உலகின் பல நாடுகளிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா! சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அண்ணன் அழகிரி அவரின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளை (மார்ச் 28) வேரை நினைத்து உறுதியைப் புதுப்பிக்கும் நாளாக நடத்திடுவோம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேரான அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான வரும் மார்ச் 28 அன்று வேரை நினைத்து உறுதியைப் புதுப்பிக்கும் நாளாக நடத்திடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அறிவாசான் தந்தை பெரியாரால் 1925 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற, சுயமரியாதை இயக்கம் (The Self Respect Movement) அதன் நூற்றாண்டு நிறைவு உலகெல்லாம் பற்பல நாடுகளிலும் கொள்கைத் திருவிழாக்களாக சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி, நூறாண்டு நிறை விற்குப் பின்னரும், அக்கொள்கை பரப்பு விழாக்கள் தொடர்கின்றன!

உலகின் பல நாடுகளிலும்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா!

அமெரிக்காவின் ‘‘பெரியார் பன்னாட்டு அமைப்பு’’ மூலம், நான்கு மாநாடுகள், மூன்று கண்டங்களில் நடந்தேறி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஓர் உலக மானிட அறிவு விடுதலை இயக்கம் என்று காட்டி, உலகப் பந்தில் உலா வரச் செய்து வருவது பாராட்டி வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டைத் தாண்டி, ஜோதிபாபூலே, சாவித்திரி பாய் பூலே, சத்திரபதி சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் மண்ணான மராட்டியத்தில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மும்பையில் இரண்டு நாள்கள், மூன்று மொழிகளில் (மராட்டியம், ஆங்கிலம், தமிழ்) வெற்றிகரமாக நடத்தின மராட்டிய மாநில திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும்! (3, 4.1.2026)

அதுபோல, கடந்த பிப்ரவரி 28 இல், கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மாநாடு – கருத்தரங்கம் முதலியன கன்னடம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளில் சிறப்பாக நடைபெற்று வாகை சூடியது! (28.2.2026)

புதுடில்லியில் நேற்றும் – இன்றும்!

அதன் தொடர்ச்சியாக, நாட்டின் தலைநகரமான புதுடில்லியில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவையொட்டி கருத்தரங்க விழாக்கள் – 19, 20 (நேற்றும், இன்றும்) மார்ச் 2026 இல் நடைபெறுகிறது. பெரியார் – மணியம்மை தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் என்ற நிகர்நிலை பல்கலைக் கழகமும் – டில்லி டான்பாஸ்கோ இன்ஸ்டி டியூட்டும் இணைந்த – பேராசிரியர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், சட்ட அறிஞர்கள், வழக்குரைஞர்கள், டாக்டர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

(காணொலி மூலம், நான் தலைமை அழைப்பாளராக கலந்துகொண்டேன்).

இன்னமும் தொடர்ந்து பற்பல பகுதிகளிலும், சுயமரியாதை இயக்கக் கொள்கை முழக்கங்களும், திட்டங்களும், மாநில, ஒன்றிய அரசுகளால் ஏற்று சட்ட வடிவங்களும் பெற்றிருக்கின்றன.

சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் அஞ்சாநெஞ்சன் அழகிரி!

இவ்வளவு வளர்ச்சியைப் பெற – அசைக்க முடியாத ஆலமரமாக – பழுதில்லா விழுதுகள் – திராவிட ஆட்சி – மக்கள் மாட்சி போன்றவையே அடித்தளமாக அமைந்தன. தந்தை பெரியார் ஒரு தனி மனிதரல்ல – நிறுவனம் – ஒரு திருப்பம் – காலகட்டம் – சகாப்தம் என்று சரியாகக் கணித்த பேரறிஞர் அண்ணா போன்றவர்களுக்கு முன்பே, தந்தை பெரியாருடன் அடிநாள் தொட்டே இணைந்து, எதிர்நீச்சல் அடித்து, பிரச்சாரப் பெருமுழக்கம் செய்து, கல்லடி, சொல்லடிகளைத் தாங்கி உழைத்தவர்களில் – வேர்களில் முதன்மையும், முக்கியமும் பெற்றவர் அஞ்சாநெஞ்சன் தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள் ஆவார்கள்!

