நாடு முழுவதும் ராணுவம், விமானப்படை, கடற்படையில் காலியாக உள்ள 46,000 பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிக்கு, 8, 10, பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் பணி செய்யும் 4 ஆண்டுகளில் மாத ஊதியமும், 4ஆவது ஆண்டில் ஓய்வு பெறும்போது ரூ.11.71 லட்சம் ஓய்வூதியமாகவும் வழங்கப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய பாதுகாப்பு படைகளில் இளைஞர்கள், இளம்பெண்கள் பணியாற்றும் வகையில் ‘அக்னிபாத்’ திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவம், கடற்படை, விமானப்படைகளுக்கு குறுகிய கால சேவைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 2026ஆம் ஆண்டில் ‘அக்னிபாத்’ திட்டத்தில் முப்படைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வி தகுதி உள்பட முக்கிய விசயங்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
46,000 காலியிடங்கள்
‘அக்னிபாத்’ திட்டத்தில் தற்போது முப்படைகளிலும் சேர்த்து மொத்தம் 46,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு வயது 17 முதல் 23க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் என்ன?
விண்ணப்பம் செய்வோர் உடற்தகுதி தேர்வு, உடற்திறன் (மெடிக்கல்) தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்பிறகு ராணுவ பயிற்சி வழங்கப்படும். சீருடை, பயண செலவு, தங்கும் செலவு, உள்ளிட்டவை வழங்கப்படும்.
பணியில் சேருவோருக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். இது 2ஆவது ஆண்டில் ரூ.23,100 ஆகவும், 3ஆவது ஆண்டில் ரூ.25,580 ஆகவும், 4ஆவது ஆண்டில் ரூ.28 ஆயிரம் வழங்கப்படும்.
ஒன்றிய பணிகளில் முன்னுரிமை!
மேலும் 4 ஆண்டு பணி ஓய்வூக்கு பிறகு சிஆர்பிஎப், ரயில்வே காவல்துறை, மத்திய தொழில்பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, சுங்க மற்றும் கலால் வரித்துறை, வனத்துறை, ஓஎன்ஜிசி, இந்தியன் ரயில்வே, மாநில காவல் துறை, விமான நிலைய பணி, டோல்கேட் பணி உள்பட பல துறைகளின் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதுதவிர கடற்படை மற்றும் எச்ஏஎல், பிஇஎல், பிஇஎம்எல் உள்பட ஒன்றிய பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள 100 மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள பணிகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை பயன்படுத்தி பணியில் சேர முடியும். இதனால் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் தனித்தனியாக வெளியாக உள்ளது. இதனால் முப்படைகளில் ‘அக்னிபாத்’ திட்டத்தில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள 4 இணையதளங்கள் வழியாக விண்ணப்பம் செய்யலாம். முப்படைகளில் பணியில் சேர விரும்புவோர் முறையான அறிவிப்புகளை அறிந்து விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
Agnipath Site: https://agneepathscheme.in
Indian Army: https://joinindianarmy.nic.in
Indian Navy: https://www.joinindiannavy.gov.in
Indian Air Force: https://agnipathvayu.cdac.in/AV
