பெற நடக்கும் இந்த நாடகம், அரசின் உயரிய பதவியில் இருப்பவர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் ஒன்றாக தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்யும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அயோத்தியில் ராமன் சிலையை வணங்க வைப்பதிலும் போலி ராமன்!
அயோத்தியில் ராமன் கோயில் திறப்பு விழா விற்குக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு இல்லை அது மட்டுமல்ல; நாடாளுமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவிற்கும், இந்தியாவின் முதல் குடி மகளான குடியரசுத் தலைவருக்கு அழைப்பு இல்லை.
ஆனால், தேர்தல் நேரத்தில் பழங்குடியின மக்களின் வாக்குகளை வாரிக் கொள்ள –அம்மக்கள் அதிகம் உள்ள மேற்கு வங்காளம், அசாம் பகுதிகளில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி வகையறாக்கள் எதைச் செய்தாலும் அதற்கு நேரிடைப் பொருள் கிடையாது – அதற்குள் கண்ணி வெடிகள் புதைந்திருக்கும் என்பது மட்டும் உண்மை – உண்மையே!
