‘‘என்றும் பெரியாரியல் மாணவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பன்முகப் பேராளுமை!’’

9 Min Read

சென்னை பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறை சார்பில் நடைபெற்ற ஒருநாள் தேசிய கருத்தரங்கம்!

சென்னை, பிப்.25 ‘‘உங்கள் அன்புக்குத் தலை வணங்குகிறேன்’’ என்றும், ‘‘என்னை எதற்காக பாராட்டுகிறீர்களோ அந்தப் பணியில் இறுதி மூச்சு உள்ள வரை ஈடுபடுவேன்’’ என்றும், ‘‘உங்கள் வாழ்வின் பேறு எது? என்று என்னைக் கேட்டால், பெரியாரின் நம்பிக்கையை பெற்றதுதான் பெரும் பேறு என்பேன்’’ என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறை நடத்திய ஒருநாள் தேசிய கருத்தரங்கில் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.

சென்னை பல்கலைக்கழகத்தில்
ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்!

சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறை சார்பில், ‘‘என்றும் பெரியாரியல் மாணவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பன்முகப் பேராளுமை!’’ எனும் தலைப்பில், ஒருநாள் தேசியக் கருத்தரங்கம் நேற்று (24.2.2026) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, மெரினா வளாகம், சென்னை பல்கலைக்கழகத்தின் பவள விழா கலையரங்கில், ஒரு நாள் தேசிய கருத்தரங்கமாக நடை பெற்றது. காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை முதல் அமர்வாகவும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரையிலுமாக இரண்டு அமர்வுகள் நடைபெற்றன.

எந்த புத்தகத்திலும்
இடம் பெறாத அரிய தகவல்கள்!

முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த் துறை மாணவர்களால் பாடப்பட்டது. முதல் அமர்வில் முனைவர் வே.நிர்மலா தேவி அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். தமிழ்நாடு அரசின் திட்டக் குழு முன்னைத் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் தலைமையேற்று உரையாற்றினார். தொடர்ந்து, ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பன்முகப் பேராளுமை’’ எனும் பொது தலைப்பில் ‘‘எழுத்தாளர்’’ எனும் தனித் தலைப்பில், ஆசிரியர் அவர்களின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதை, புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்பு நிலை தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இரா.அறவேந்தன் நான்கு புத்தகங்களை அடிப்படையாக எடுத்துக் கொண்டு ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் உரையாற்றினார். பின்னர் ‘‘சொற்பொழிவாளர்’’ எனும் தனித் தலைப்பில், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதை, எந்த புத்தகத்திலும் இடம் பெறாத, ஆசிரியர் அவர்களின் சொற்பொழிவுகளை நேரில் கேட்டால் மட்டுமே உணரக்கூடிய அரிய தகவல்களை, திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்கள் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

தமிழ்நாடு

அதைத்தொடர்ந்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், ‘‘பன்முகப் பேராளுமை’’ எனும் தனித் தலைப்பில், கழகத் தலைவரின் பன்முக ஆற்றல்களைத் தரவுகளோடும், ஆற்றொழுக்காகவும் பேசி அமர்ந்தார். முன்னதாக, தேநீர் இடைவேளைக்குப் பிறகு, தமிழ்த்துறை  மாணவர் சூரியமூர்த்தி தந்தை பெரியாரைப் பற்றி, ‘‘வாழ்கவே ஈ.வெ.ரா.’’ என்று தொடங்கும் பாடலைப் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

புதுமையான முறையில்
கழகத் தலைவருக்கு வரவேற்பு!

முதல் அமர்வு நிறைவு பெற்ற அதே நேரத்தில், பாடுபொருளின் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், குறித்த நேரத்தில் அரங்கத்திற்கு வருகை தந்தார். ‘‘விடுதலை நாளிதழின் ஆசிரியராக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதை முன்னிட்டு, ‘‘தந்தை பெரியாரே வரவேற்கிறேன்’’ எனும் தலைப்பில் தலையங்கம் எழுதிய, ‘விடுதலை’ நாளிதழ் பக்கத்தையே நிகழ்ச்சியின் பதாகையாக அமைத்திருக்கிறோம். ஆகவே, தனியாக அவருக்கு வரவேற்பு வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்று புதுமையான முறையில் கழகத் தலைவரை, தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் ய.மணிகண்டன் வரவேற்றார். தொடர்ந்து, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இணைந்து நடத்தி வைத்த, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் திருமணத்தில், புரட்சிக் கவிஞர் – நிகழ்விடத்திலேயே ஆசிரியரைப் பற்றி எழுதி வாசித்த, ‘‘இளமை வளமையை விரும்பும்’’ என்ற புகழ் பெற்ற கவிதையை, தமிழ் மொழித் துறை மாணவர் கங்காதேவி அவர்கள் வாசித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.‌

தமிழ்நாடு

கழகத் தலைவர் ஆசிரியர் உரை

நிறைவாக, தமிழ் மொழித் துறையின் தலைவர் ய.மணிகண்டன் அவர்கள் கழகத் தலைவரை சிறப்புப் பேருரை வழங்க அழைத்தார். ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் முக்கிய பிரமுகர்களை விளித்துப் பேசும் போது, இரண்டு முன்னாள் துணைவேந்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதை சொல்வதற்காக, ‘‘தமிழ்நாட்டில் 16 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. என்றாலும், முன்னாள் துணைவேந்தர்கள் இங்கே இருப்பது சிறப்புக்குரியது; எந்நாளும் இவர்கள் சட்டத்தை மதிப்பவர்கள்; நெறி தவறாதவர்கள்; போற்றுதற்குரியவர்கள்’’ என்று பொடிவைத்துப் பேசி, வெடிச்சிரிப்பை எழுப்பிய வண்ணம், தமது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து அவர், ‘‘விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள். பாராட்டு என்றால் தலை குனிந்து விடுகிறது. தமிழன் இப்போது தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம். ஆனாலும், உங்கள் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன்’’ என்று தன்னடக்கத்தையும், நன்றியையும் வெளிப்படுத்தியதை ஏற்றுக்கொண்டாலும் – அதில் உள்ள கொள்கை நிலைப்பாட்டையும், கண்ணியமான நகைச்சுவையையும் அரங்கத்தினர் சுவைக்கத் தவறவில்லை. தந்தை பெரியார் எழுதிய, ‘‘சுயநலம் – பிறர் நலம்’’ என்ற புத்தகத்தை ஏந்தியபடி, ‘‘பொதுத் தொண்டு செய்வதாகச் சொல்லி என்னைப் பாராட்டுகிறீர்கள். அதுதான் எனது சுயநலம் என்கிறார் பெரியார்!’’ என்பதைச் சொல்லிவிட்டு, ‘இன்பமும், திருப்தியும் ஏற்படுகிற காரியமெல்லாம் மனிதனின் சுயநலமே ஆகும்’ என்று பெரியார் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை படித்துக் காட்டி, இதுதான் எனது நிலையும் என்பதைச் சொல்லிவிட்டு, தான் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நாட்குறிப்பில் கேள்வி, பதிலாக எழுதி வைத்திருந்த ஒரு கருத்தை படித்துக் காட்டினார். அதில் கேள்வியாக, ‘உங்கள் வாழ்வின் பேறு எதுவென்று கருதுகிறீர்கள்’? என்றும், பதிலாக ‘பெரியாரின் நம்பிக்கையைப் பெற்றதுதான் நான் வாழ்க்கையில் பெற்ற பெரும் பேறு’ என்றும் எழுதி வைத்திருந்ததை படித்துக்காட்டி, ‘‘தந்தை பெரியாரால் தான் நாம் மனிதனானோம். ஒரு காலத்தில் இத்தனை துணை வேந்தர்கள் நம்மிடையே உண்டா? முனைவர் பட்டம் பெற்றவர்கள் உண்டா? இதோ நம் கண் முன்னே மாணவர்கள் இவ்வளவு சிறப்பாக படித்துக் கொண்டிருக்கின்றனரே… இதற்கெல்லாம் காரணம் தந்தை பெரியார் அல்லவா? ஆகவே, எதை நான் செய்து கொண்டிருப்பதாக எண்ணி, என்னைப் பாராட்டுகிறீர்களோ; அதையே எனது மூச்சு உள்ள வரை நான் செய்து கொண்டிருப்பேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறி, பலத்த கை தட்டல்களுக்கிடையே தமது உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தபடி மாணவர்களின் கேள்விகளுக்கு, கழகத் தலைவர் உரிய பதில்களை அளிக்கும் கேள்வி – பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

