டெக்கான் கிரானிக்கல், சென்னை :
* தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: திமுக ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்: அதிமுக, பாமக, தேமுதிக எதிர்ப்பு.
* நீதிபதி வர்மா குற்றவாளி என விசாரணைக் குழு முடிவு: நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக 3 பேர் கொண்ட குழு நாடாளுமன்றத் தலைவரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவருக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் (IMPEACHMENT) நடவடிக்கை தொடங்க ஒன்றிய அரசு பரிசீலனை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் :
* எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வெளிநாட்டு நன்கொடை மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைப்பு.
* மாணவர்கள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அமித்ஷா சம்மதம்: மவுனமே குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கு சமம்; அமித் ஷாவின் கற்பனை கதையைக் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை: ராகுல் காந்தி தாக்கு. இன்றுடன் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு: சி.ஜே.பி. தலைவர் அபிஜீத் திப்கே, ஜந்தர் மந்தரில் விரைவில் “இரண்டாம் கட்ட” போராட்டங்கள் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்ததற்காக அமித்ஷா நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
* பள்ளி மாணவர் 73 விழுக்காடு இடைநிற்றல் – நாடாளுமன்றக் குழு கவலை: உயர்நிலைப் பள்ளிக்கு முன்பே 73 விழுக்காடு மாணவர்கள் கல்வியை இடைநிறுத்துகின்றனர் என நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது; பாடப்புத்தகத் தட்டுப்பாடு மற்றும் தேர்வு அழுத்தமும் கவலைக்குரியதாக உள்ளது.9–12ஆம் வகுப்பு பாடத்திட்டக் குறைபாடுகள் மற்றும் செயலி (APP) மூலம் நடத்தப்படும் புதிய தேர்வுகள் மாணவர்களிடையே குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் அதிகரிப்பதாக குழு தெரிவித்துள்ளது.
* மேற்கு வங்க ஓபிசி வகைப்பாடு ரத்து – கொல்கத்தா உயர்நீதிமன்றம்: மேற்கு வங்க அரசின் ஓபிசி-ஏ, ஓபிசி-பி வகைப்பாட்டை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்து, மம்தா அரசு வழங்கிய ஓபிசி சான்றிதழ்களையும் நிராகரித்துள்ளது. 2011க்கு பிறகு ஓபிசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதில் முறை கேடுகள் நடந்ததாக எழுந்த சர்ச்சையின் பின்னணி யில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை தந்துள்ளது.
தி இந்து:
* இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான முன்மொழிவுகள் – என்.சி.எஸ்.சி. ஆய்வு: ஒன்றிய அரசு கடந்த 3 ஆண்டுகளில் முன்வைத்துள்ள இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களை பொதுப் பணியிடங் களாக மாற்றும் அனைத்து முன்மொழிவுகளையும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (NCSC) விரிவாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இட ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப் பணியிடங்களை பொதுப் பிரிவில் நிரப்புவது மிகவும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
தி டெலிகிராப்:
* ‘சுத்திகரிப்பு’ விவகாரம் – காங்கிரஸ், பாஜக மோதல்: கார்கே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் ஹல்த்வானி கூட்டத்திற்குப் பிறகு ‘சுத்திகரிப்பு’ சடங்கு நடத்தப்பட்டதாக உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு. ஜாதியின் பெயரில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும் கடும் தாக்கு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பள்ளி கட்டட விபத்து – சி.ஜே.பி. கேள்வி: மகாராட்டிரா சோலாப்பூரில் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து 13 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அரசியல்வாதிகளின் குழந்தைகளின் உயிருக்கு கிடைக்கும் பாதுகாப்பு, ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கிறதா என சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கே கேள்வி. “அரசியல்வாதிகளின் குழந்தைகளின் உயிரை விட இந்தக் குழந்தைகளின் உயிர் குறைவானதா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
– குடந்தை கருணா
