பார்ப்பனியத்தின் கொடுமையை ஒழித்துக் கட்டும் பணியில் திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகால ஈடுபாட்டைச் சுட்டிக்காட்டி எடப்பாடியில் கழகத் தலைவர் உரை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 பிரிட்டீசார் முதன் முதலில் ரயிலைக் கொண்டு வந்தபோது,

பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிக்கென்று தனிப் பெட்டி கேட்டனர்!

 வெள்ளையர்கள் ஏற்க மறுத்து சமத்துவத்தை உருவாக்கினார்கள்!

சமத்துவத்தை வளர்த்தெடுக்கத்தான்

 திராவிடர் இயக்கம் பிறந்தது!

எடப்பாடி, பிப்.8 ‘‘பிரிட்டீசார் முதன் முதலில் ரயிலைக் கொண்டு வந்தபோது, பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிக்கென்று தனிப் பெட்டி கேட்டனர்? வெள்ளையர்கள் ஏற்க மறுத்து சமத்துவத்தை உருவாக்கினார்கள்! சமத்துவத்தை வளர்த்தெடுக்கத்தான் திராவிடர் இயக்கம் பிறந்தது’’ என்று பார்ப்பனியத்தின் கொடுமையை ஒழித்துக் கட்டும் பணியில் திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகால ஈடுபாட்டை சுட்டிக்காட்டி எடப்பாடியில் திராவிடர்  கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

Contents

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி”

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி”  எனும் தலைப்பிலான நிகழ்வை, மேட்டூர் கழக மாவட்டம், எடப்பாடிப் பகுதியில், சேலம் முதன்மைச் சாலையில் உள்ள வெள்ளாண்டி வலசு பகுதியில் வெங்கடேஸ்வரா திருமண மகாலில் 6.2.2026 அன்று காலை 10.30 மணியளவில் அரங்கக் கூட்டமாக சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினர். இதற்காக முக்கிய சாலைகளில் இருபுறமும் கழகக் கொடிகள் சீராகக் கட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே கழகத் தலைவரை வரவேற்கும் வண்ணம் பதாகைகளும், எடப்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலையோரங்கள், சந்திப்புச் சாலைகள் என அனைத்திலும் கழகக் கொடிகளும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக வைக்கப்பட்டு, பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தன.

நிகழ்வில் மாவட்டத் தலைவர் கா.நா.பாலு தலைமை ஏற்றும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.அன்புமதி அனைவரையும் வரவேற்றும் உரையாற்றினர். மாவட்டக் காப்பாளர்கள் பழனி புள்ளையண்ணன், சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம், தி.மு.க. நகர் மன்றத் தலைவர் டி.எம்.எஸ்.பாஷா, வி.சி.க. மாவட்டச் செயலாளர் செ.ப.ஆறுமுகம், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ஆம்.ஆத்மி பொறுப்பாளர் குமரேசன், மேட்டூர் வி.சி.க. செயலாளர் மெய்யழகன், மேட்டூர் மாவட்டச் செயலாளர் ப.கலைவாணன், அமைப்பு சாரா தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் கே.என்.குணசேகரன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். மேடை தோழர் க.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்தது. கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, எடப்பாடி, ஓமலூர், நாமக்கல் ஆகிய பகுதிகளின் தோழர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் நெறியாள்கையில், கழகத் தலைவருக்கு பயனாடையணிவித்து மரியாதை செய்தும், பெரியார் உலகத்திற்கு நிதியளித்தும் மகிழ்ந்தனர். கழகத் தலைவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பயனாடையணிவித்து மரியாதை செய்தார். அடுத்து கழகத் தலைவரை நிறைவுரை எழுச்சியுரை ஆற்றும்படி மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் அழைப்பு விடுத்தார். அங்ஙனமே கழகத் தலைவர் உரையாற்றினார்.

கழகத் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தமது உரையை, எடப்பாடியில் வெப்பம் சுட்டெரித்துக் கொண்டிருப்பதை நினைவுபடுத்தி, “எடப்பாடியில் கடுமையான வெப்பம் இருந்தாலும், அரசியல் வெப்பம் அதைவிட அதிகமாக இருப்பதால், அதைத் தணிப்பதற்காகத் தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று கலகலப்பாகத் தொடங்கினார். தொடர்ந்து, “எடப்பாடி என்பது தந்தை பெரியாருக்கு பிறந்த ஊர் போல” என்றும், “வியாபாரத்திற்காக அடிக்கடி இங்கே வருவார்” என்றும், “அப்படி இங்கே வரும்போது உத்தண்டி மற்றும் பழனியப்பன் இருவரும் அய்யாவுக்கு மிகவும் வேண்டியவர்களாக இருந்தனர்” என்றும், “மற்றும் கைலாசம் – அவரது குடும்பம், கை முகிலன் போன்றவர்கள், அய்யாவுடன் தொடர்பில் இருந்தனர்” என்றும் எடப்பாடிக்கும், தந்தை பெரியாருக்குமான தொடர்பை அடுத்தடுத்து விவரித்தார்.