வறுமையில் வதிந்த நேரத்திலும், வளமையாக வாழ்வதற்குத் தன்னை விற்றுக்கொள்ளாத உயரிய கொள்கைச் சிங்கம் அவர்!

‘எனது ஒரே தலைவர் – வழிகாட்டி – ஆசான் தந்தை பெரியாரே’ என்று தனது இறுதி மூச்சு அடங்கும்வரை தளரா உறுதி – தணியா தலைமையின் கட்டுப்பாட்டை மதித்து, கருப்பு மெழுகுவத்திகளின் முன்னோடியான ‘‘அண்ணன் அழகிரி’’ என்ற அடுத்த தலைமுறையினர் அன்போடு அழைத்த – அந்த அஞ்சாநெஞ்சனின் 126 ஆவது ஆண்டு பிறந்த நாள் வருகிற   ஜூன் மாதம் 6 ஆம் தேதி (அவரது பிறப்பு 20.6.1900).

வாலிப வசந்தத்தில் வைத்த நேரத்தைவிட, ஆரியத்தோடுப் போராடிய காலம் அதிகம்! அந்த எடுத்துக்காட்டான சுயமரியாதைப் போர்ச் சங்கு, வாழ்வின் இறுதி நாள்களில், ‘காசநோய்’ என்ற நோயோடு போராடியது.

ஈரோட்டில், 1948 இல் (23, 24.10.1948) தந்தை பெரியார் கூட்டிய திராவிடர் கழக தனி மாநாட்டில், அறிஞர் அண்ணாவைத் தலைவராக அம்மாநாட்டிற்கு அமைத்ததோடு, அண்ணாவை சாரட்டில் அமர வைத்து, முன்னால் தந்தை பெரியார் நடந்தே வந்து, ‘தலைவன் என்போன் தொண்டர் நாதன்’ என்று உலகுக்கு உணர்த்தினார்.

‘‘இறுதி மரியாதை செலுத்த வந்துள்ளேன்’’ என்று அண்ணன் அழகிரி மிகவும் உருக்கமாக, நா தழு தழுக்க, கண்ணீர் மல்கப் பேசிய பேச்சு, மாநாட்டில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர் பீறிட்டது.  அழுத பல்லாயிரம் தோழர்களில், இந்த 15 வயது இளைஞனும் ஒருவன்!

திருவண்ணாமலையில் அய்யாபற்றி அழகிரி ஆற்றிய வீரனின் கர்ச்சனை!

13.12.1947 அன்று, திருவண்ணாமலையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து – அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி ஆற்றிய பேருரை, ஒரு சுயமரியாதை இயக்கச் செப்பேடு, சிலாசாசனம் – ‘இதோ பெரியாரில் பெரியார்!’ – உலகுக்குப் பெரியார் என்ற பேரொளியைப் படம் பிடித்துக் காட்டிய திராவிடர் இயக்கப் பாட நூலாகும்.

அந்த கொள்கைச் சிங்கத்தின் சுயமரியாதை இயக்க மூல வேர்களில் ஒருவரான அஞ்சாநெஞ்சன் பிறந்த நாளை, திராவிட இயக்கம் கொள்கை பரப்பு விழாவாக எங்கெங்கும் கொண்டாடுவோம்!

அவர் மறைந்தது 1949, மார்ச் 28 ஆம் தேதி – ஒரு வார இடைவெளி!

திராவிட இயக்கத் தலைவர்களில் சிலர் 60 வயதையே தாண்டாத ஒரு கெடு வாய்ப்பு என்பது வேதனையான காலக்கொடுமை!

தளபதி அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் – தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை இருக்கும் நிலையிலும், திராவிடர் கழகம், வேரை நினைத்து உறுதியைப் புதுப்பிக்கும் நாளாக – மக்களிடையே பரப்புரை நடத்திட, நாடெங்கும் பரவலாக ஏற்பாடுகள் –தலைமைக் கழக வழிகாட்டல்படி நடத்திட வேண்டுகிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

    திராவிடர் கழகம்

சென்னை   

20.3.2026          

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *