தஞ்சை மாநாட்டுக்குத் தயாராகி விட்டீர்களா தோழர்களே! – மின்சாரம்

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அருமைக் கழகத் தோழர்களே, குடும்பத்தினரே!

என்ன தஞ்சை மாநாட்டுக்குத் தயார் தானா? இப்படி ஒரு கேள்வியை கேட்கவும் வேண்டுமா?

என்றைக்கு ‘விடுதலை’யில் அறிவிப்பு வெளி வந்ததோ அன்றைக்கே எடுத்த முடிவாயிற்றே!

‘‘தயார்! தயார்!! நாங்கள் எல்லாம் தஞ்சையில் வரும் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநாடுகளுக்குத் தயாராகி விட்டோம்’’ என்று நீங்கள் நினைப்பது நமது தலைவருக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. அவர்தான் குமரி முதல் தமிழ் நாட்டை ஒரு சுற்றுச் சுற்றி வந்துவிட்டாரே! தஞ்சை மாநாட்டில் பங்கேற்பது குறித்து உங்களிடம் கரை புரண்டு நிற்கும் ஆர்வத்தை நேரில் நாடிப் பிடித்தே, அறிந்தே வந்திருக்கிறார்.

‘மாநாடு என்றால் அது தஞ்சையில்தான் தனி சிறப்பு’ என்ற வரலாறு தஞ்சைக்கு எப்பொழுதுமே உண்டு.

மின்சாரம்

தஞ்சை மாநகரமும்,  அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் சார்ந்த தோழர்கள் மாநாட்டுக்கு  உற்சாகமாகப் பொறுப்பேற்றுள்ளார்கள் என்பதைக்  கேட்கவும் வேண்டுேமா!

மாநாட்டுப் பணிகள் தஞ்சையில் முடுக்கி விடப்பட்டுள்ளன. தஞ்சையில் தான் மாநாடு – தஞ்சையில் விளம்பரம் செய்தாலே போதும் என்று கருத வேண்டாம்!

சுவர் எழுத்துப் பிரச் சாரத்தைத் தொடங்கி விட்டீர்களா? சுவர் எழுத்தாளர் மாயவரம் சுப்பையாவை மய்யப்படுத்தி ஒரு திரைப் படமே வெளிவந்து விட்டது! (‘‘சக்தித் திருமகன்’’)

எதையும் தொடங்கிக் கொடுப்பதில் நாம் தான் முதல் வரிசையில்! மற்றவர்களும் பின்பற்றி வருகிறார்கள் – மகிழ்ச்சிதான்!

இன்றே தொடங்குவீர் சுவர் எழுத்துப் பிரச்சாரத்தை – அதுவும் இப்பொழுது தஞ்சையில் நடைபெறவிருக்கும் மாநாடு இளமை ததும்பும் மாநாடு!

மகளிர்ப் பாசறை, மாணவர் கழகம், இளைஞரணி என்ற பெயரால் நடக்கும் மாநாடுகள்!

அண்மைக் காலமாக கழகத்தை நோக்கிப் புத்தம் புதியமுகங்கள் கருஞ்சட்டையுடன் காட்சி  அளிக்கிறார்கள்.

மின்சாரம்

காலத்தின் கட்டாயம் இது! பார்ப்பனிய – பாசிச நோய் அதிகாரப்  பீடத்தில் அமர்ந்து ஆட்டம் காட்டுகிறது. சமூகநீதிக்குச் சவக்குழியை வெட்டுகிறது. ஸநாதனக் கண்ணி வெடிகளை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் வைத்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணிக்கிறது (EWS).

எந்த உச்சநீதிமன்றம் இதற்குமுன் ‘பொருளாதார அளவுகோல் செல்லாது’ என்று தீர்ப்பு அளித்ததோ, அதே உச்சநீதிமன்றம் – இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலுக்குப்பச்சை கொடிகாட்டி பராக்குக் கூறுகிறது!  காவிக்குப் பச்சைக் கொடியா என்று நீங்கள் கேட்பது புரிகிறது!

தன்னதிகாரம் கொண்ட நிறுவனங்களை எல்லாம் ‘தலையாட்டிப் பொம்மை’களாக ஆக்கிவிட்டனர்.

‘தலையாட்டிப் பொம்மை’ என்றால் தஞ்சை தானே நினைவுக்கு வரும். தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை என்று அதற்குப் பெயர்!

பாசிசப் படையெடுப்பை சந்திக்கும் தோள்கள் இளமையாக இருந்தால்தானே சரியாக இருக்கும்.

அதனால்தான் நம் தலைவர் ஆசிரியர் அவர்கள் இருபால் இளைஞர்களையும், மாணவர்களையும் அழைத்திருக்கிறார் – அதற்கான மாநாடுகளையும் அறிவித்துள்ளார்.

