சென்னை, பிப்.19- தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கான ஊழியர் களைத் தேர்வு செய்யும் பணியைத் டிஎன்பிஎஸ்சி (TNPSC) எனப்படும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சார்-பதிவாளர், உதவித் தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ (Group-2 & 2A) முதன்மைத் தேர்வுகள் கடந்த 8ஆம் தேதி காலையும், பிற்பகலும் நடைபெறுவதாக இருந்தன.
ஆனால், அன்று காலையில் சென்னையில் 3 தேர்வு மய்யங் களில் தேர்வர்களுக்கு இடங்கள் ஒதுக்குவதில் குளறுபடி ஏற்பட்டதால், அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுகள் மார்ச் 15ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மய்ய ஒதுக்கீட்டுக் குளறுபடி விவகாரத்தில் முதல்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் தொடர் நடவடிக்கையாகத் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் மாற்றப்பட்டு, அப்பதவிக்கு பி.சிறீ வெங்கட பிரியா நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 14ஆம் தேதி பொறுப்பேற்றதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ஹர்பால் தெரிவித்தார்.
