தமிழ்நாட்டின் வியத்தகு வளர்ச்சி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சட்டமன்றத் தேர்தலை இன்னும் 2 மாதங்களில் எதிர்கொள்ள இருக்கும்  நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்கள் வியக்கும் அளவுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை கடந்த 16-ஆம் தேதி சட்டமன்றத் தாக்கல் செய்யப்பட்டது. 263 பக்கங்களைக் கொண்ட அந்த ஆய்வறிக்கை 17 ஆராய்ச்சி வல்லுனர்களால் 10 தலைப்புகளின் கீழ் தயாரிக்கப்பட்டதாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்கள், மாநிலத்தின் பொருளாதார நிலை தொடர்பான செயல்பாடுகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார (சுமார் ரூ.90 லட்சம் கோடி) கனவை நனவாக்குவதற்காக போகும் வழியில் அகற்றப்படவேண்டிய தடைகளையும் மிக ஆழமாக விவரித்துள்ளது. இந்த இலக்கை 2030-க்குள் அடைவோம் என்று முதல்-அமைச்சர் பிரகடனம் செய்திருந்தாலும், வலுவான அமெரிக்க டாலர் காரணமாக இந்த இலக்கை அடையும் காலம் 2030-லிருந்து 2031 ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வருமான வளர்ச்சி தேசிய சராசரியைவிட தாண்டிவிட்டது. 2024-2025-ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தின் அளவு 3.3 சதவீதமாகவும், இந்திய பொருளாதாரத்தின் அளவு 6.49 சதவீதமாகவும் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 7.4 சதவீதமாக தலைநிமிர்ந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தனிநபர்வருமானம் அகில இந்திய சராசரியைவிட அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.3.62 லட்சமாகும். இது தேசிய சராசரியான ரூ.2.05 லட்சத்தைவிட 1.77 மடங்கு அதிகமாகும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாகும். இது நாட்டின் சராசரி வளர்ச்சி விகிதத்தில் ஏறத்தாழ இரு மடங்காகும். தமிழ்நாட்டின் உற்பத்தித்துறை 14.74 சதவீத வளர்ச்சியை பெருமையுடன் பதிவு செய்துள்ளது. உற்பத்தித்துறையில் அதாவது தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டால் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 15 சதவீதத்தை தமிழ்நாடுதான் வழங்குகிறது.

தமிழ்நாட்டின் தொழில் கொள்கைகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீடுகளை பெருமளவில் ஈர்த்துள்ளது. இதைவிட மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் பங்கேற்பு 72.1 சதவீதமாக உயர்ந்திருக்கும் நிலையில், வேலையின்மை 3.5 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து சமூகநல திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்துக்கொண்டே போகிறது. 2021-2022-ஆம் ஆண்டில் சமூகநல திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,13,268 கோடியாக இருந்தநிலையில், இந்த ஆண்டு ரூ.1,57,864 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் போன்றவை முக்கியமான சமூகநலத் திட்டங்களாகும்.

இவ்வாறு பல வளர்ச்சிகளை பட்டியலிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை வேளாண்மைத்துறையில் கவனம் செலுத்தவேண்டிய அவசியத்தையும் எடுத்துக்கூறியுள்ளது. சாகுபடி பரப்பு குறைந்திருப்பதையும், தரிசு நிலப்பரப்பு அதிகரித்திருப்பதையும் எடுத்துக்காட்டிய பொருளாதார ஆய்வறிக்கை, ‘இதற்கான கொள்கைகள் உடனடியாக வகுக்கப்படவேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளது. குழந்தைத் திருமணங்கள் கிராமப்புறங்களில் 15.2 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 10.4 சதவீதமாகவும் இருக்கும்நிலையில் மாநில சராசரி 12.8 சதவீதமாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பொருளாதார ஆய்வறிக்கை தமிழ்நாட்டின் இப்போதைய நிலைகளை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடியாகவும், அடுத்து போகவேண்டிய பாதையை காட்டும் வழிகாட்டியாகவும் இருக்கிறது. மொத்தத்தில் தேர்தலுக்கு பிறகு அமையப்போகும் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கூறும் உற்ற தோழனாக பொருளாதார ஆய்வறிக்கை அமைந்திருக்கிறது.

நன்றி: ‘தினத்தந்தி’ தலையங்கம் – 20.2.2026

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *