திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி நாளுக்கு நாள் பெருகும் கூட்டணியாக இருக்கிறது! மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியே!!
சென்னை, மார்ச் 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார் – வாழ்த்துகள்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி நாளுக்கு நாள் பெருகும் கூட்டணியாக இருக்கிறது! மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் திடலில் நேற்று (1.3.2026) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
என்றும் களத்தில் நிற்கக்கூடிய, ஓய்வறியாத உழைப்புக்குச் சொந்தக்காரர்!
சமூக நீதியைக் காப்பதற்காக போராளியாக என்றும் களத்தில் நிற்கக்கூடிய, ஓய்வறியாத உழைப்புக்குச் சொந்தக்காரரான, ‘என் சக்திக்கு மீறி உழைக்கிறேன்’ என்று தெளிவாக எடுத்துச் சொல்லி, உழைப்பைத் தவிர வேறு நெறி இல்லை என்று அருமையாக தன்னு டைய வாழ்த்துச் செய்தியில் சொன்ன, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், 73 ஆம் அகவையில் காலடி எடுத்து வைத்தார்கள். அதைத் திருப்பிப் போட வேண்டும்.
37 வயது இளைஞர் எப்படி கடுமையாக உழைப்பாரோ, அதுபோல அவர்கள் உழைக்கிறார்கள். அவருடைய உழைப்புக்கேற்ற வெற்றி நிச்சயமாக வரும். நடைபெறவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடனே மிக முக்கியமாக 2026 இல் மீண்டும் அவர்தான் ஆட்சியமைப்பார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி நாளுக்கு நாள் பெருகும் கூட்டணியாக இருக்கிறது. அதே நேரத்திலே இன்னொரு அணியில் இருக்கிறவர்கள் சுதந்திரத்தை இழந்திருக்கிறார்கள். அடிமைகளாக இருக்கிறார்கள். அதற்கு நேற்றைய (28.2.2026) உதாரணம் ஒன்றே போதும்.
மிகப்பெரிய படுதோல்வியை சந்திப்பார்கள்!
முதலமைசசர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி சொல்லுகிற போது, தெளிவாக ஒரு அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டார் பா.ஜ.க.வுக்கு. அண்ணா தி.மு.க. ஏற்கெனவே அவர் அடமானம் வைத்து விட்டார் என்று சொன்னதன் காரணமாகத்தான் இன்று (1.3.2026) மதுரையிலே நடக்கின்ற அந்த மாநாட்டில் இருக்கின்ற முகப்புப் பந்தலில் நேற்று (28.2.2026) காலையில் தந்தை பெரியார் உயரத்தில் இருந்தார். ஆனால், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உத்தரவு வந்த உடனேயே அ.தி.மு.க.வால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்தில் பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் தாமரை இடம் பெற்றது என்பது இருக்கின்றதே, இது ஒன்று போதும் அவர்கள் மிகப்பெரிய படுதோல்வியை சந்திப்பதற்கு.
காரணம் பெரியார் சிறியார் அல்ல. வறியோர்களுக்கெல்லாம் நெறியாளராக இருந்து வழி காட்டக் கூடியவர். இன்னும் கேட்டால் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களே கூட, சிறப்பு செய்த நிலையெல்லாம் மாறி, இன்றைக்கு முழுக்க முழுக்க தமிழ்நாட்டையே ஒரு அடிமை சாசனம் போல் அடமானம் வைத்து விடலாம் என்று நினைத்தால், தமிழ்நாட்டை மீட்கக் கூடிய படை இங்கே தயாராகிவிட்டது என்பதைத் தான் பெருகும் கூட்டணி மட்டுமல்ல, மக்கள் கூட்டணியாகவே உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது மிகப்பெரிய செய்தி.
ஆகவே, பிறந்தநாள் என்பது இருக்கிறதே, அதுவொரு சிறந்த நாளாகவும், வரலாற்றுத் திருப்பம் தரும் நாளாகவும் முதலமைச்சருக்கு இருக்கின்றது. உலகம் முழுவதும் முதலமைச்சரை வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். அதில் நாங்களும் இணைகிறோம். நீங்கள் கேள்வி கேட்காமலேயே அதற்கும் சேர்த்து பதில் கூறிவிட்டேன். சரிதானே! (பத்திரிகையாளர்கள் ஆமோதித்து சிரித்தனர்) நன்றி! வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
