மஞ்சை வசந்தன்
விடைகாண முடியாதவற்றிற்கு காரணமாகக் கற்பித்துக் கொள்ளப்பட்டதே கடவுள். கடவுள் ஓர் அனுமானம். உலக அமைப்பையும், உடல் அமைப்பையும், உலக இயக்கத்தையும் பார்த்த அக்கால மக்கள் இவற்றிற்கெல்லாம் ஒரு காரணகர்த்தா இருக்க வேண்டும். அக்காரணகர்த்தாவே கடவுள் என்று அனுமானித்தனர்.
ஆக, கடவுள் என்பது காரணம் புரியாமையின், அறியாமையின் விளைவாய்க் கற்பிக்கப்பட்டது ஆகும். இப்படி உலக அளவில் மக்களிடையே எழுந்த கடவுள் நம்பிக்கையை ஆதிக்கவாதிகள் தங்களுக்கு ஆயுதமாகப் பயன்படுத்தினர்.
ஆதிக்கம் என்பது பொருளாதார அடிப்படையாலும், சமுதாய அடிப்படையாலும் செய்யப்படுவது. மற்ற நாடுகளில் பொருளாதார அடிப்படையில் ஆதிக்கம் நிகழ்த்தப்பட்ட நிலையில் இந்தியாவில் சமுதாய அடிப்படையாலும் ஆதிக்கம் அதிக அளவில் நிகழ்த்தப்படுகிறது.

கடவுள் கருவியானது ஏன்?
இந்த இருவகை ஆதிக்கங்களுக்கும் கடவுள் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. ஆதிக்கம் எங்கு நிகழ்ந்தாலும் ஆதிக்கம் செலுத்துகின்றவர்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், ஆதிக்கம் செலுத்தப்படுகின்றவர்கள் பெரும் எண்ணிக்கை யிலும் இருப்பர். எனவே, ஆதிக்கம் செலுத்தப்படு கின்ற மக்கள் விழிப்பு பெற்று, எழுச்சி பெற்று எழுந்துவிட்டால், ஆதிக்கம் செலுத்தும் சிறு கூட்டத்தால் அதை எதிர்கொள்ள முடியாமல் தோற்றுப்போவர்; ஆதிக்கம் அழிக்கப்பட்டுவிடும். இது நிகழக்கூடாது என்பதற்குத்தான் கடவுளை ஆதிக்கவாதிகள் ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.
பொருளாதார அடிப்படையில் முதலாளி – தொழிலாளி, பணக்காரன் – ஏழை, நிலம் உடையவன் – நிலமற்றவர் என்று பிரிந்து நிற்பர். இவர்களுள் முதலாளிகள், பணம் படைத்தவர்கள், நிலம் பெற்றவர்கள், தொழிலாளர்களை, விவசாய கூலிகளை, உழவர்களை, குத்தகைதாரர்களை, ஏழைகளைச் சுரண்டி, ஏமாற்றி பெரும் லாபம் ஈட்டுவர். அவர்களை அடிமைப்படுத்துவர்.
ஏன் அவன் மட்டும் முதலாளியாய் இருக்கிறான், நாம் ஏன் தொழிலாளியாய் இருக்கிறோம் என்ற சிந்தனை பெரும்பான்மை மக்களுக்கு வரும்போது, இயல்பாகவே, ஆதிக்கவாதிகள் மீது, முதலாளிகள் மீது அவர்களுக்கு வெறுப்பும், எதிர்ப்பும் வரும். அந்த வெறுப்பும், எதிர்ப்பும் வராமலிருக்கக் கடவுள் ஒரு காரணமாகக் கற்பிக்கப்பட்டது.
கடவுள் உங்களை ஏழையாகப் படைத்தார், எங்களைப் பணக்காரர்களாகப் படைத்தார். நீங்கள் போன பிறவியில் செய்த பாவம் இப்பிறவியில் ஏழையாய் இருக்கிறீர்கள், நாங்கள் சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தால் பணக்காரர்களாக, முதலாளிகளாக இருக்கிறோம் என்று கூறி கடவுளையும், விதியையும், முற்பிறவியையும் – இப்பிறவியின் வாழ்வு வளத்திற்கும், வறுமைக்கும் காரணம் என்று கூறி ஆன்மிக அடிப்படையிலான கருத்தைக் கட்டமைத்தனர்.
கடவுளை நம்பிய மக்கள், கடவுளோடு தொடர்புடைய பாவம், புண்ணியம், முற்பிறவி, கடவுள் விதி இவற்றையும் நம்பினர். தங்கள் வறுமைக்கும், தாழ்விற்கும், ஆதிக்கவாதிகளின் வளமைக்கும், உயர்விற்கும் காரணம் கடவுளும், விதியுமே என்று ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைந்தனர். ஆதிக்கவாதிகளை எதிர்த்து எழுந்த அவர்களின் எழுச்சி அடங்கிப் போயிற்று.

சமுதாய ஆதிக்கம்
மற்ற நாடுகளில் பொருளாதார அடிப்படையில் செய்யப்படும் ஆதிக்கம், இந்தியாவில் சமுதாய அடிப்படையிலும் செய்யப்படுகிறது. பிரம்மா படைக்கும் போதே நான்கு வருணங்களாக மக்களைப் படைத்தார். 1.பிராமணர், 2.ஷத்திரியர், 3.வைசியர், 4.சூத்திரர் என்பதே அப்பிரிவுகள். வருணங்களைப் படைத்த பிரம்மா, வருணங்களுக்குரிய கடமைகளையும் படைத்தார். “பிராமணன் எல்லோரிலும் உயாந்தவன். மன்னனைக் காட்டிலும் உயர்ந்தவன்” என்று கூறினர். “பிராமணனுக்கு பணிவிடை செய்வதே சூத்திரனுக்கு வேலை.எல்லா பொருள்களுமே பிராமணனுக்கு உரியவை. பிராமணன் பிறரிடமிருந்து தானம் பெற்றாலும் அப்பொருளும் உண்மையில் பிராமணனுக்கு உரிமையானதே” என்று கூறினர்.
சாஸ்திரங்களே சட்டம்
தாங்கள் கூறுகின்ற கருத்துகளை புனித சட்டங்களாக்க சாஸ்திரங்களை உருவாக்கினார். குறிப்பாக மனுசாஸ்திரம் அதற்காகவே உருவாக்கப்பட்டது. நாட்டை ஆள்வோர் அந்த சாஸ்திரங்களையே சட்டமாக ஏற்று ஆட்சி புரிய வேண்டும் என்றனர். இந்திய நாடு 1947இல் விடுதலை அடைந்த பின் நமக்கென்று அரசியல் சாசனம் எழுதப்பட்டு, நடைமுறையில் இருந்தாலும், அதை மாற்றிவிட்டு மீண்டும் மனுதர்மத்தையே சட்டமாக்க வேண்டும் என்று இன்றும் கூறுகின்றனர் ஆதிக்கவாதிகள்! ஆரியப் பார்ப்பனர்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் சமூகம் முழுவதுமே ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. ஆரியர்கள் வருகைக்கு முன் தாய்வழிச் சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் இருந்தது. பெண்களே ஆட்சியாளர்களாயும், சொத்துக்குரியவர்களாயும் இருந்தனர். ஆனால், ஆரியர் நுழைந்து பரவி தங்கள் கோட்பாடுகளைத் திணித்ததன் விளைவாக ஆண் ஆதிக்கச் சமுதாயமாக இந்தியச் சமுதாயம் ஆக்கப்பட்டது.
பெண்களுக்கு இருந்த உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு பெண்கள் ஆணின் அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களுக்குரிய கல்வி உரிமை, சொத்துரிமை அனைத்தும் பறிக்கப்பட்டது.
பெண்கள் ஆண்களை நம்பியே, சார்ந்தே வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. அவர்களுக்கென்று வருவாய் ஏதும் இல்லாமல் ஆண்களையே நம்பி வாழ வேண்டும் என்று ஆக்கப்பட்டனர்.
பிள்ளை பெறும் இந்திரமாகவும், வீட்டு வேலை செய்யும் பணியாளாகவும் பெண்கள் ஆக்கப்பட்டனர். கணவன் இறந்தால் பெண்ணுக்கு வாழும் உரிமைகூட பறிக்கப்பட்டு, கணவனை எரிக்கும் சிதையிலேயே அவளை எரிக்கும் கொடுமையும் நடப்பில் வந்தது. இதுவும் ஆன்மிகத்தின் பெயராலே செய்யப்பட்டது. இக்கொடுமைச் செயலை சங்கராச்சாரியே ஆதரித்துப் பேசினார்.
“கணவன் எரியும் நெருப்பில் உயிரோடு எரிக்கப்படும் பெண் சுவர்க்கம் அடைவாள்” என்று ஆசை காட்டினார். அவள் உடுத்தியிருந்த ஆடை கூட சிதை நெருப்பில் எரியாது என்று பொய்யான பெருமைகளையெல்லாம் கூறினார் (சங்கராச்சாரியின் ‘தெய்வத்தின் குரல்’ நூலைக் காண்க).
மேலே கூறப்பட்ட நான்கு வருணத்திற்குரிய கடமைகள் மனுதர்மத்தில் சட்டமாகப் பதியப்பட்டன. பெண்களுக்கான வாழ்வு முறையும் அதிலே சட்டமாகப் பதியப்பட்டன. இதன்மூலம் ஆன்மிக அங்கீகாரமும், கடவுள் பெயரால் இவற்றிற்குக் கிடைத்தன.

ஆதிக்க பீடம் ஆன்மிகம்
உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் பீடங்களாக ஆன்மிக மய்யங்கள் செயல்பட்டன. ஆன்மிகம், கடவுள், மதம், நம்பிக்கைகள் தனிப்பட்ட செயல்முறைகள் என்று கொள்ளப்படாமல், அவை ஆட்சியின், அதிகாரத்தின் அடிப்படையாக மாற்றப்பட்டன.
ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்தும், ஆட்சியாளர்களுக்கு ஆணையிடும் மய்யங்களாக ஆன்மிக நிலையங்கள், மடங்கள் மாறின. நாட் டையாளும் ஆட்சியாளர்கள் கூட அங்கு சென்று மண்டியிடும், ஆணையேற்கும் நிலையே நிலவுகிறது.
மத ஆட்சி
கடவுள் நம்பிக்கை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மதங்கள், காலப்போக்கில் ஆட்சி மய்யங்களாகவும் மாறின. மத அடிப்படைக் கோட்பாடுகள் ஆட்சியாளர்களின் கொள்கைகளாகவும் கொள்ளப்பட்டன.
இஸ்லாமிய நாடுகள், கிறித்தவ நாடுகள், இந்து நாடுகள், பவுத்தத நாடுகள் என்று மத ஆதிக்கம் மிக்க நாடுகள் பல உள்ளன.
பல நாடுகளில் கருத்துச் சுதந்திரங்கள் பறிக்கப்படுகின்றன. மதக் கோட்பாடுகளுக்கு எதிராய் கருத்துக்கூற முடியாது என்ற நிலையே இன்றளவும் பல நாடுகளில் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, மதச்சார்பின்மைக் கொள்கை அரசுக் கொள்கையாக இருப்பதால், இங்கு வெளிப்படையாக மத ஆதிக்கத்தை செலுத்த இயலாமல் போனாலும், மறைமுகமாக, இந்துத்துவா கோட்பாடுகளைத் திணிக்கும் செயல்பாடுகள் வளர்ந்து வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் ஆதரவுடன் செயல்படும் பி.ஜே.பி. கட்சியும் நாட்டில் மத அடிப்படையிலான மோதல்களைத் திட்டமிட்டு உருவாக்கி, அதன்மூலம் மத உணர்வுகளை மக்களிடையே ஊட்டி, அதை மதவெறியாக மாற்றி, அதையே வாக்குகளாக மாற்றி ஆட்சியையும் பிடித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகின்றன.
இதன் விளைவாக – பாபர் மசூதி இடிப்பின் தொடர்ச்சியாக பல வன்முறைகள் நாடு முழுக்க நடத்தப்படுகின்றன. நாட்டை இந்து நாடாக ஆக்கும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர்.
மறுபுறம் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து இதற்கு எதிரான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்மூலம் அரசியல் களமே மத அடிப்படையிலான மோதல்களாக வடிவம் மாறி வருகின்றது! இதற்காக முழுக்க முழுக்க ஆன்மிகம் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, அண்மைக்காலமாக அமைதிப் பூங்காவாக இருந்து வரும் தமிழ்நாட்டில், மதக் கலவரங்களைத் தூண்டி தங்கள் ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்ள மதவாதக் கட்சிகள் முயற்சிக்கின்றன. திருப்பரங்குன்றத்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் நடைமுறையை மாற்றி சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்று மோதலை உருவாக்கிச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். அதிகாரத்தை அடைய, ஆட்சியைப் பிடிக்க, மக்கள் வாக்குகளைப் பெற கலவரங்களை அடி உரங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் ஆதிக்கத்தை உருவாக்க, மதத்தை, கடவுளை, ஆன்மிகத்தைக் கருவியாகப் (ஆயுதமாகப்) பயன்படுத்துகின்றனர். இம்முயற்சியைத் தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கவும் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.
ஆக, ஆதிக்கம் செலுத்த நினைக்கும் எவரும் மக்கள் விழிப்போடும், பகுத்தறிவோடும் சிந்திக்காமல், கடவுள், மதம், பிறவி, விதி, பாவ புண்ணியம் போனற் மூடநம்பிக்கையில், விழிப்பின்றி, விவேகம் இன்றி இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதற்கேற்பவே மக்களைத் தயார்படுத்துகினற்னர். கோயில், பூஜை, திருவிழா என்று தொடர்ந்து மக்கள் ஆன்மிகச் சிந்தனைகளிலே மூழ்கிக் கிடக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். காரணம், இந்த ஆன்மிகம் அவர்களின் ஆதிக்கத்திற்கு ஒரு கருவி, அரண், பாதுகாப்பு ஆகும்.
எனவே, ஆதிக்கம் அகற்ற நினைப்போர் முதலில் மக்களுக்கு பகுத்தறிவுச் சிநத்னைகளை வளர்க்க வேண்டும். கடவுள், பிறவி, விதி, முற்பிறவி போன்றவை பொய்யானவை, உண்மையல்ல என்பதை விளக்க வேண்டும். அதற்கு கடவுள் என்ற அடிப்படையை பொய் என்றும், கற்பனையென்றும் உணர்த்த வேண்டும்.
அதற்கு அறிவியல் கருத்துகளை, அறிவியல் உண்மைகளை, உலக அமைப்பை, உடல் அமைப்பை, உயிர்கள் தோற்றத்தைப் பற்றிய உண்மைகளை விளக்கிக் கூற வேண்டும். கடவுள் என்ற ஒன்று இல்லை, அது எதையும் படைக்கவில்லை, நம் விதியை கடவுள் எழுதவில்லை, பிறவிகள் இல்லை, ‘முற்பிறவிப் பயனால், இப்பிறவி வாழ்வு அமைகிறது’ என்பது தப்பு என்பனவற்றை விளக்க வேண்டும்.
இந்திய அரசமைப்பைக் காக்க வேண்டும். மதவெறியை எதிர்க்க வேண்டும், மதவெறிக்குத் துணை நிற்கும் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற பிரச்சாரங்களை மக்களிடம் முன்னெடுக்க வேண்டும். ஆதிக்கம் ஒழிக்கவும், சமத்துவம், சம உரிமை உருவாக்கவும் அதுவே வழி! சமூகப் போராளிகள், மத இணக்கம் வேண்டுவோர், பகுத்தறிவாளர்கள் இதற்காக உழைக்க வேண்டும். இளைய தலைமுறையை பகுத்தறிவுப் பாதையில் செயல்பட வழிகாட்ட வேண்டும்! ஆதிக்கம் அகற்றவும், ஒழிக்கவும் அதுவே வழி!
