ஓபிசி கிரீமிலேயர் வரையறை: முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் (ஓபிசி) கிரீமிலேயர் அந்தஸ்தைத் தீர்மானிக்க, பெற்றோரின் வருமானம் மட்டுமே அடிப்படையாக இருக்க முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

கடந்த 2015 இல் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஓபிசி பிரிவினரில் சிலரின் பெற்றோர் பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் என்பதால், இவர்கள் கிரீமி லேயர் அடிப்படையில் இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆர்.மகாதேவன் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர்.

பொதுத் துறை நிறுவனங்கள், குடிமைப் பணி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள் ஆகியவற்றில் 27% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெற வேண்டும்; ஒன்றிய, மாநில அரசுகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என 1980இல் மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது. இப்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என 1990இல் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அறிவித்ததற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அடுத்து பிரதமரான நரசிம்ம ராவ் இதை நடை முறைப்படுத்திய நிலையில், அதை எதிர்த்து பத்திரிகையாளர் இந்திரா சாஹ்னி 1992இல் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓபிசி பிரிவினருக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 27% இடஒதுக்கீடு வழங்கித் தீர்ப்பளித்தது. அதேநேரம், மொத்தமாக இடஒதுக்கீடு 50%அய்த் தாண்டக் கூடாது. கிரீமி லேயர் நீக்கம் உள்ளிட்ட முக்கிய விதிகளை இந்தத் தீர்ப்பு வருந்தது. இதன்படி அரசமைப்புப் பதவி வகிப்போர், குரூப் ஏ அரசு அதிகாரிகள் அல்லது 40 வயதுக்குள் குரூப் ஏ பதவிக்கு உயர்ந்தவர்கள், குரூப் பி அரசு அதிகாரிகள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், ஆயுதப் படை அதிகாரிகள், தொழில்முறை வல்லுநர்கள் உள்ளிட்டோரின் வாரிசுகள் கிரீமி லேயராகக் கருதப்படுவர். அரசு  சாராத் துறையினருக்கான வருமான உச்ச வரம்பு 1993இல் ரூ.1 லட்சமாக வகுக்கப்பட்டது. 2017இல் இருந்து ரூ. 8 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களின் வாரிசுகள் கிரீமிலேயராகக் கருதப்படுவர் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ஓபிசி கிரீமி லேயரை முடிவுசெய்ய முடியாது: அவர்களின் பதவி, அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதைக் கணக்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. இதன்படி ஓபிசி பிரிவினரின் ஊதியம், விவசாயம் உள்ளிட்ட பிற தொழில்கள் வழியாக ஈட்டும் வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

ஏற்கெனவே ஒன்றிய, மாநில அரசுப் பணியில் உள்ளவர்களின் பணி ஒதுக்கீடு, அவர்களின் தகுதியின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படலாம். முன்பு பணி ஒதுக்கீடு பெறாதவர்கள் இப்போது பணி வாய்ப்பைப் பெறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு இடமளிக்க, தேவைப்பட்டால் அரசு கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடஒதுக்கீடு என்பது வரலாற்றுரீதியில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை உயர்த் துவதற்கான வழி என்பதை உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு மீண்டும் உரக்கச் சொல்லியிருக்கிறது.

நன்றி: ‘இந்து தமிழ்திசை’
தலையங்கம் (17.3.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *