என்.டி.ஏ. கூட்டணி சவால் அல்ல– மின்மினிப் பூச்சிகள் மின்சாரம் ஆக முடியாது!

9 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், கூட்டணி அரசா? எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்!
தமிழ்நாட்டில் என்றைக்கும் ‘‘தொங்கு சட்டமன்றம் வந்ததில்லை’’; ‘‘தங்கும் சட்டமன்றம்’’தான்!

இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

இராமநாதபுரம், பிப்.13 தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், கூட்டணி அரசா? எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்!  தமிழ்நாட்டில் என்றைக்கும் ‘‘தொங்கு சட்டமன்றம் வந்ததில்லை’’; ‘‘தங்கும் சட்ட மன்றம்’’தான்! என்.டி.ஏ. கூட்டணி சவால் அல்ல– மின்மினிப் பூச்சிகள் மின்சாரம் ஆக முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

நேற்று (12.2.2026) இராமநாதபுரத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவரது பேட்டியின் விவரம் வருமாறு

ஒன்றிய அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது!

அண்மையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளு மன்றத்தில் அளித்த வரவு – செலவுத் திட்டத்தில், தமிழ்நாடு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கெனவே பல ஆண்டுகளாக நடைமுறையில்  இருக்கக்கூடிய ஒன்றிய அரசின் பல திட்டங்களிலும் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருவது இயல்பானதே!

ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தாலும், தமிழ்நாட்டை வஞ்சிப்பது என்பதை ஒன்றியத்தில் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது. அதிலும், இப்போது தேர்தல் ஆண்டு – என்ன செய்தாலும், தமிழ்நாடு தங்கள் வழிக்கு வராது என்று கருதிய காரணத்தினாலோ என்னவோ, பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்துள்ளார்கள்.  நம்முடைய வரிப் பணத்தை, அதிகமாக வசூல் செய்து வருகிறது. ஆனால், அந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, மிகுந்த பேரிடர் நெருக்கடி காலத்திலும் சரி, புயல், வெள்ளம் மற்றும் பல்வேறு இயற்கைத் தொல்லைகள் இருந்தாலும் சரி,  ஏற்கெனவே அவர்கள் உறுதியளித்த கல்வித் திட்ட மானாலும் சரி, எல்லாவற்றிலுமே அவர்கள் நிதிப் பற்றாக்குறை தமிழ்நாட்டிற்கு ஏற்படும் அளவிற்கு, நிதியை தராமல், நீதியையும் அளிக்காமல் இருக்கிறார்கள்.

எனவே, இது சமூகநீதியும் அல்ல; பொருளாதார நீதியும் அல்ல!

சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி என்பது அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அதனுடைய முகப்புரையில் எடுத்துச் சொல்லும்போது, Justice, Social, Economic and Political என்றுதான் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆகவேதான், அரசியல் ரீதியாகவும், நியாயமாகவும் நடந்துகொள்ளாமல், பழிவாங்கக்கூடிய அரசியலை நடத்துகிறார்கள். தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சி யில், சாதனைகள் மேல் சாதனை செய்கிறார் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்நாட்டிற்குக் கொடுக்கவேண்டியது சலுகையல்ல, பிச்சையல்ல, உரிமை!

அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,  தமிழ்நாட்டில் என்ன செய்தாலும்,  வெற்றி பெற முடியவில்லையே என்ற ஆதங்கம் அவர்களுக்கு இருக்கின்றது. நியாயமாகப் பார்த்தால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுக்கவேண்டியது சலுகையல்ல, பிச்சையல்ல, உரிமையாகும்.

நாம் பிரிவினைவாதிகள் அல்ல;
அவர்கள்தான் பிரிவினைவாதிகள்!

ஆகவே, அந்த உரிமையை அவர்கள் மறுக்கிறார்கள். இந்திய நாட்டிலிருந்து, தமிழ்நாட்டை அவர்கள்தான் பிரிக்கிறார்கள். நாம் இப்போது பிரிவினைவாதிகள் அல்ல; அவர்கள்தான் பிரிவினைவாதிகள்.

செய்தியாளர்: மும்மொழி கொள்கை போன்ற பல்வேறு திட்டங்களால், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார்களா, நிதி வழங்காமல்?

