ஆன்மிகப் பயணங்கள் இதயத்தைச் சுத்தப்படுத்துமாம். கேதார்நாத் மலைப் பாதையில் எடுக்கப்பட்ட ஒரு ஒளிப்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இமயமலையின் கடினமான பாதைகளில் பேருந்துகள் செல்ல முடியாத இடங்களில், ‘நப்பா’ என்று அழைக்கப்படும் பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் மூங்கில் கூடைகளைத் தங்கள் முதுகில் சுமக்கிறார்கள். தங்களால் நடக்க முடியாத முதியவர்களையும், உடல்நலம் குன்றியவர்களையும் சுமந்து செல்வது ஒருபுறம் இருக்கட்டும்; ஆனால், ஆரோக்கியமாக இருக்கும் செல்வந்தர்கள் கூட தங்கள் சொகுசு குறையக் கூடாது – கை கால்கள் வலிக்கக் கூடாது என்பதற்காக மனிதாபிமானமின்றி மனிதர்களை வாகனமாகப் பயன்படுத்துவது எந்த வகை அறம்?
சிரிப்பும் – சிதறிய மனிதாபிமானமும்!
வைரலாகி வரும் அந்தப் படத்தில், ஒரு சுமை தூக்கும் தொழிலாளர் பாரம் தாங்காமல் நிலைதடுமாறி கீழே விழுகிறார். ஒரு சக மனிதன் தன் முதுகில் சுமந்து வரும்போது கீழே விழுகிறான் என்றால், முதலில் எழ வேண்டியது பதற்றமும் மனிதாபிமானமும் தான். ஆனால், அந்தப் படத்தில் இருப்பவரோ, தான் விழப்போகிறோம் என்ற கவலை கூட இல்லாமல், தன்னைச் சுமப்பவன் படும் வேதனையைச் சிறிதும் உணராமல், முகத்தில் புன்னகையோடு அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பணம் கொடுத்தால் போதுமா? சில நூறு ரூபாய்கள் கூலி கொடுத்துவிட்டால், ஒரு மனிதனின் முதுகையும் சுயமரியாதையையும் விலைக்கு வாங்கிவிட்டதாக அர்த்தமா?
பகுத்தறிவும், மனிதாபிமானமும்!
இங்கேதான் பகுத்தறிவாளர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்கு அப்பால், “மனிதனை மனிதனாக மதிப்பதுதான் உயரிய அறம்” என்பதைப் பகுத்தறிவு போதிக்கிறது. கல்லாய் இருக்கும் கடவுளுக்குச் செய்யும் அபிஷேகங்களை விட, சக மனிதனின் கண்ணீரைத் துடைப்பதே மேலானது. இமயமலையின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் இறைவனைப் பார்க்கத் துடிக்கும் இந்த ‘பக்தர்கள்’, தங்களைச் சுமக்கும் மனிதனின் முதுகில் இருக்கும் காயங்களைப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்.
சக மனிதனைச் சுமையாகக் கருதி, அவன் விழுந்த போதும் அலைபேசியில் சிரிப்பவர் தேடுவது ‘புண்ணியம்’ அல்ல, அது வெறும் அகங்காரம். இந்த லட்சணத்தில் தேடும் புண்ணியத்தை விட, மனிதநேயத்தைப் போற்றும் பகுத்தறிவே மேலானது!
