தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 15.3.2026 அன்று மாலை
4 மணிக்கு அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் விதிமுறை நடைமுறையில் பின்பற்றப்பட வேண்டிய பல உடனடி நடவடிக்கைகள் செயலுக்கு வந்துவிட்டன.
அதில் குறிப்பாக, 50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் நடக்கும்போது நகை, துணி மணிகள் முதலியவற்றை வாங்கவும், விவசாயிகள் நெல், தானியம் விற்று வரும் வரவு, ஆடு, மாடு சந்தைகளில் விற்று வரவு வரும் பணத்தை எடுத்துச் செல்லுதல் போன்ற அன்றாட வாழ்வின் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் எளிய, நடுத்தரக் குடும்பத்தவர்கள், வங்கியில் போட, இத்தகைய வணிகம்மூலம் கிடைத்தத் தொகையை எடுத்துச் செல்லும் சிறு வியாபாரிகள், அப்பாவிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். திருமண நிகழ்வு நடவடிக்கைகளேகூட தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பு முடியும் ஒரு மாத காலத்திற்கு மிகவும் சிக்கலாகவும், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி, மக்கள் விரோத நடவடிக்கையாகவும் கருதப்படுகின்றன!
வாக்களிப்போரின் கோபத்திற்கும், விரக்திக்கும், வேதனைக்கும்கூட வழி செய்கிறது. இதைத் தவிர்த்து, நடைமுறையில் மற்ற தவறான முறைகளை விழிப்போடு கண்காணிக்க வழிமுறையை ஆராய்ந்து செய்யுங்கள்!
‘அல்லல்பட்டு ஆற்றாது அழுத’ ஏழை விவசாயிகள், வியாபாரிகள் ஆகி யோரின் நிலை அறிந்து, தக்க மாற்றம் செய்யவேண்டியது அவசியம்,
அவசரம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
21.3.2026