நிறைவாக, நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிலருடன் அளவளாவி விட்டு, அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு நிகழ்வின் இரண்டாம் அமர்வு தொடங்கியது. தமிழ் மொழித் துறையின் மாணவர், கங்காதேவி கழகத் தலைவர் ஆசிரியர் பற்றிய, ‘‘எழுத்துக் குழந்தையும், இதயக் குழந்தையும்’’ என்று தொடங்கி, ‘‘மொத்தமாய் சேர்த்து எல்லோரும் அன்னை மணியம்மையரிடம் கோரிக்கை கொடுப்போம்’’ என்று முடியும் ஒரு நீ…ண்ட கவிதையை, நல்ல உச்சரிப்போடும், கவிதைக்கே உரிய ஏற்ற இறக்கங்களோடும் வாசித்துப் பாராட்டு பெற்றார். இரண்டாம் அமர்வில், தமிழ் மொழித் துறை மாணவர் நிர்மலா தேவி அனைவரையும் வரவேற்று அமர்ந்தார். சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள, முன்னைத் துணை வேந்தர் ம.இராஜேந்திரன் மற்றும் தனித் தலைப்புகளில் பேச வருகை தந்துள்ள, திராவிடர் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி,சிங்காரவேலரியல் அறிஞர் புலவர் பா.வீரமணி, திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டு தமிழ்மொழித் துறையின் தலைவர் பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களால் மரியாதை செய்யப்பட்டனர்.

‘விடுதலை’ நாளேட்டில், ஆசிரியராகப் பலரும் இருந்திருக்கிறார்கள்; அவர்கள் யாரும் ‘ஆசிரியர்’ என்ற அடை மொழியைப் பெறவில்லை!

முன்னதாகத் துணைவேந்தர் ம.இராஜேந்திரன் தனது தலைமை உரையில், நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத ஆசிரியரின் ஆளுமைப் பண்புகள் தொடங்கிய இடமான அவருடைய மாணவர்ப் பருவம் முதல், கல்லூரிப் பருவம் வரையிலான வரலாற்றுச் சம்பவங்களை, ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, ‘‘ஆசிரியர்’’ எனும் தனித் தலைப்பில் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி  உரையாற்றினார். அதில் அவர், ‘‘ஆசிரியருக்கு தனி வாழ்க்கை என்று ஒன்று இல்லை’’ என்றும், ‘‘கண்ணாடி அறைக்குள் வாழ்வதைப் போலவே வாழ்கிறார்’’ என்றும், ‘‘இப்படி ஒருவர் வாழ முடியுமா? என்ற வியப்புக்கு; வாழ முடியும்! என்று நமது காலத்து சான்று தான் ஆசிரியர்!’’  என்றும், ‘‘விடுதலை நாளேட்டில், ஆசிரியர் வீரமணிக்கு முன்பு பலரும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் ‘ஆசிரியர்’ என்ற அடை மொழியைப் பெறவில்லை. இவருக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது’’ என்றும், பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டு தலைப்புக்கு வலு சேர்த்தார். ஆசிரியர் என்பது பத்திரிகை ஆசிரியர் என்பதைக் கடந்து, அச் சொல்லின் இன்னொரு பரிமாணமான கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக அவர் திகழும் தருணங்களையெல்லாம் எடுத்துக்காட்டினர்.

அதைத்தொடர்ந்து சிங்காரவேலரியலாளர் புலவர் பா.வீரமணி அவர்கள், ‘‘சமூகநீதிப் போராளி’’ எனும் தனித் தலைப்பில் உரையாற்றினார். அவர் தமது உரையில் மார்க்சியத்தில் பொதிந்துள்ள பல்வேறு அறிஞர்களின் சிந்தனைகளை தொட்டுக்காட்டி, இந்திய சமூகச் சூழலையும் சுட்டிக்காட்டி, இப்படிப்பட்ட நிலையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 69% இட ஒதுக்கீடு, மண்டல் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து சாதித்து இருப்பதை எடுத்துரைத்து எல்லா பண்புகள் இருந்தாலும், ‘‘சமூக நீதிப் போராளி’’ என்கின்ற பண்புதான் அவருக்கு மிகப் பொருத்தமானது; சிறந்தது என்று நிறுவி, உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக, ‘‘தலைவர்’’ எனும் தனித்தலைப்பில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் பெரியாருக்குப் பின்னர் இயக்கத்தை வழி நடத்துவது யார் என்பது குறித்து பெரியாரிடமே கேட்கப்பட்டபோது, ‘அறிவும் உணர்ச்சியும், துணிவும் இருக்கும் ஒருவர் வருவார். அதுவரையிலும் எனது புத்தகங்கள் தான் வழிகாட்டும்’ என்று குறிப்பிட்டதை கூறி, ‘‘அந்த ஒருவர் ஆசிரியர் கி.வீரமணி தான்’’ என்று, வரலாற்று உண்மைக்கும்; நிகழ்ச்சியின் தலைப்புக்கும் பொருத்தமாக குறிப்பிட்டார். மேலும் அவர், ‘‘திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த போது, ஆசிரியரின் உடன் பிறந்தவர்கள் எல்லாம் தி.மு.க.வுக்கு சென்று விட்ட பிறகு, இவர் மட்டும் ‘தந்தை பெரியார் தான்’ எனது ‘தலைவர்’ என்று சொந்தமாக முடிவெடுத்ததே அவரது தலைமைப் பண்புக்குச் சான்று’’ என்று வரலாற்றுக் கருத்துச் செறிவுகளில் பொதிந்து கிடக்கும் ஒரு அரிய தகவலை அரங்கத்தின் முன் வைத்தார். தொடர்ந்து, ரூ.9,000 ஆண்டு வருமான வரம்பு ஆணை எரிப்புப் போராட்டத்தில் வெற்றி; வருமான வரித்துறை அறக்கட்டளையை முடக்கிய போது சட்டப் போராட்டம் நடத்தி அதை மீட்டது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் வெற்றி பெற்றதன் காரணமாக, இன்றளவும் நடைபெற்று வரும் பணிகளைப் பட்டியலிட்டு, ‘‘அவர் தான் தலைவர்’’ என்பதை அய்யத்துக்கு இடமின்றி நிறுவி, தனது உரையை நிறைவு செய்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவரும், துணைவேந்தர் குழு உறுப்பினருமான பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குச் சால்வை அணிவித்துச் சிறப்பித்தார்.

பங்கேற்றோர்

தமிழ் மொழித் துறையின் மாணவர் திவ்யா உள்ளிட்டோர் நிகழ்வின் ஒருங்கிணைப்புப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், ஊடகவியலாளர்கள் இந்திரகுமார் தேரடி, மில்ட்டன், செ.கு.திவாகரன், பெரியார் பெருந் தொண்டர்கள் தங்கமணி – தனலட்சுமி, ஆடிட்டர் இராமச்சந்திரன், தாம்பரம் குணசேகரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, எமரால்டு பதிப்பாளர் ஒளிவண்ணன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், சோழிங்கநல்லூர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பெரியார் மாணாக்கன் மற்றும் தமிழ் மொழித் துறை ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஒருநாள் தேசியக் கருத்தரங்கத்தை சிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *