காங்கிரஸ் வலியுறுத்தல்!
அயோத்தி, ஜூலை 1 அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு புகார்கள் நாடு முழுவதும் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயிடம் அயோத்தி காவல்துறை அதிரடி விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது.
ராமன் கோயில் நன்கொடையில் முறைகேடு!
கடந்த ஜூன் 7 அன்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ், ராமன் கோயில் நன்கொடைகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். தொடக்கத்தில் இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய், உள் தணிக்கையில் தவறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், இவ்விவகாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு ஜூன் 13 அன்று ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்தது.
முதல் தகவலறிக்கை
இக்குழு ஜூன் 23 அன்று சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், கோயில் காணிக்கைகளைக் கையாளுதல் மற்றும் எண்ணுதல் தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) பெருமளவில் மீறப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதன் அடிப்படையில், ஜூன் 25 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரிடமிருந்து சுமார் ரூ. 80 லட்சம் ரொக்கம் மற்றும் சில வெளிநாட்டு நாணயங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ராமசங்கர் (எ) தின்னு, அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராயின் முன்னாள் ஓட்டுநர் ஆவார். விதிமுறைகளை மீறி, பல காணிக்கைப் பெட்டிகளின் சாவிகள் இவரது வசம் இருந்ததாக சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
பதவி விலகல்
மேலும், நீதிமன்ற அனுமதியுடன் மாவட்டச் சிறையில் வைக்கப்பட்டுள்ள அவினாஷ் சுக்லா என்பவரிடமும் விசா ரணை நடத்தப்பட்டது. இவரிடமிருந்து ஜூன் 5 அன்றே அறக்கட்டளை தரப்பில் ரூ.20 லட்சம் மீட்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று சம்பத் ராய் தனது பதவியிலிருந்து விலக முன்வந்த நிலையில், நேற்று (30.6.2026) அயோத்தியில் உள்ள அவரது பாரத் குட்டி இல்லத்திற்குச் சென்று காவல்துறை அதிகாரி அசுதோஷ் திவாரி வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
காணிக்கை முறைகேடு தொடர்பாக, கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டுள்ள சுமார் 400 தனியார் பாதுகாப்புப் பணியாளர்களும் தற்போது காவல்துறை விசாரணையின் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களின் பணி விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
‘‘இந்த முறைகேடு 100 கோடி இந்துக்களின் நம்பிக்கை மீதான தாக்குதல்’’ என்று காங்கிரஸ் சாடியுள்ளது!
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜ அரசுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டு களை முன்வைத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
‘‘பிறரின் செல்வத்தைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்வதும், ராமனின் பெயரை உச்சரிப்பதுமே மோடி மற்றும் அவரது சகாக்களின் ஒரே கனவு. கோயில் கட்டுமானத்திற்கான பெருமையைத் தனதாக்கிக் கொண்ட பிரதமர் மோடி, இந்தத் திருட்டிற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஆர்எஸ்எஸ்-பாஜக தொடர்புகள் காரணமாக முக்கியக் குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள்’’ என்றும், மேலும், ‘‘சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையைப் பொதுவெளியில் வெளி யிட வேண்டும்’’ என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தலைவர்கள் வீட்டுக்காவல் மற்றும்
கைது நடவடிக்கைகள்
இவ்விவகாரம் தொடர்பாக அயோத்திக்குச் செல்ல முயன்ற உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிஷோரி லால் சர்மா, ராகேஷ் ரத்தோர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஆங்காங்கே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
மறுபுறம், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் வாய்கள் ஒட்டும் நாடா மூலம் மூடப்பட்டிருப்பது போன்ற சர்ச்சைக்குரிய விளம்பரப் பலகைகளை நெடுஞ்சாலையில் வைத்ததற்காக, முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மகன் ஜெயந்த் கவுதம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஜூலை 6 இல்
அவசரக் கூட்டம்
நன்கொடைத் திருட்டு சர்ச்சை காரணமாக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோர் ஏற்கெனவே தங்கள் பதவியிலிருந்து விலகினர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, முன்னதாக திட்டமிட்ட தேதியைவிட ஒரு நாள் முன்பாகவே, அதாவது ஜூலை 6 ஆம் தேதி ராமன் கோயில் அறக்கட்டளையின் அவசரக் கூட்டம் அயோத்தியில் கூடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
