கல்லூரியில் ஒன்றாகப் படித்து இப்போது மருத்துவராக இருக்கும் நண்பன் ஒருவன் ரிசர்வேசனை எதிர்த்து சில நாட்கள் முன்பு ஸ்டேட்டஸ் போட்டிருந்தான். சில நாட்கள் முன்பு எனது பழைய நினைவுகள் அடங்கிய ட்ரங்க் பெட்டியைத் திறந்து பார்த்ததில் எனது தந்தை, நான் மருத்துவப் படிப்பிற்கு சேர்ந்தது, அதையொட்டி நிகழ்ந்த நிகழ்வுகள், பத்திரிக்கை விளம்பரங்கள், எனது ஹால் டிக்கெட், வேதியியல் பரீட்சையின் போது எனக்கு வந்த வைரஸ் காய்ச்சல் அதற்கு காண்பித்த டாக்டர். பழனிச்சாமியின் ப்ரிஸ்க்ரிப்சன், வேலூர் மருத்துவக் கல்லூரியில் எனது அலாட்மண்ட் ஆர்டர் என்று சேர்த்து வைத்ததையெல்லாம் பார்த்துக்கொண்டு சென்றேன்.
அப்போது என்னுடன் வேலூர் மருத்துவக் கல்லூரியில் ஒரே நாளில் சீட் எடுத்த மாணவர்களின் அட்டவணையை டவுன்லோடு செய்து ஒரு நினைவுக்காக ப்ரிண்ட் செய்து வைத்தோம். அதில் அந்த ரிசர்வேசனை எதிர்த்த நண்பன் “BC ரிசர்வேசன்” சீட்டில்தான் மருத்துவம் சேர்ந்திருப்பது தெரிந்தது.
நண்பர்களே, நம்மில் பலருக்கும் நாம் எந்த சீட்டில் படித்தோம் என்பதே தெரியமாட்டேங்குது. பி.சி.(BC) என்பது பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு – 26.5%. பி.சி.(எம்) (BCM) பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு – 3.5%. எம்.பி.சி. (MBC) என்பது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு – 20%. எஸ்.சி.(SC) என்பது பட்டியலினம் அல்லது ஒடுக்கப்பட்டோர் – 15%. எஸ்.சி(எ) (SCA) என்பது பட்டியலினத்துக்குள் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு – 3%. எஸ்.டி.(ST) என்பது பழங்குடியினருக்கு – 1%.
இது தான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள ரிசர்வேசன் பாலிசி. இதில் மீதம் 31% பொது. அதாவது யார் வேண்டுமானாலும் போட்டி போட்டுக்கொள்ளலாம்.
நான் கல்லூரி சேர்ந்த போது பி.சி.(எம்)(BCM) உள் ஒதுக்கீடு கிடையாது. நான் பி.சி.(BC) பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் மெரிட் சீட் வழங்கப்பட்டு படித்தேன். நான் ரிசர்வேசனுக்கு ஆதரவாகப் பேசுகிறேன். ஆனால் அதே கவுன்சிலிங் நாளில், என்னுடன் அதே பி.சி.(BC) பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பயின்ற நண்பன் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார். இப்படிப் பல பேர் உண்டு.
இந்த 69% இடஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் படித்து விட்டு எங்கேனும் மேற்குலக நாடுகளில் அமர்ந்து கொண்டு ரிசர்வேசனுக்கு எதிராக மீம்/ போஸ்ட் / ரைட் அப் எழுதுவது. முதல்ல நீங்க அந்த ரிசர்வேசன்லதான் வந்தீங்கங்குறத மறந்துறாதீங்கப்பு. ஏத்தி விட்ட ஏணிய எட்டி உதைக்கலாமோ? ஏனய்யா… இந்த சமுதாயம் 2000 வருசமா சமமா இல்ல. அத ஒத்துக்கோங்க முதல்ல. ஏன் இப்பக் கூட சமமா இல்லை. அதையும் ஒத்துக்கப்பா.
ஒரு சாரார் படிக்கவே விடாம அவன் அப்பன், பாட்டன், பூட்டன் பாத்த வேலைய பாக்குறதுதான் சரினு இந்த சமுதாயம் சொல்லிட்டுருந்துச்சு. இந்த சமுதாயத்த ஓரளவு சரி பண்ணத்தான் ரிசர்வேசன் வந்துச்சு!
பல பேரோட நெனப்பு என்ன தெரியுமா? ரிசர்வேசன்னா அது தரமற்றதுனு. அப்படி இல்ல… புலிக்கும் புலிக்கும்தான் போட்டி இருக்கணும். புலிக்கும் பூனைக்கும் போட்டி வச்சா அது சரிசமமா இருக்குமா? அதுலயும் அந்த பூனையோட காலையும் ஒடச்சு நொண்டி ஆக்கிட்டு போட்டி வைக்கிறது சரியா? சமீபத்தில் கூட ஒரு போஸ்ட் பார்த்தேன். NEET PG கவுன்சிலிங்குல 4000 ஆம் இந்தியா ரேங்க் எடுத்தவருக்கு சீட் கிடைக்கலையாம். 40,000ஆம் இந்தியா ரேங்க் எடுத்தவனுக்கு சீட் கிடைச்சுருச்சாம். இது பெரிய அநீதினு போட்டு பரப்பிட்டு கெடந்தானுங்க. அந்த 40,000 ரேங்க் எடுத்தவன் ஒரு பழங்குடி இனத்தவன் என்பதை மறந்து விடுகிறார்கள். ஏன்யா.. உனக்கும் அவனுக்கும் ஜோடி போட்றீங்க. நீ ஏசி கார்ல போறவன். அவன் வெறும் கால்ல நடக்குறவன். நீ ஏசில தூங்குவ. அவன் கொசுக்கடில வண்டுக் கடில துங்குவான். நீ இன்வெர்ட்டர்/ ஜெனரேட்டர்னு கரண்ட் போனாக்கூட வசதி பண்ணி படிப்ப. அவன் தெரு வெளக்கு வெளிச்சத்த மட்டுமே நம்பி படித்தவன்.
இன்னும் அவன் வீட்டுக்கு முழுசாக் கூட கரண்ட் வந்து சேரல. நீ வெளிய சாப்பிடப்போனா ரூ.2000 ரூவா முழுசா ஆகும். அவுங்க அப்பனோட ஒரு மாச பொழப்பே அவ்வளவு தான்டா. நீ ஒரு பீரோ காணாத அளவுக்கு துணிமணி வச்சுருக்கவன். அவனுக்கு உடுத்த ஒன்னு மாத்த ஒன்னு. இது தாண்டா அவன் பொழப்பு. நீ உங்க பரம்பரைல பத்தாவது டாக்டரு. அவன்தாண்டா அவங்க இனத்துலயே மொத டாக்டரு. உனக்கும் அவனுக்கும் சோடி போட்ற. இது நியாயமா?
முதலில் ரிசர்வேசன் எதற்கு கொண்டு வரப்பட்டதுனு நாம புரிஞ்சுக்கணும். ரிசர்வேசன் வறுமையை ஒழிக்கக் கொண்டு வரப்படலங்க. அது வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை. மாறாக சமுதாயத்தில் உள்ள அனைத்து படிநிலைகளில் இருந்தும் அனைத்து சமூகங்களில் இருந்தும் பிரிதிநிதிகள் இருக்க வேண்டும் என்று அரசியில் சாசனம் கொடுக்கும் உரிமை அது.
அதிகாரம் செய்யும் இடங்களில் ஆட்சி செய்யும் இடங்களில் கற்றுக் கொடுக்கும் இடங்களில் என அனைத்து இடங்களிலும் பலதரப்பட்ட சமூகங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டது இட ஒதுக்கீடு. உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் உரிமை அது. அதை கேவலமாகப் பார்ப்பதோ தேவையற்றதாகக் கருதுவதோ அருவருப்பதோ தவறு. வேலை வாய்ப்புக்கு உதவுவது கல்வி. எனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரிசர்வேசன் என்பது மெரிட்டுக்கு எதிரானது எனும் வாதம் தவறானது. ரிசர்வேசன் என்பது அந்தந்த சமூகக் குழுக்கழுக்குள் ஓரளவு சமமான போட்டியை உருவாக்குகிறது. இதன் மூலம் பாரபட்சத்தை ஓரளவு கட்டுப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட முடிகின்றது. ரிசர்வேசனில் படிக்க எம்பிபிஎஸ் / பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு வந்தவர்களுக்கு அந்தப் படிப்பு படிக்கும் போது எந்த பாரபட்சமும் காட்டப்படாது. அவர்கள் அந்தந்த படிப்புகளின் கடினமான பாடங்களையும் தேர்வுகளையும் கடந்து வெற்றி பெற்று வெளியே வருகிறார்கள்.
தமிழ்நாட்டை தற்போது மருத்துவத்துறையின் முன்னோடியாக பலரும் விதந்தோதுவதற்கு ரிசர்வேசனில் பயின்று வெற்றி பெற்ற மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவ ஊழியர்களும் காரணம் என்றால் மிகையாகாது. எனவே, ரிசர்வேசன் மெரிட்டுக்கு எதிரானது என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.
இதற்கடுத்த வாதம், “பொருளாதாரம் சார்ந்த ரிசர்வேசன்”. ஒரு தலைமுறை ரிசர்வேசனை உபயோகித்துப் படித்து முன்னேறி விட்டால் அடுத்த தலைமுறை அதை உபயோகிக்கக் கூடாது என்பது போன்ற வாதங்கள். இவை அபத்தமானவை . காரணம், ரிசர்வேசனின் அடிப்படை நோக்கம் பொருளாதாரம் சார்ந்தது அன்று. மாறாக சமூக நீதியை எட்ட உதவுவதாகும். மேலும் ஒரு தலைமுறை சேர்த்த சொத்தை ஒரு நாளில் அழித்து மீண்டும் வறுமை நிலைக்கு செல்ல முடியும். உதாரணம், சமீபத்தில் கிளினிக்கில் இணைய வழியில் ரம்மி விளையாடி இரண்டு கோடி இழந்த சகோதரரைச் சந்தித்தேன். அவர் ரிசர்வேசன் உபயோகித்து படித்து கோடீஸ்வரர் ஆனார். பொருளாதார அடிப்படையில் ரிசர்வேசனை வைத்தால் இவரது மகனுக்கு மகளுக்கு ரிசர்வேசன் கிடைக்கக் கூடாது. ஆனால், இவர் சில மாதங்களில் தன் சொத்துகளை இழந்து விட்டார். இப்படி பல பேர் தொழில் செய்தும் இழந்துள்ளனர்.
சில துர்மரணங்களினாலும் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏழ்மை வந்து விடுகிறது. இதைக் காரணம் காட்டி அடுத்த சந்ததியின் அடிப்படை உரிமையை பறிக்கலாகாது. ரிசர்வேசனுக்கான நோக்கம், அனைத்து படிநிலைகளில் இருந்தும் மக்கள் – சமூக கட்டமைப்பில் பங்கேற்க வேண்டும். கல்வி பெற வேண்டும். வேலைவாய்ப்பு பெற வேண்டும். தங்களுக்குள் கற்பிக்கப்படும் செயற்கையான பேதமைகள் ஒழிய வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும். சமூக நீதி எட்டப்பட வேண்டும். அப்போது ரிசர்வேசன் தானாக ஒழியும். ஆனால், அதற்கு இன்னும் பல ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டும். காரணம் இது இருமல், சளி போல ஏழு நாட்களில் குணமாகும் நோய் அன்று.
பன்னெடுங்காலமாக நமது சமூகத்தில் இருந்து வரும் நோய் இது. ரிசர்வேசன் சமூக நீதியை எட்ட உதவும் ஒரு மருந்து. அந்த மருந்தின் தேவை நோய் இருக்கும் காலம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும். மருந்தை ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்தலாம் ஆனால் நோய் உண்டான பெரும்பான்மையினரின் உயிரைக் காக்கும் அருமருந்து அது. எனக்கு நோய் குணமாகிவிட்டது என்று கூறி மருந்து தேவையில்லை என்று ஒருவர் முடிவு செய்தால் அவரைப் பார்த்து நோய் முழுமையாக குணமாகாத ஏனையோரும் மருந்து தேவையில்லை என்று அதைத் துறப்பதால் நோய் தீர்ந்து விட்டது என்று அர்த்தமில்லை. பிரிதிநிதித்துவம் அடிப்படை உரிமை. ரிசர்வேசன் அடிப்படை உரிமை. அதை அருவருப்பதும் பகடி செய்வதும் தீண்டாமையாகும்.
ஏணியில் ஏறி வந்தோர் அதை எட்டி உதைப்பது நற்செயலன்று. அந்த ஏணியில் மேலும் பலர் ஏறி வர உதவுவதே நல்லோர் செயல். நன்றி!
– டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர், சிவகங்கை
(இது மருத்துவரின் முகநூல் பதிவு.)
தகவல்: வி.சி.வில்வம்