60 ஆண்டுகளுக்கு முன்பே
அண்ணா சொல்லியிருக்கிறார்!

தமிழர் தலைவர்: அழுத்தம் கொடுப்பதற்கு அவர்க ளுக்கு உரிமையே இல்லை. ஏனென்றால், நம்முடைய மொழியைக் காப்பாற்றுவதற்கு நமக்கு உரிமை இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்திலேயே மிகத் தெளிவாக, அவரவருடைய பண்பாட்டைக் காப்பாற்றவேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மொழி உரிமைக் கொள்கையை 60 ஆண்டுகளுக்கு முன்பே, பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில், தெளிவாகக் கொள்கையாகவே அறிவித்திருக்கிறார்.

என்றைக்கும் அழிக்கப்பட முடியாத
முப்பெரும் அறிவிப்புகள்!

முப்பெரும் அறிவிப்புகளாக, சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம், சென்னை மாகா ணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்; அதே போலவே, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை; இரு மொழிக் கொள்கைதான் என்று அண்ணா அவர்கள் அறிவித்து, இது அரசின் கொள்கைத் திட்டமாக அறிவிக்கப்பட்டது மட்டுமல்ல, அது ஏற்கப்பட்டு, அரை நூற்றாண்டுகளுக்குமேல் ஆகியிருக்கின்றன.

எனவே, இது புதிது அல்ல. அதன்மூலம், பலனடைந்தவர்கள் உலகம் முழுவதும் இன்றைக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள். ஆகவே, நிதியை மறுப்பதற்கு அதைக் காரணமாகக் காட்டுவதற்கு ஒன்றிய அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

கல்வி என்பது ஒன்றிய அரசினுடைய
தனிப்பட்ட உரிமையல்ல!

கல்வி என்பது ஒன்றிய அரசினுடைய தனிப்பட்ட உரிமையல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியே, ஏழாவது அட்டவணையை எடுத்துக்கொண்டால்கூட, மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டியது – மாநிலங்க ளுடைய உரிமைகள் என்று சொல்லும்போது, முதலில் கல்வி உரிமை மாநிலத்திற்கு மட்டுமே இருந்தது. பிறகு, நெருக்கடி காலகட்டத்தில் அது மாற்றப்பட்டாலும்கூட, ஒன்றிய அரசினுடைய பொருளாக, அதிகாரத்திற்கு உட்பட்டதாக மட்டும் ஆக்கப்படவில்லை. மாறாக, இடையில் இருக்கக்கூடிய ஒத்திசைவு பட்டியலில்தான் (Concurrent List) உள்ளது.

மூன்று பட்டியல்கள் உள்ளன!

மூன்று பட்டியல்கள் இருக்கின்றன; ஒன்று, ஒன்றிய அரசு பட்டியல் (Union List), இரண்டு மாநிலப் பட்டியல் (State List), மூன்று, ஒத்திசைவுப் பட்டியல் (Concurrent List) ஆகும்.

இதை சிலர் தவறாகச் சொல்கிறார்கள், பொதுப்பட்டி யல் என்று. மாநிலத்திற்கு உள்ள உரிமையை, ஒன்றிய அரசு சட்டம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், மாநில அரசிடம் இசைவு பெறவேண்டும். எனவேதான், கன்கரண்ட் என்றால், அனுமதி பெறவேண்டும், ஒப்புதல் பெறவேண்டும் என்று அர்த்தம். ஒத்திசைவுப் பட்டியலில்தான் கல்வி இருக்கிறது.

எனவே, ஒன்றிய அரசின் ஒப்புதலும் பெறவேண்டும்; மாநில அரசின் ஒப்புதலும் பெறவேண்டும். எதை, யார் ஏற்கிறார்களோ, அந்த உரிமை ஏற்கெனவே அரசியலமைப்புச் சட்டக் கர்த்தாக்களால் தரப்பட்டு இருக்கிறது. அதன்படிதான் நம்முடைய இருமொழிக் கொள்கை இதுவரையில் வந்திருக்கிறது. ஆகவே, இதில் ஆட்சேபனை தெரிவிக்க அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அறிவித்த நிதியைக் கொடுக்க வேண்டும். இன்னமும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் இருக்கிறது.

200 இடங்களில் வெற்றி என்பது
234 ஆக மாறினாலும் வியப்பில்லை!

செய்தியாளர்: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக ஒன்றிய உள்துறை அமைச்சர், பிரதமர் உள்பட தமிழ்நாட்டிற்கு வருகிறார்களே, இது எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். எப்படியென்றால், 200 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று இருந்தது. இதனால், 234 இடங்க ளாக மாறினாலும் வியப்பில்லை. இதுதான் தாக்கம்.

செய்தியாளர்: தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்களே?

சொன்னதையும் செய்திருக்கிறார்கள்; சொல்லாததையும் செய்திருக்கிறார்கள்!

தமிழர் தலைவர்: எல்லாவற்றையும் பட்டியலோடு கொடுத்திருக்கிறார்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அளவிற்கு, ஒரு மாநில ஆட்சி, தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து, இவ்வளவு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என்று காட்டக்கூடிய ஆட்சி ஒன்றே ஒன்று ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்.

அதுமட்டுமல்ல, சொன்னதை செய்திருக்கிறார்கள்; சொல்லாததையும் சேர்த்துச் செய்திருக்கிறார்கள். உதாரணம், காலை உணவுத் திட்டம் போன்ற பல திட்டங்கள் இருக்கின்றன.

செய்தியாளர்: தி.மு.க. கூட்டணியை ஆதரித்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட நீங்கள் திட்டமிட்டு இருக்கிறீர்களா?

தி.க.வும் – தி.மு.க.வும்
இரட்டைக் குழல் துப்பாக்கிகள்!

தமிழர் தலைவர்: எங்களைப் பொறுத்தவரையில், இரட்டைக் குழல் துப்பாக்கிகள். திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் கூட்டணியில் நாங்கள் இல்லை என்பது உண்மைதான்! அதையெல்லாம் தாண்டி, இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக்கக் கூடியவர்கள்.

திராவிடர் கழகமான தாய்க் கழகத்தினுடைய கொள்கைகளையெல்லாம் செய்யக்கூடிய ஓர் ஆட்சி யாக, ‘திராவிட மாடல்’ ஆட்சி மலர்ந்திருக்கக் கூடிய காரணத்தினால், தேர்தல் வருவதற்கு முன்பே, நாங்கள் எங்களுடைய பிரச்சாரப் பணியைத் தொடங்கி விட்டோம்.

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி”  என்ற தலைப்பில், அக்டோபர் மாதம் தொடங்கி, இன்று இரவு நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தை முடித்தால், 55 கூட்டங்களுக்கு மேலாகும்.

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பல பகுதிகளுக்குச் சென்று இப்பிரச்சாரக் கூட்டங்களை அரசினுடைய அத்துணை மாவட்டங்களிலும் செய்திருக்கின்றோம்.

ஆகவே, இதையே முன்னோட்டமாக செய்திருக்கின்ற போது, தேர்தல் நேரத்தில் இவ்வளவு விவரமாக விளக்கிச் சொல்வதற்கு வாய்ப்பு இருக்காது என்பதற்காகத்தான், இந்தப் பணியை முன்னோட்டமாக திராவிடர் கழகம் செய்து கொண்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் இன்று இரவு பிரச்சாரக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தப் பிரச்சாரக் கூட்டத்திற்கு, ஊடகவியலாளர்களான நீங்கள் அனைவரும் வரலாம்.

மின்மினிப் பூச்சிகள் மின்சாரமாக முடியாது!

செய்தியாளர்: தி.மு.க.விற்கு, வருகின்ற சட்டப்பேர வைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சவாலாக இருக்குமா? அல்லது விஜய்யினுடைய த.வெ.க. சவாலாக இருக்குமா?

தமிழர் தலைவர்: தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று சொல்லுகின்ற என்.டி.ஏ. கூட்டணிக்கு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘டில்லி முன்னணி’ என்று பெயர் வைத்திருக்கிறார். அந்த டில்லிக்கும், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கும்தான் போட்டியாக இருக்குமே தவிர, மற்றவையெல்லாம் மின்மினிப் பூச்சிகள் மின்சாரமாக முடியாது.

தமிழ்நாட்டினுடைய வரலாற்றில்
கூட்டணி ஆட்சி என்பதே கிடையாது!