எடப்பாடியில் திராவிடர் இயக்கம் முத்திரை

மேலும் அவர், “காந்தியார் படுகொலை செய்யப்பட்ட போது, இங்கே கலவரம் ஏற்பட்டது. அப்போது அதை தடுத்து நிறுத்தியவர் தந்தை பெரியார் “ என்றார். முன்னதாக இந்தப் பகுதியில் இசுலாமியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அனைவரும் குடும்ப உறவுகளோடு ஒன்றாக இருப்பவர்கள்” என்றும் குறிப்பிட்டார். இன்னும் ஒரு படி மேலே போய், “இங்குள்ள இஸ்லாமியர்கள் பெரியாரை, ’காட் ஃபாதர்’ போல எண்ணிக்கொள்வார்கள்” என்றார். மேலும் ஒருவரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அதாவது, ‘‘சின்னாண்டி என்பவர் வைதீகர் என்றாலும் பெரியாரிடத்தில் அன்பாக இருப்பார். கவிதை சின்னப்பன் என்பவரும் பெரியாருக்கு உறுதுணையாக இருந்தவர்” என்று சொல்லிவிட்டு, இன்னும் ஏராளமானோரைத் தெரியும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல, “சின்னப்பன், பெரியப்பன் அனைவரையும் தெரியும்” என்று ஓசை நயத்துடன் பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார். எடப்பாடியில் திராவிடர் இயக்கம் முத்திரை பதித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, எடப்பாடி மக்களுக்கே வியப்பைக் கூட்டி விட்டார். முன்னோட்டமாக கழகத் தலைவர், “வயதானவர்களுக்கு ஒருவேளை இந்தத் தகவல்கள் தெரிந்திருக்கலாம்” என்றும் கூறியிருந்தார்.

திராவிடர் இயக்கத்திற்கும், பொதுவுடைமைக் கருத்துகளுக்கும் இருக்கும் பிணைப்பு!

தொடர்ந்து, திராவிடர் இயக்கம் எல்லா முற்போக்குக் கருத்துகளையும் மக்களின் நன்மை கருதி ஏற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட, அண்மையில் சென்னை கன்னிமாரா நூலகத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொதுவுடைமை போராட்டத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய கார்ல் மார்க்சின் சிலையை திறந்து வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, 30 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் தனக்கேற்பட்ட ஓர் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது, தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்களின் அழைப்பின் பேரில் தான் சென்றிருந்ததாகவும், நிகழ்ச்சி முடிந்து, லண்டனில் தானே கார்ல் மார்க்ஸ் சிலை இருக்கிறது. அதைப் பார்த்து விடலாம் என்று தோழர்களிடம் விசாரித்த போது, அவர்கள் யாருக்கும் அச்சிலை இருக்குமிடம் தெரியவில்லை. சரி, விசாரித்து தெரிந்து கொள்ளலாம் என்று அங்கிருப்போரிடம் விசாரித்தபோது, மிகவும் எளிமையாக, ‘We don’t know?’ என்று சொல்லி விட்டதையும், பின்னர் அங்கிருந்த Pub லிருந்து குடித்துவிட்டு வெளியே வந்த ஒருவரிடம் அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்னவோ என்ற அய்யத்துடனேயே விசாரித்தபோது, ‘I will know that’ என்று கூறியதோடு, அழைத்தும் சென்று, புதர் போன்ற ஒரு பகுதியை காட்டினார் என்றும், அங்குதான் கார்ல் மார்க்சின் சிலை இருந்தது என்றும், தாங்களே அதை சீர் செய்து, பின்னர் மரியாதை செய்துவிட்டு வந்தோம் என்றும் விவரித்துவிட்டு, ‘‘அப்படி ஜெர்மனியில் பிறந்து, லண்டனில் வாழ்ந்து மறைந்த கார்ல் மார்க்சை அங்கிருப்பவர்களுக்கே தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ அரசு, கன்னிமாரா நூலக வளாகத்தில் அவருடைய சிலையை திறந்து வைத்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு, “நம்மூரில் இருக்கும் கார்ல் மார்க்சுக்கு இப்போது வயது 95 என்று சொல்லி, திராவிடர் இயக்கத்திற்கும், பொதுவுடைமைக் கருத்துகளுக்கும் இருக்கும் பிணைப்பை புரியவைத்தார்.

ஜாதி பேதத்தை ஒழிப்பதற்காகப் பிறந்ததுதான் சுயமரியாதை இயக்கம்!

அடுத்து, ‘Death the leveler’ எனும் அய்ரோப்பிய கவிதையின் தலைப்பை நினைவுபடுத்தி, ‘சமரசம் உலாவும் இடமே’  என்ற பாடலைச் சுட்டிக்காட்டி, “இந்தியாவை ‘ஞான பூமி’ என்கிறார்கள். ஆனால், இங்குதான் கீழ் ஜாதிக்காரர்கள் எனக் குறிப்பிடப்படுவோர், மயானத்திலும் ஜாதியின் பேதத்தை சந்திக்கும் அவலம் நிலவுகிறது” என்பதை சுட்டிக்காட்டி, ‘‘இதை ஒழித்துக் கட்டுவதற்கு பிறந்ததுதான் சுயமரியாதை இயக்கம் – திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்றக் கழகம் – தந்தை பெரியார் – அண்ணா – கலைஞர் – இன்றைய ‘திராவிட மாடல்’ நாயகர் மு.க.ஸ்டாலின்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார். மேலும் அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூட 105 முறை திருத்தப்பட்டு விட்டது. அதன் விளைவாக 69% இட ஒதுக்கீடு; அதன் பரிணாம வளர்ச்சியாக உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50% என்று சாமானியர்களை அதிகாரப்படுத்துவதற்காக திராவிடர் இயக்கம் செய்த பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டார். இதனால் ஏற்பட்டுள்ள கல்வி, சுகாதாரத்தில் தமிழ்நாடு முதன்மை நிலையைப் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி, “இதை தடுக்கத்தான் மறுபடியும் மனுதர்மத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற்றத் துடிக்கின்றனர்” என்று ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியின் ஆபத்தை சுட்டிக்காட்டினார்.

2026 இல், மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசு

மேலும், “ஒன்றிய அரசு இங்கிருக்கும் கட்சிகளை தன்னாட்சி பெற்றுள்ள அரசு நிறுவனங்களை பயன்படுத்தி அடிமைப்படுத்தி வைத்திருப்பதை நினைவுபடுத்தி, “திராவிட மாடல் அரசு உங்களுக்காக; உங்கள் பிள்ளைகளுக்காக; பேரப் பிள்ளைகளுக்காக 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வருவதை எடுத்துரைத்து, 2026 இல், மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசு அமைய ஒத்துழையுங்கள்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

நிறைவாக மேட்டூர் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பா.எழில் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார். மாவட்ட மகளிரணித் தலைவர் கை.அறிவுமணி பாலு, மகளிரணித் தோழர்கள் பிரியதர்சினி கலைவாணன், சாந்தி அன்புமதி, பொறியாளர் பா.அன்புமணி, நாமக்கல் மாவட்டத் தலைவர் அ.கு.குமார், செயலாளர் வை.பெரியசாமி, பெரியார் பெருந்தொண்டர்கள் ப.ராமலிங்கம், ஆ.சத்தியநாதன், சின்ன மணலி தோழர் மெ.காமராஜ், பகுத்தறிவாளர் கழக மேட்டூர் மாவட்டச் செயலாளர் சி.மதியழகன், எடப்பாடி அன்பு.யாழ் திலீபன், மயிலம்பட்டி தி.மு.க. தோழர் எம்.பி.அய்யாசாமி, சாமியப்பன், கமலா செந்தில்குமார், சம்சத் பேகம் முபாரக், ராதா நாகராஜ், தி.மு.க. தோழர்கள் வடிவேல், சிங்காரவேலு, ராஜா (எ) கே.சண்முகம், மாவட்ட பிரதிநிதி செந்தில் குமார், சுற்றுச்சூழல் அமைப்பாளர் டி.எஸ்.பி.யுனாஸ், எடப்பாடி சா.ரவி, சி.மெய்ஞான அருள், சி.சீனிவாசன், ஆ.முத்து, சு.கபிலன், கு.ஏழுமலை, க.சிறீதர், உல.கென்னடி, உல.நக்கீரன், வழக்குரைஞர் ந.ரமேஷ்குமார் மற்றும் நகர் காங்கிரஸ் தலைவர் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *