சென்னையில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
ஒன்றிய அரசே! கல்வி நிறுவனப் பாகுபாடுகளைக் களைவதற்கான
யூ.ஜி.சி. விதிமுறைகளைச் செயல்படுத்துக! – உச்சநீதிமன்றமே தடையை நீக்கு!
சென்னை, பிப்.14 கல்வி நிறுவனப் பாகுபாடுகள் களையப்படுவதற்கு யூ.ஜி.சி.யின் விதிமுறைகளை செயற்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தியும், உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையினை நீக்கக் கோரியும் சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நேற்று (13.2.2026) மாலை 4 மணிக்கு மாபெரும் மாணவர் பேரணி கண்டன முழக்கங்களோடு எழுச்சியோடு தொடங்கியது. அண்ணாசாலை தந்தை பெரியார் சிலை அருகில் (சிம்சன்) பேரணி வந்தடைந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
திமுக மாணவரணி மாநில செயலாளர் இரா.இராஜிவ்காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் மிருதுளா தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆர்ப்பாட்டத்தினை ஒருங்கிணைத்தார்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், சமூகநீதி மாணவர் அமைப்பு மாநில பொருளாளர் ஆவடி அஜிஸ், மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால் சசிகுமார், முற்போக்கு மாணவர் கழக மாநில பொறுப்பாளர் தயா.நெடுஞ்செழியன், ASFI மாநில தலைவர் இப்ராஹிம், காங்கிரஸ் மாணவரணி தலைவர் சின்னதம்பி, மக்கள் நீதி மய்யம் மாணவரணி மாநில செயலாளர் ராகேஷ் ராஜசேகரன், MSF மாநில பொதுச் செயலாளர் நூர் முகம்மது, திராவிட மாணவர் பேரவை துணை செயலாளர் ரேவதி, மாணவர் இந்தியா மாநில தலைவர் சிதம்பரம் பைசல், RSYF மாநில செயற்குழு உறுப்பினர் மணியரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிட மாணவர் கழகம் சார்பில் மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், மாநில துணை செயலாளர்கள் செ.பெ.தொண்டறம், தே.நர்மதா, வட சென்னை மாணவர் கழகத் தலைவர் சஞ்சய், நிலவன், பிரசிடென்சி கல்லூரி திராவிட மாணவர் கழகத் தோழர்கள் கயல்விழி, இந்திரா, அண்ணா பல்கலைக் கழகப் பொறுப்பாளர் வெங்கடேஷ் மற்றும் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சுரேஷ், மணிமேகலை, இளைஞரணி பொறுப்பாளர் சென்னகிருஷ்ணன், பாரத் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
‘‘எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாணவர்களை பாதுகாத்திட வேண்டும்”, “சமத்துவ விதிமுறைக்கு ஸநாதன தடையை ஏற்கமாட்டோம்”, “உயர் கல்வி நிறுவனங்கள் உயர் ஜாதி நிறுவனங்கள் அல்ல; பல்கலைக் கழகங்கள் பார்ப்பன கூடாரங்கள் அல்ல” என்ற மாணவர்களின் முழக்கத்தோடு கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
