மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும் என்பது…
எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல!
மக்களாகிய உங்களுக்காக; உங்கள் சந்ததியினருக்காக;
அவர்களின் நல்வாழ்வுக்காக; சுயமரியாதைக்காக…!
அனைவரும் அரும்பணியை, வில்லெடுத்து நாணேற்றியோர் குறியெல்லாம் இலக்கின்மீதே தவிர, வேறு எப்பக்கமும் இல்லை என்பதை நினைத்து, பருவம் பாராமல், ஏப்ரல் 23 வரை நம்மை எரியும் மெழுகுவத்திகளாக கரைத்துக் கொண்டு, கடமையாற்றிடுவோம்! கள வெற்றியை அறுவடை செய்ய ஆயத்தமாவோம்! தந்தை பெரியார் கூறிய ‘கட்டுப்பாடே’ மிக முக்கியம், மறவாதீர்! வெறும் வார்த்தைக் கோவையல்ல – வினை முடிக்கும் திட்பம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த 15.3.2026 அன்று மாலை 4 மணிக்கு, அய்ந்து மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை அறிவித்து, அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையைத் தம் அதிகாரத்தின்கீழ் கொண்டு வந்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் நடுநிலை தவறாமல், நியாயத் தராசின் முள், ஒரு பக்கமாகச் சாயாமல், விருப்பு – வெறுப்பின்றி, போட்டியிடும் அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்கள் ஆகியோரிடம் எந்தவிதப் பாரபட்சமும் காட்டாமல் கடமையாற்றிட வேண்டியது தலையாய கடமையாகும்!
‘‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக நடந்துகொள்ளவேண்டும்’’ என்பது ஒரு நெடுங்காலத்து, ஆங்கிலச் சொற்றொடர் கருத்தாகும்.
இதற்குமுன் எப்போதும் நடந்திராத
ஓர் அதிர்ச்சிக்குரிய நடவடிக்கை!
ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது, இந்திய ஜனநாயகத் தேர்தல் நடைமுறைகளில் – இதற்குமுன் எப்போதும் முன் நடந்திராத ஓர் அதிர்ச்சிக்குரிய நடவடிக்கையாகும்!
அந்த எண்ணங்களை மக்கள் மனதிலிருந்து அகற்றி, தங்கள் மீதான அவப்பெயரை நீக்குவதற்கு இந்த அய்ந்து மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல்கள், ஒரு நல் வாய்ப்பாகும்.
இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
இதைச் சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறதா? அல்லது ‘எங்களது கடமையாற்றல் ஒரு பால் சாய்ந்தே இருக்கும்! நீங்கள் என்ன சொல்வது, நாங்கள் என்ன செய்வது? எங்களுக்குத் தெரியாதா?’ என்ற அதிகாரத் தோரணையில், ‘ஏற்றப்பாட்டிற்கு எதிர்ப்பாட்டு’ என்ற படியான போக்கை நீடிக்கப் போகிறதா? என்பது இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
புதுச்சேரிக்கும் – தமிழ்நாட்டிற்கும் சட்டமன்றத் தேர்தல் பெரும்பாலும் ஒரே தேதியில், ஒரு தடவையில் நடப்பது வழமை!
‘செவி கேளாக் காதில் ஊதிய சங்காக’
ஆகிவிடக் கூடாது!
இப்போது திடீரென்று புதுச்சேரி தேர்தல் நாள் என்று ஏப்ரல் 9 ஆம் தேதியை அறிவித்திருப்பதற்கு என்ன காரணம்? என்று புரியவில்லை. அதனால், அம்மாநில காங்கிரஸ் எம்.பி., திரு.வைத்தியலிங்கம்கூட அதனைச் சுட்டிக்காட்டி, வேறு ஒரு நாளில், முன்பைப்போல, தமிழ்நாட்டிற்குத் தேர்தல் நடக்கவிருக்கும் ஏப்ரல் 23 ஆம் தேதியே புதுச்சேரிக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார். இது வெறும் ‘செவி கேளாதார் காதில் ஊதிய சங்காக’ ஆகிவிடக் கூடாது!
மக்கள் சக்தி என்ற மகத்தான சக்தி!
தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிக் கட்சிகளில், ஆளும் தி.மு.க.வின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தங்களது கொள்கை பலத்தினாலும், சாதனைகளைத் தொடர்ந்து செய்ததனாலும், மக்கள் சக்தி என்ற மகத்தான சக்தி என்றும் எங்கள் பக்கம் என்று உறுதியோடு தங்களது தேர்தல் வியூகத்தினையும், வினைத்திட்பத்தினையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.
‘அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி’ என்று பெயரளவில் சொல்லப்படும் கூட்டணியில், பல முக்கிய முடிவுகளை – அதிகாரப்பூர்வமாக ஆணையிடும் வகையில், தேசிய ஜனநாயகக் (NDA) கூட்டணிதான் எல்லா பணிகளையும் செய்து வருகிறது. புதிதாக சேர்க்கும் பணி, கூட்டணிக்கு அழைக்கும் பணி, இணைக்கும் பணி எல்லாம் அவர்களே செய்கிறார்கள் என்றாலும், பலங்குறைந்த நிலையில் இருப்பது அந்தக் கூட்டணியின் பரிதாப நிலைதான்!
சில வித்தைகளையும், அவர்களின் அதிகாரத்தையும் பயன்படுத்தி முயற்சிகள் செய்கின்றனர்!
உண்மையான போட்டி என்பது இவ்விரு கூட்டணிகளுக்கு இடையில்தான். தி.மு.க. கூட்டணி மீண்டும் வெற்றி பெறாது தடுக்கவேண்டுமானால், அதற்கு தற்போது அமைந்துள்ள என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளின் பலம் போதுமானதாக இல்லாததால், புதிதாக அரும்பியுள்ள – அரசியல் கட்சி என்ற பெயர் மாற்றம் அடைந்துள்ள ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தையும் இணைக்கச் சில வித்தைகளை, தங்களின் அதி காரத்தையும் பயன்படுத்திச் செய்யப்படும் முயற்சிகள், இதுவரை நிறைவேறியதாகச் செய்திகள் வரவில்லை.
என்.டி.ஏ. கூட்டணி என்கிற அ.தி.மு.க. கூட்டணியினருக்கு இருந்த எதிர்பார்ப்பும், சந்திக்கும் ஏமாற்றங்களும் நாளும் நம்பிக்கை இன்மையையே அவர்களுக்குப் ‘பரிசாக’ அளிக்கும் நிலை கள யதார்த்தமாகும்! காக்கா – நரி – வடை கதை போல உள்ளது எதிர்க்கட்சி கூட்டணி நிலை!
மாவட்டச் செயலாளர்கள்,
எம்.பி.,க்கள் கூட்டத்தில்
தி.மு.க. தலைவரின் கனிந்த அறிவுரை!
தி.மு.க. கூட்டணியில் மிகக் கடுமையாக உழைத்து, இரண்டாம் முறை தனது தலைமையில் ஆட்சி மிகவும் உறுதி என்ற மனதிட்பத்துடனும், மனத்திண்மையுடனும், அரசியல் விவேகத்துடனும் (Political Sagacity) நடந்துவரும்போது – தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.,க்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். ஒரு தலைமை, எப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், எப்படியெல்லாம் நடந்து கடமையாற்றவேண்டுமோ, அப்படி ஒளிவு மறைவின்றி தனது அனுபவத்தில் கனிந்த அறிவுரையை இடித்துக் கூறியுள்ளார் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்.
‘‘நாம் நடத்திய அத்தனைக் கூட்டங்க ளையும் மாநாடாக மாற்றிய பெருமை உங்களையே சேரும். குழப்பம் விளைவிப்போரின் சதியை முறியடித்துப் பலமான கூட்டணியை அமைத்திருக்கின்றோம். நலத் திட்டங்களால் நாமே வெல்வோம் என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்.
தேர்தலுக்கு இன்னும் 39 நாள்கள் மட்டுமே உள்ளன. 200 தொகுதிகளில் நாம் வென்றாக வேண்டும். 234 தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என நினைத்துப் பணியாற்றுங்கள்! தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நடப்பது தலைவருக்குத் தெரியவா போகிறது என நினைக்கவேண்டாம். அத்தனைத் தொகுதிகளையும் கண்காணிக்கிறேன்; எனக்குத் தகவல் வந்துவிடும். அதிக வெற்றி பெற்றுத் தருவோருக்கே அமைச்சர் பதவி; சீனியாரிட்டி இரண்டாம் பட்சம்தான்’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தந்தை பெரியார் கூறிய ‘கட்டுப்பாடு!’
‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்’ என்ற வள்ளுவர் கூற்றை அடிநாதமாக நினைவிற் கொண்டு, தந்தை பெரியார் கூறியபடி ‘‘‘கட்டுப்பாடு’ என்பதற்குச் சரியான பார்வையும், மிளிரும் பொருளும் ஒரே அர்த்தம்தான். மற்ற மற்ற சொற்களான ‘கடமை’, ‘கண்ணியம்’ போன்றவற்றிற்குக்கூட பல பொருள் சொல்லப்படும்’’ என்பதை மனதில் கொள்வீர்!
அதை நமது தி.மு.க. மற்றும் கூட்டணிச் செயல்வீரர்கள் கருத்திலேந்தி, களமாட ஆயத்தமாக வேண்டும்.
மக்கள் நம் பக்கம் – மற்றவர் எப்பக்கத்தில் இருந்தாலும், எத்தனை ‘சொத்தைகள்’ சேர்ந்து ‘வித்தைகள்’ புரிந்தாலும், அய்ந்தாண்டு தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையே சரித்திரப் படிக்கட்டுகளாக்கிக் கொண்டு, சென்னை கோட்டையை நோக்கி, வேக நடைபோட்டு, விவேகத்தின் வெற்றிக் கனி பறிக்க ஆயத்தமாகிவிட்டார் உழைப்பின் உருவமாகவும், உரிமை முழக்கமாகவும், பண்பாட்டின் எடுத்துக்காட்டாகவும், கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கே, தம் கட்சியைவிட – முன்னுரிமை தர வலியுறுத்தும் ஒப்பற்ற ஆற்றல், அன்பின் சின்னமுமான நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
ஏப்ரல் 23 வரை நம்மை எரியும் மெழுகுவத்திகளாகக் கரைத்துக் கொண்டு கடமையாற்றிடுவோம்!
இந்த அனைவரும் அரும்பணியை, ‘வில்லெடுத்து, நாணேற்றியோர் குறியெல்லாம் இலக்கின்மீதே தவிர, வேறு எப்பக்கமும் இல்லை’ என்பதை நினைத்து, பருவம் பாராமல், ஏப்ரல் 23 வரை நம்மை எரியும் மெழுகுவத்திகளாக கரைத்துக் கொண்டு கடமையாற்றிடுவோம்!
கள வெற்றியை அறுவடை செய்ய ஆயத்தமாவோம்!
‘திராவிடம் வெல்லும் – அதை
வரலாறு என்றும் சொல்லும்!’
இது வெறும் வார்த்தைக் கோவையல்ல – வினை முடிக்கும் திட்பம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.3.2026
