புதுடில்லி, மார்ச் 20- டில்லியில் உள்ள புகழ்பெற்ற கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மய்யத்தில் (ILBS), பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு (EWS) உரிய சிகிச்சை சலுகைகள் வழங்கப்படுவதில்லை என தொடரப்பட்ட வழக்கில், டில்லி அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘சமூக நீதி’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
அரசு நிதியுதவி பெறும் ILBS மருத்துவமனையில், உள் மருத்துவப் பயனாளிகளுக்கான படுக்கைகளில் 10 சதவீதத்தை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும். புற மருத்துவப் பயனாளிகளில் (OPD) 25 சதவீதத்தினருக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இந்த விதிகளைப் பின்பற்றாமல், நகரின் மிக அதிகக் கட்டணம் வசூலிக்கும் மய்யமாக ILBS மாறி வருகிறது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு (பிரிவு 14 மற்றும் 21) எதிரானது.
“ஏழைகளுக்குக் குறைந்த கட்டணத்தில் முறையான சிகிச்சை கிடைப்பது அவர்களின் அடிப்படை உரிமை. அது ILBS-இல் மறுக்கப்படுகிறது.” – மனுதாரர் தரப்பு.
தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு 18.3.2026 அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் சத்யகம் ஆஜராகி வாதிட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு டில்லி அரசு மற்றும் ILBS நிர்வாகத்திற்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஏழை மருத்துவப் பயனாளிகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எங்கே? டில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தாக்கீது
Leave a Comment