செய்தியாளர்: தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கி டையே பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

தமிழர் தலைவர்: நேற்று தெளிவாகப் பிரகட னம் போன்று சொல்லியிருக்கிறார், தி.மு.க. கூட்டணி யினுடைய தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவர் என்ன சொல்கிறார் என்பதுதான் மிக முக்கியம். அவர் வரலாற்றுப் பின்னணியை, நடந்ததை வைத்து, ஆதாரப்பூர்வமாக நல்ல செய்தியை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

இதுவரை  தமிழ்நாட்டினுடைய வரலாற்றில், எப்போதுமே கூட்டணி அரசு என்பதைத் தமிழ்நாட்டு மக்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும் என்பது வரலாறு.

முதல் தேர்தல் தொடங்கி அத்தனை தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்துள்ளேன்!

இப்போது அல்ல, 1952 ஆம் ஆண்டிலிருந்து, இன்னுங்கேட்டால், முதல் தேர்தலிருந்து வரிசையாக வந்திருக்கக் கூடிய செய்தி அது.  உதாரணம் சொல்ல வேண்டுமானால், எல்லா தேர்தல்களையும் பார்த்தவன் நான். ஆக, அத்தனை தேர்தல்களிலும் பிரச்சாரத்தைச் செய்தவன் என்ற முறையிலும் நானும் தெளிவாகச் சொல்கிறேன், முதலமைச்சர் அவர்களும் அதனை நன்றாக விளக்கியுள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும், வெவ்வேறு அரசியல் நெறிமுறைகள், நடைமுறைகள் உண்டு. வடக்கு மாநிலங்களில் கூட்டணி அரசுகள் இருக்கும். ஆனால், அதே பார்மூலா, தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

ஏனென்றால், தமிழ்நாட்டில் என்றைக்கும் ‘‘தொங்கு சட்டமன்றம் வந்ததில்லை’’; ‘‘தங்கு சட்டமன்றம்’’தான் வந்திருக்கிறது.

ஆகவே, தொங்கு சட்டமன்றம்  வந்ததாக வரலாறே இல்லாதபோது, இந்தப் பிரச்சினைக்கு இப்போது அவசியமே இல்லை.

தமிழ்நாட்டினுடைய மண்ணின் மனோபாவம்!

ஒருமுறை 1952 ஆம் ஆண்டு, இராஜகோபாலாச்சாரி யார் அவர்களுடைய ஆட்சியை காங்கிரஸ் கொண்டு வந்தபோதுகூட, அப்போதும் மாணிக்கவேல் நாயக்கர் என்ற ஒருவருடைய  கட்சியை இணைத்துக் கொண்டார்கள்.  அதுமட்டுமல்ல, பின்னாளில் காமராசர் ஆட்சி வந்தவுடன், எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார் அவர்களுடைய உழைப்பாளர் கட்சியினை இணைத்துக் கொண்டார்களே தவிர, கூட்டணி ஆட்சி என்று வந்ததேயில்லை. அதை, தமிழ்நாட்டு மக்களும் ஏற்கமாட்டார்கள்.

இது தமிழ்நாட்டினுடைய மண்ணின் மனோபாவம் (soil psychology) ஆகும்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குப்
பெரியார் மண்தான் காரணம்!

செய்தியாளர்: பெரியார் மண் என்பது வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எடுபடாது என்று பா.ஜ.க. சொல்கிறதே?

தமிழர் தலைவர்: ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொன்னார்கள். கடந்த மூன்று தேர்தல்களிலும் இதைத்தான் சொன்னார்கள்.

பெரியார் மண் என்பது இருக்கிறதே, வெறும் அரசியல் மட்டுமல்ல; சொல்லுகிறவர்கள் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

சமூகநீதிக்கு முன்னோட்டமாக, முதன்முறையாக அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. 69 சதவிகித இட ஒதுக்கீடு, அரசமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்போடு இருக்கிறது என்று சொன்னால், அதற்குப் பெரியார் மண்தான் காரணம்.

இந்தியாவில், வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை கிடையாதே!

ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும் இட ஒதுக்கீட்டில் கை வைக்க முடியாது. எம்.ஜி.ஆர். அவர்களே அதைப் பாடமாகத் தெரிந்துகொண்டதினுடைய விளைவாகத்தான், அதனுடைய பரிணாம வளர்ச்சியாக 69 சதவிகிதத்திற்கு வந்தது.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *