தஞ்சை. பிப், 17. ”நான் கொழுத்த ராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டு 62 ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் குடும்பம் நன்றாகத்தான் இருக்கின்றது. நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஆகவே, மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படாதீர்கள்” என்றும், ”மூடநம்பிக்கையற்ற மணவிழா தான் சுயமரியாதை திருமண முறை” என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னம்பிக்கை யூட்டும் உரையை நிகழ்த்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம் நெடுவாக் கோட்டை இளங்குமரன் – வீரலெட்சுமி ஆகியோரது மகள் இ.இதயநிதி, பேய்க் கரும்பன்கோட்டை மணியன் – ரேணுகா ஆகியோரது மகன் ம.சோழ ராஜன் ஆகியோரது இணையேற்பு விழா, தெலுங்கன்குடிகாடு, அம்மா திருமண மண்டபத்தில், 11.02.2026 புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன் அனைவரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நிகழ்வை நெறிப்படுத்தி சிறப்பித்தார். பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாத்துரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர் ஜெயராமன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தி.க.தலைவர் துரை ராசு, தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் கலைமணி இளையபாரதி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பூபதி, திராவிடர் கழக தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரி, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், திருவோணம் ஒன்றியத் தலைவர் சாமி.அரசிளங்கோ, மேனாள் ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர், மேனாள் பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை ஏற்று மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர்.
நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை உரையை வழங்கினார். தொடக்கத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக வந்திருப்பதை பெருமையுடன் சுட்டிக்காட்டி, அவர்களின் உள்ளத்தில் எழும் கேள்வியை, தானாகவே கேட்டு, அதற்கு பதில் சொன்னார். அதாவது, “என்ன இது? சுயமரியாதைத் திருமணத்தில் சடங்குகள் இல்லை; சம்பிரதாயம் இல்லை என்று நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை” என்று கூறிவிட்டு, அதற்கு தன்னுடைய திருமணத்தையே எடுத்துகாட்டாக்கிப் பேசினார். ”என்னுடைய திருமணம் 62 ஆண்டுகளுக்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், தந்தை பெரியார் தலைமையில், அன்னை மணியம்மையார் முன்னிலையில், கொழுத்த ராகு காலத்தில்தான் நடைபெற்றது. நாங்கள் நன்றாக இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு, பெண்களின் மனதில் எழும் அடுத்த கேள்வியையும் தானே எழுப்பி, அதற்கும் பதில் சொன்னார். அதாவது, ”இப்படி எல்லாம் திருமணம் செய்துகொண்டாரே, இவருக்கு குழந்தைகள் இருக்கிறதா? இல்லையா? தெரியவில்லையே என்று நீங்கள் எண்ண வேண்டியதில்லை. போதும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருக்கிறது. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை” என்று நன்றாக சிரித்தபடியே சொன்னதும், ஆண்கள், பெண்கள் அனைவரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சூட்சுமத்தை சொல்லும் பொருட்டு, “விளையாட்டில் வெற்றி பெற்றால் தான் முதல் பரிசு; ஆனால், வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து தோற்பவர்களுக்குத்தான் முதல் பரிசு” என்று நுட்பமான ஒரு வாழ்வியல் தத்துவத்தைக் குறிப்பிட்டுவிட்டு, ”விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை” எனும் அறிஞர் அண்ணாவின் வாழ்வியல் சொற் றொடரை வழிமொழிந்தார்.
மேலும் அவர், மணமக்களின் பெயர்கள் தமிழில் இருப்பதைப் பாராட்டினார். அவர்களின் கல்வித் தகுதியையும் மெச்சிக்கொண்டார். அதன் பின்னணியில் திராவிடர் இயக்கம் இருப்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் அவர்களது குடும்பங்கள் பாரம்பரியமாக கொள்கைக் குடும்பமாக இருப்பதையும் நினைவுபடுத்தி, ”மணமக்களுக்கு ஆலோசனை சொல்ல விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுவிட்டு, “ஒன்றே ஒன்று, நீங்கள் எவ்வளவு உயரத் துக்குச் சென்றாலும் பெற்றவர்களை மறந்து விடாதீர்கள். அவர்களிடம் அன்பு செலுத்த மறக்காதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்ததும், ஆண்கள், பெண்கள் பாரபட்சமில்லாமல் உளப்பூர்வமாக அதை ஆமோதித்து, கைதட்டினர். தொடர்ந்து, இணையேற்பு விழா ஒப்பந்த உறுதிமொழியைக் கூறி, நடத்தி வைத்தார். இறுதியாக, சுயமரியாதை திருமண முறையை உருவாக்கிய தந்தை பெரியாரையும், அதை சட்டமாக்கிய அண்ணாவையும் நினைவு கூர்ந்து முடித்துக்கொண்டார். நிகழ்வில், கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், இரு வீட்டாரின் உற்றார் உறவினர்கள் என மண்படத்தின் உள்ளேயேயும், வெளியிலும் நிறையும் படியாக வருகை தந்து சுயமரியாதை திருமண முறையை கண்டு களித்தனர்.
