‘சமூகநீதிப் போராளி’ மகாத்மா ஜோதிராவ் புலே சிலையைச் சிதைப்பதா?

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தெலங்கானா மாநிலம் தெல்லப்பூர் பகுதியில் சமூகநீதிப் போராட்ட வீரர்களான ‘மகாத்மா’ ஜோதிராவ் புலே  மற்றும் சாஹு மகாராஜ் ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ள பூங்காவிற்குள் புகுந்த பாஜக மற்றும் ஹிந்துத்துவ அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், “ஹிந்து மதத்திற்கு எதிராகக் கருத்துகளைக் கூறிய தலைவர்களின் சிலைகள் பொது இடத்தில் இருக்கக் கூடாது” என்று முழக்கமிட்டனர். குறிப்பாக, அங்கிருந்த மகாத்மா ஜோதிராவ் புலேவின் சிலையை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிலையைச் சேதப்படுத்த முயன்ற கும்பலை விரட்டியடித்தனர். இருப்பினும், “இந்தச் சிலைகளை அகற்றாமல் விடமாட்டோம்” என்று கூறி அக்கூட்டம் பூங்கா அருகிலேயே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

சமூகநீதிக்காகப் பாடுபட்ட தலைவர்களின் சிலைகள் மீதான தாக்குதல் தெலங்கானாவில் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு உர்சு தர்கா மற்றும் வாரங்கல் நகரங்களில் இருந்த ஜோதிராவ் புலேவின் சிலைகள் இதேபோல் தாக்கப்பட்டன. தற்போது தெல்லப்பூரில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மண்ணின் மாபெரும் நாயகர்களாகக் கருதப்படும் புலே மற்றும் சாஹு மகாராஜ் ஆகியோரின் சிலைகள் அண்டை மாநிலமான தெலங்கானாவில் பாஜகவினரால் இழிவுபடுத்தப்படுவது மராட்டிய அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வன்முறைச் செயலுக்கு மராட்டிய  பா.ஜ.க. கூட்டணியில் உள்ள எந்தவொரு முக்கியத் தலைவரும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ.க.வினரின் இத்தகைய செயல்பாடுகள் சமூகநீதித் தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாகப் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மகாத்மா ஜோதிராவ் புலே (1827–1890) 19ஆம் நூற்றாண்டிலேயே மகத்தான சமூகநீதிக்கான அடித்தளம் அமைத்த மிகப் பெரிய போராளியாவார்.

ஜாதிய ஒடுக்கு முறை, கல்வி மறுப்பு, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய பெருமகனார் ஆவார்.

சமூகநீதி, சமத்துவம், கல்வி உரிமை – இவற்றைப் பகுத்தறிவின் அடிப்படையில் வடிவமைத்தவர்.

பார்ப்பன ஆதிக்கத்தையும், நால் வருண அமைப்பையும் ‘அடிமைத்தனம்’ என்று விமர்சித்தவர் புலே! (நூல்: ‘குலாம்கிரி’)

தாழ்த்தப்பட்ட மாலி சமூகத்தினருக்காக ‘சத்திய சோதக் சமாஜத்தை’’ (1873)த் தொடங்கினார். ‘கல்விதான் சமூகநீதிக்கான ஆயுதம்’ என்பதோடு நிறுத்தாமல், பெண்களுக்கும், ‘சூத்திரர்’ எனப்பட்டவர்களுக்கும் பள்ளிகளைத் திறந்தவர். தனது வாழ்விணையருக்குக் கல்வி கற்பித்து ஆசிரியராக்கியவர்!

கைம்பெண்கள் – குழந்தைகளுக்கான இல்லம் அமைந்தவர். அவர் மறைந்து 136 ஆண்டுகள் ஆன நிலையிலும், ஆர்.எஸ்.எஸ். ஸநாதனப் பிற்போக்குப் பார்ப்பனிய சிந்தனையாளர்கள் அவர்மீது அடங்கா சினத்தில் வெறிகொண்டு நிற்கிறார்கள்; அவர்தம் சிலையை உடைத்து நொறுக்க மூர்க்கமாகத் திரிகிறார்கள் என்றால் இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் அடையாளம் காண வேண்டாமா?

அதேபோல, கொல்ஹாப்பூர் மாநில அரசராகவிருந்த சாகுமகராஜ் (1874–1922) சமூகநீதி வரலாற்றில் முத்திரை பொறித்தவர். 1901களில் பார்ப்பனரல்லாதாருக்கான 300க்கும் மேற்பட்ட விடுதிகளை அமைத்து, உதவித் தொகைகளை வாரி வழங்கியவர்.

1918இல், ‘அரசுப் பணிகளிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த முதல் ஆட்சியாளர்’ என்ற பெருமைக்குரியவர். இத்தகைய பெருமானின் சிலையையும் குறி வைக்கின்றனர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். குறிப்பாக,  தெலங்கானா பகுதியில் நடக்கும் சமூகநீதிப் போராளிகளின் சிலைகள்மீதான தாக்குதல் இரத்தக் கொதிப்பை ஏற்படுத்தும் செய்தியாகும். ஆனால், மகாராட்டிர மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் பிஜேபி கூட்டணி ஆட்சியிடமிருந்து ஒரு கண்டனக் குரல்கூட எழவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.

இவ்ேவளையில், தெலங்கானாவை  ஆளும் காங்கிரஸ் கட்சியும் இதன்மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *