ஷில்லாங், பிப்.6 மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம், தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து மாநில காவல்துறை இயக்குநர் நோங்ராங் கூறுகையில், “இதுவரை 16 உடல்களை மீட்டுள்ளோம். வெடி விபத்து ஏற்பட்ட நேரத்தில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கருதுகிறோம். வெடி விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) கடந்த 2014-இல் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்களை காரணம் காட்டி மேகாலயாவில் ‘எலி வளை’ நிலக்கரிச் சுரங்கம் மற்றும் பிற அறிவியலுக்குப் புறம்பான சுரங்க முறைகளுக்கு தடை விதித்தது.
