புதுடில்லி, பிப்.15– நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் நேற்றுடன் (14.2.2026) நிறைவடைந்தது. இரண்டாம் கட்டம் மார்ச் 9ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி நரவனேவின் வெளியிடப்படாத நினைவுக் குறிப்பு புத்தகத்தில், இந்தியா – சீனா இடையேயான கல்வாண் மோதல் தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஒரு விஷயத்தை மக்களவையில் ராகுல் காந்தி எழுப்ப முயன்றார். இதற்கு மக்களவைத் தலைவர் அனுமதி மறுத்ததை அடுத்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பிப்ரவரி 2ஆம் தேதி முதல் நாள்தோறும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. தொடர்ந்து இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இந்தியா பணிந்து விட்டதாகவும், பாரத மாதாவை விற்று விட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரமும் நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம் பெற்றிருப்பதாகக் கூறி அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மக்களவை தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பதாக இருந்தது. ஆனால், அவர் அவைக்கு வந்தால் விரும்பத்தகாத நிகழ்வை அரங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டார். எனினும், மாநிலங்களவையில் பிரதமர் மோடி தனது உரையை நிகழ்த்தினார்.
பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதன் காரணமாக மக்களவை முதலில் பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மார்ச் 9ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவையை மார்ச் 9 வரை ஒத்திவைப்பதாக அதன் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி மூன்று வார கால இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ளது. பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு அமைச்சகங்களுக்கான ஒதுக்கீடுகளை நிலைக்குழுக்கள் ஆய்வு செய்வதற்காக இந்த கால இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.