செய்தி ஒன்று ‘குடிஅரசு’ இதழில் (10.1.1948)

தலைப்பு: ‘பொடியன்கள் எனது ஆசை!’ என்பதாகும். என்ன சொல்லுகிறார்  உலகத் தலைவர் தந்தை பெரியார்?

‘‘மாநாட்டுக்கு தலைமை வகித்த தோழர் அவர்கள், தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னைத் தலைமைப் பதவியில் உட்காரவைத்து நான் வேடிக்கை செய்கிறேன் என்றும் சொன்னார்.

இந்த இயக்கம் இன்று ஏதாவது மதிக்கத் தகுந்த அளவுக்கு பயன்பட்டு வருகின்றது என்று சொல்லப்படு மானால் அதற்குக் காரணம் இந்த மாதிரி “சின்னப் பையன்களே” காரணமாகும். இப்படிப்பட்ட சின்னப் பையன்கள் இந்த இயக்கத்தில் இருப்பதினாலேயே தான் எனக்கு ஒருபுறம் வயது வளர்ந்தாலும், வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது (இதைச் சொல்லும் பொழுது தந்தை பெரியாருக்கு வயது 69). எனது சகவாசம் முழுவதும் சின்னப்பையன்களிடமே இருப்பதினால்தான் சின்னப்பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்து வருகிறது. என் ஆசையெல்லாம் நான் எப்பொழுதும் சின்னப்பையன்கள் மாதிரியே இருக்க வேண்டுமென்பதோடு, பெரிய ஆள்கள் மாதிரி ஆகக்கூடாது என்பதுமாகும்.’’

– தனது 69ஆம்வயதில் தந்தை பெரியார் இப்படி எழுதுகிறார். இதனை நமதுதலைவர் ஆசிரியரிடத்திலும் பொருத்திப் பார்க்கலாம்.

அண்மைக் காலமாக கழகப் பொறுப்புகளில் இளைஞர்கள் அமர்த்தப்பட்டு வருவதன் பொருள் புரிகிறதா?

எல்லாம் தந்தை பெரியார் தந்த புத்தி என்பாரே – நமது தலைவர் – அதை மனதில் வையுங்கள்.

மறைமலைநகரில் நடைபெற்ற சயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் (4.10.2025) அலைகளா தலைகளா என்று அய்யுறும் வண்ணம் கருஞ்சட்டை இளைஞர் பட்டாளத்தைப் பார்த்துப் பரவசம் அடைந்து, முதல் ‘சல்யூட்’ அடித்தாரே நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

ஆம்! இளைஞர்கள், மாணவர்கள் இந்த இயக்கத்தை நோக்கிப் படை வீரர்கள் போல் தோள் தூக்கி வீறு நடை போட்டு வருகிறார்கள்.

மறைமலை நகரை மிஞ்ச வேண்டாமா தஞ்சை?

மிஞ்சும் – கண்டிப்பாக மிஞ்சும் விஞ்சும்!

வாருங்கள் தோழர்களே வங்கக் கடலாய்! தஞ்சையா திராவிடர் கழகத்தின் நன்செய்யா என்பதைப் பார்ப்போம்.

வரும் பொழுது புதிய தோழர்களையும் கண்டிப்பாக அழைத்து வாருங்கள்!

காணட்டும் கழகத்தின் மாநாட்டை! கேட்கட்டும் அங்குப் பேசப்படும் பேச்சுகளை! தெரிந்து கொள்ளட்டும் அம்மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை!

முக்கியமான கால கட்டத்தில் நடக்க இருக்கும் மாநாடு இது – சட்டமன்றத் தேர்தலின் அனல் வீச்சுகள் தொடங்கி விட்டன!

‘திராவிடம் வெல்லும் – நாளை வரலாறு சொல்லும்’ என்பார் நமது தலைவர் ஆசிரியர். வென்றுகாட்ட அச்சாரமாக அலை அலையாய்  அணி திரண்டு வாரீர் தோழர்களே!

ஆசிரியர் ஆவலுடன் காத்திருப்பார் – ‘வயது 93 என்பதை புரட்டிப்  போட்டல் 39 என்று ஆவது’ நமது கைகளில்தான் இருக்கிறது.

குடும்பம் குடும்பமாக தஞ்சையில் சங்கமிப்போம்! இது கும்பமேளா கூட்டமோ – கும்பகோணம் கூட்டமோ அல்ல!

கருஞ்சிறுத்தைகள் கர்ச்சிக்கும் கருத்துக் கடலோசைப் பெரும்படை என்பதை உணர்த்துவோம் வாரீர்! வாரீர்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *